ஐபிஎல் அலப்பறை: மூக்கு மேலே ராஜா!

ஐபிஎல் அலப்பறை: மூக்கு மேலே ராஜா!
Updated on
2 min read

ஐபிஎல் கிரிக்கெட்டில் தமிழ் கமெண்ட்ரி கொடுக்க முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் தெரிந்தவர்கள் என ஒரு பட்டாளமே இறங்கியிருக்கிறது. இவர்கள் கமெண்ட்ரியின்போது வெளிப்படுத்தும் வார்த்தைகள் பலருக்குச் சிரிப்பையும் இன்னும் பலருக்கு முகச் சுளிப்பையும் ஏற்படுத்தத் தவறு வதில்லை. என்றாலும் தமிழ் கமெண்ட்ரியில் பயன்படுத்தும் சில வார்த்தைகளைக் கேட்டு சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கவும் செய்கிறார்கள். அது போன்ற வார்த்தைகளைப் பார்ப்போம்.

பச்சைப் புல் பத்திக்கிச்சு: டி20 போட்டிகள் என்றாலே அனல் பறக்கிற வடிவம்தான். ஒரு மட்டையாளர் மைதானத்தில் இறங்கி, தாறுமாறாகப் பந்தை விளாச ஆரம்பித்துவிட்டால், ‘பச்சைப் புல் பத்திக்கிச்சு’ என்கிற வார்த்தைகளைச் சொல்லிக் கத்துகிறார்கள்.

குறிப்பாக இந்த வார்த்தைகளை முன்னாள் வீரர் பத்ரிநாத்தான் அதிகம் பயன்படுத்துகிறார். ஐபிஎல் தமிழ் கமெண்ட்ரிபடி தொடக்கத்தில் பந்தைத் ‘தடவி’ விளையாடும் ஒரு வீரர், தீடீரென ‘சாத்த’த் தொடங்கிவிட்டாலும் ‘பச்சைப் புல் பத்திக்கிச்சு’ வந்துவிடுகிறது.

மூக்கு மேலே ராஜா: மட்டையாளர் அடிக்கும் பந்து மேலே சென்றால் என்ன சொல்வோம்? இது சிக்ஸரா, அவுட்டா என்றுதானே கேட்போம். ஆனால், தமிழ் கமெண்ட்ரியில் ‘மூக்கு மேலே ராஜா’ என்கிற வார்த்தைகள் வந்து விழுகின்றன. இதன் உள்ளர்த்தம் பந்து கேட்ச்சாக மாறப் போகிறது என்பதுதான்.

அதை கேட்சா அல்லது சிக்ஸரா என்று நேரிடையாகவே சொல்லிவிடலாமே... எதற்கு ‘மூக்கு மேலே ராஜா’ என்று விளிக்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்த வார்த்தைகளை முன்னாள் இந்திய அணி கேப்டன், முன்னாள் தேர்வாளர் ஸ்ரீகாந்த் என்கிற சீக்காதான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்.

மேட்சில உயிரு இருக்கா? - இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி, வெற்றி பெற தடுமாறுகிறபோது, திடீரென யாராவது ஒரு வீரர், சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் பந்துகளை விளாச நேர்ந்தால், நம் வர்ணனையாளர்களிடமிருந்து, ‘இன்னும் இந்த மேட்சில உயிரு இருக்கா’ என்கிற கேள்வி வெளிப்படுகிறது.

அந்த நேரத்தில் பந்து இன்னொரு சிக்ஸருக்குப் பறந்தால், ‘இருக்குங்க. இந்த மேட்சுல இன்னும் உயிரு இருக்குங்க’ என்று நம் உயிரே போகும் அளவுக்கு வார்த்தைகளை அள்ளிவீசி விளையாடுகிறார்கள். அப்போதெல்லாம், ‘ஏன்பா எங்க உயிரை எடுக்குறீங்கன்னு வியூவர்ஸுக்கு கேட்கத் தோணுமா, தோணாதா?.

