

ஆ
ர்ப்பரிக்கும் கங்கை ஆற்றின் நடுவே பிரமோத் மாகர் தனது ‘கயாக்’ (kayak) படகை அனாயாசமாகச் செலுத்துகிறார். ‘கயாக்’ நீர் சாகசப் பயிற்சியில் முக்கியமானவர் இவர். தற்போது ஐஸ்லாந்து நாட்டின் சுற்றுலாத் துறையில் புகழ்பெற்ற ‘ஆர்க்டிக் அட்வென்சர்ஸ்’ எனும் நிறுவனத்தில் தொழில்முறை பயிற்றுநராகப் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்துள்ளது.
வெளிநாடுகளில் மிகவும் புகழ்பெற்ற பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று ‘கயாக்’ என்கிற நீர் சாகசம். இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான உத்தராகாண்ட்டில் சுற்றுலா வருவாயைப் பெருக்குவதிலும் இந்த விளையாட்டு முக்கிய அம்சமாக உள்ளது. ஆனால், இந்த சாகச விளையாட்டு சாதாரண மக்களுக்குப் பெரிய கனவுதான். ‘கயாக்’ பயிற்சிக்காக வசூலிக்கப்படும் அதிகப் படியான கட்டணமே இதற்குக் காரணம். ஆனால், இந்த சாகச விளையாட்டை எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்த பிரமோத் மாகர், விடாமுயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றவர்.
உத்தராகாண்ட்டில் உள்ள ரிஷிகேஷ் பகுதியில் உள்ளது சிவபூரி என்னும் கிராமம். இங்கே ஒரு பாலத்துக்கு அருகே தகரங்களால் வேயப்பட்டு இருக்கிறது பிரமோத்தின் வீடு. கங்கை ஆற்றங்கரையையொட்டி பிரமோத்தின் வீடு அமைந்துள்ளதால், அவரின் இளமைக் காலம் கங்கையைச் சுற்றியே கழிந்துள்ளது. அங்கு வரும் வெளிநாட்டினருக்குச் சுற்றுலா வழிகாட்டியாகிச் சுற்றிக் காட்டுவதும் கங்கை ஆற்றில் படகு சவாரி, ‘கயாக்’ படகில் நீர் சாகசம் போன்றவற்றில் ஈடுபடுவதும் பிரமோத்தை வெகுவாகக் கவர்ந்தன.
“என் குடும்பத்தின் ஒரு மாத வருவாயை ‘கயாக்’ படகில் பயிற்சி பெறுவதற்கான ஒருநாள் கட்டணமாக வசூலிக்கிறார்கள். இதனால், நண்பர்களுடன் இணைந்து கார் சக்கரங்களில் உள்ள டியூப்களைக் கொண்டு கங்கையில் நீர் சாகசப் பயிற்சியில் முதன்முறையாக ஈடுபட்டோம். பின்னர் பல்வேறு பகுதி நேர வேலைகளில் கிடைத்த தொகையைக் கொண்டு சொந்தமாக ‘கயாக்’ படகை நண்பர்களுடன் சேர்ந்து வாங்கினேன்” என்கிறார் பிரமோத்.
சுயமாகவே ‘கயாக்’ படகில் நீர் சாகசப் பயிற்சி எடுத்துக்கொண்ட பிரமோத், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ‘கங்கை கயாக் போட்டி’யில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச ‘கயாக் பயிற்றுநர்’ என்ற சான்றிதழையும் அவரலால் சுலபமாகப் பெற முடிந்தது. கங்கை ஆற்றில் ‘கயாக்’ நீர் சாகச விளையாட்டில் ஈடுபட விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர் கற்றுத் தருகிறார். நீரில் யாராவது சிக்கிக்கொண்டால் அவர்களை உடனடியாகச் சென்று காப்பாற்றுவதற்கும் இவர் அஞ்சுவதில்லை.
“கங்கை ஆறு பாய்ந்து செல்வதைப் பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். இந்தப் பாய்ச்சலில் சாகசம் புரிவது அலாதியான ஒன்று. ஐஸ்லாந்தில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு எங்களுடைய வீட்டைப் புதிதாகக் கட்டத் திட்டமிட்டுள்ளேன். வெளிநாட்டில் வேலை கிடைத்தது மகிழ்ச்சி தந்தாலும் என்னுடைய வீட்டையும் கங்கை நதியையும் விட்டுச் செல்வது வருத்தமாகவே உள்ளது” என்கிறார் பிரமோத்.