பொட்டலம் கட்டிடுவாங்க: பொதுவாகத் தோற்கடித்துவிடுவார்கள் என்பதற்கு, ‘டின்னு கட்டிடுவாங்க’, ‘காலி பண்ணிடுவாங்க’ன்னு சொல்வதுண்டு. ஆனால், ஐபிஎல் கமெண்ட்ரியில் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. அதுக்கென்றே ஒரு வார்த்தை இருக்கிறது.

அதுதான் ‘பொட்டலம் கட்டிடுவாங்க’. குறிப்பாக நம்ம சீக்காதான் இதை அதிகமாகச் சொல்வாரு... “வியூவர்ஸ், இன்னைக்கு வேணா பாருங்க. நம்ம பசங்கப் பொட்டலம் கட்டிடுவாங்க”. பொதுவாகப் பொட்டலத்தைப் பத்தி பேசினால் உங்களுக்கு என்ன நியாபத்துக்கு வரும்? “எதே பக்கோடா பொட்டலமா?”.

டேய் மச்சான், பொளந்துகட்டுறான்: சினிமா நடிகை நமீதாவுக்குப் பிறகு ‘மச்சான்’ வார்த்தையை அதிகம் பிரபலமாக்கியது தமிழ் கிரிக்கெட் கமெண்ட்ரிதான். நம்ம சீக்கா எப்போதுமே, “‘டேய் மச்சான் ராகுலு, உன்னால நல்லா அடிக்க முடியும்டா? டேய் என்னாடா இவன் இப்படித் தடவுறான். வியூவர்ஸ் நீங்க வேணா எழுதி வெச்சுக்கங்க. இன்னைக்கு ரோஹித்து பொளந்துகட்டப் போறான்.” இப்படி வீரர்களை விளித்துப் பேசுவதில் சீக்காவை மிஞ்ச ஆள் இல்லை.

பந்து சிங்க்னு போவுது: மூச்சிரைக்க ஓடிவந்து வேகபந்துவீச்சாளர்கள் பந்து வீசும்போது, அந்தப் பந்து பேட்ஸ்மேனை ஏமாற்றிவிட்டு, விக்கெட் கீப்பரிடம் வேகமாகப் போனால், ‘பந்து என்னா ஸ்பீடு’ என்றுதான் பொதுவாக கிரிக்கெட் விளையாடுவோர் சொல்வார்கள். ஆனால், நம்ம சீக்கா, “பந்து சிங்க்னு போகுது” என்று சொல்லிவிட்டு, பக்கத்திலிருக்கும் சக கமெண்டேட்டரிடம், “பந்து எப்படிப் போவுது, சிங்க்னு போகுது” என்று சொல்லி ரீபிளே கொடுப்பார்!

தமிழ் கமெண்ட்ரியில் இப்படியான வார்த்தைகள் மட்டுமல்ல, இன்னும் பல வார்த்தைகள் அதிகம் புழங்குகின்றன. சினிமா நடிகரான ஆர்.ஜெ.பாலாஜியின் கமெண்ட்ரி வேறு ரகம். முன்பு மல்கோத்ராஜி மந்திரம். ஹூடிபாபா மந்திரம் எனப் பேசிக்கொண்டே இருப்பார்.

அதோடு சினிமா வசனங்களையும், அந்த நேரத்தில் திடீரென தோன்றும் சிரிக்க வைக்கும் வார்த்தைகளையும் பேசத் தவறமாட்டார். உதாரணத்துக்கு, எம்.எஸ். தோனி சிக்ஸர் விளாசினால், “பந்து பறந்து சென்று பல்லாவரத்தில் விழுந்தது” என்பதுபோலப் பேசி கிச்சுகிச்சு மூட்டுகிறார்.

வானொலியில் தமிழ் கமெண்ட்ரி வந்த காலத்தில், ‘பட்டாபிராமன் முனையிலிருந்து பந்துவீச்சாளர் பந்து வீசுகிறார், அளவுக்கு அதிகமாகத் தாழ்வாக வந்த பந்து, எல்லைக் கோட்டைத் தாண்டிச் சென்றது, நான்கு ஓட்டங்கள்” என்பது போன்ற தூயத் தமிழ் வார்த்தைகளுக்கெல்லாம் வேலையில்லாமல் போய்விட்டது. காலம் செய்த கோலம்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in