

ஐந்து வருடங்களுக்கு முன்பு யூடியூபர், டிஜிட்டல் இன்ஃப்ளூயன்சர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டால், எதற்கு இந்த வேண்டாத வேலை என்றுதான் கேட்டிருப்போம். ஆனால், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நிலைமை தலைகீழாகிவிட்டது. சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களாக டிஜிட்டல் இன்ஃப்ளூயன்சர்களும் மாறியிருக்கின்றனர். தற்போது சிறப்பு விருந்தினர்களாக டிஜிட்டல் இன்ஃப்ளூயன்சர்கள் அழைக்கப்படும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.
கல்லூரி முடித்த கையோடு ‘போலாம் ரைட்’ என டிஜிட்டல் கிரியேட்டர் களத்தில் இறங்கும் இளைய தலைமுறையினரை அதிகம் பார்க்க முடிகிறது. குறிப்பாக பிரேசில், சீனா, இந்தியா, அமெரிக்கா, கொரியா போன்ற நாடுகளில் டிஜிட்டலைக் கையிலெடுத்துப் புகழ் வெளிச்சத்துக்குள் நுழையும் இளைஞர்கள் ஏராளம். அந்த வகையில் ‘கன்டென்ட் ஹவுஸ்’ டிஜிட்டல் உலகில் பிரபலமடைய விரும்புகிறவர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.
ஒரே குடும்பமாக... இந்தியாவில் ‘கன்டென்ட் ஹவுஸ்’கள் இன்னும் பிரபலமடையவில்லை என்றாலும், மேலை நாடுகளில் இன்ஃப்ளூயன்சர்கள் மூலம் டிஜிட்டல் ‘கன்டென்ட்’களை உருவாக்கும் ‘கன்டென்ட் ஹவுஸ்’கள் கவனம் பெற்று வருகின்றன.
திறமைமிக்க இளைஞர்களை ஒருங்கிணைக்கும் ஓரிடம்தான் இந்த ‘கன்டென்ட் ஹவுஸ்’கள். இதற்கு உதாரணமாக அமெரிக்காவைக் குறிப்பிடலாம். அங்குள்ள பிரபலமான பொழுதுப்போக்கு நிறுவனங்கள் ‘கன்டென்ட் ஹவு’ஸில் வசிப்பதற்காகத் திறமையின் அடிப்படையில் இளைஞர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. இப்படித் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் பலர், ஒரே குடும்பம்போல் பெரிய வீட்டில் தங்க வைக்கப்படுகின்றனர்.
அங்கு அவர்களின் தனிப்பட்ட திறன்கள் மேம்பட சிறப்புப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட காலப் பயிற்சிக்குப் பிறகு இந்த இளைஞர்கள் ‘டிஜிட்டல் கன்டென்ட்’களை உருவாக்கத் தொடங்குகிறார்கள்.
இன்னொரு புறம், ‘கன்டென்ட் ஹவு’ஸில் வசிக்கும் இளைஞர்களை இன்ஸ்டகிராம், டிக்டாக், ஸ்னாப் சாட் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலமடையச் செய்யும் பணியை இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பொழுதுபோக்கு நிறுவனங்கள் பொறுப்பேற்கின்றன. அதற்கு முதலீடாகக் குறிப்பிட்ட தொகையை அந்நிறுவனங்கள் செலவிடுகின்றன.
நாளடைவில் ‘கன்டென்ட் ஹவு’ஸிலுள்ள இளைஞர்கள் பிரபலடைந்த பிறகு, பிராண்ட்டுகள் மூலம் வருமானம் கிடைக்கத் தொடங்குகிறது. இதில் பெறப்படும் தொகை இன்ஃப்ளூயன்சர்களுக்குச் சம்பளமாக வழங்கப்படுகிறது. தரமான ‘கன்டென்ட் வீடியோ’க்களை வழங்கும்போது வளமான சம்பளத்துடன், புகழையும் இங்கு வசிக்கும் இளைஞர்கள் ஒருசேரப் பெறுகிறார்கள்.
என்ன செய்கிறார்கள்? - ‘கன்டென்ட் ஹவு’ஸில் 10 இளைஞர்கள் இருக்கிறார்கள் என்றால், இவர்களில் ஓரிருவர் ‘கன்டென்ட் கிரியேட்டர்’களாக இருக்கிறார்கள். சிலர் ஒரு நாளில் (காலையில் கண் விழிப்பது முதல் இரவு படுகைக்குச் செல்லும் வரை) என்ன செய்கிறார்கள் என்பதைச் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ஸாகப் பதிவிடுகிறார்கள்.
சிலர் கேமிங்கைத் தேர்வு செய்கிறார்கள், இன்னும் சிலர் நடனமாடுகிறார்கள், வித்தியாசமான ஒப்பனைகளைச் செய்துகொள்கிறார்கள், ஆதர்ச காதலர்களாக வலம் வருகிறார்கள். தத்துவம், அரசியல் பேசுகிறவர்களும் இந்த ஹவுஸில் இருக்கிறார்கள். இப்படிக் கலவையாக ‘கன்டென்ட் ஹவு’ஸிலிருந்து ‘கன்டென்ட்’டை உருவாக்குகிறார்கள். அந்த வகையில் ‘கன்டென்ட் ஹவுஸ்’ என்பது இளைஞர்களுக்கு ஒரு புதுமையான வரப்பிரசாதம்.
திறமைகளை அடையாளம் காண்பது, சுதந்திரமான மனநிலையில் செயல்படுதல், நிறைவான வருமானம் என ‘கன்டென்ட் ஹவுஸ்’ பற்றி நேர்மறையான விஷயங்கள் ஏராளம் உண்டு. என்றாலும் அங்குள்ள இன்ஃப்ளூயன்சர்கள் நாளடைவில் அவர்களுடைய ‘ஃபாலோயர்ஸ்’களுக்கு ரட்சகர்களாகவும் மாறிவிடுகிறார்கள் என்பது இதிலிருக்கும் எதிர்மறையான அம்சம்.
முதல் ‘கன்டென்ட் ஹவுஸ்’- முதல் முதலில் 2012இல் அமெரிக்க யூடியூபரான, கானர் ஃபிரான்டா என்பவர்தான் ‘our second life’ என்கிற முதல் ‘கன்டென்ட் ஹவு’ஸை உருவாக்கினார். எனினும் கரோனாவுக்குப் பிறகே ‘கன்டென்ட் ஹவுஸ்’கள் அமெரிக்கா, கனடா, பிரிட்டனில் வேகம் எடுத்திருக்கின்றன. க்ளவுட் ஹவுஸ் (Clout House), ஹைப் ஹவுஸ் (hype house), ஃபேஸ் க்ளான் ( Faze clan), ஷ்லுவ் ஹவுஸ் (Shluv House), ஐகான் ஹவுஸ் (icon house), வேவ் ஹவுஸ் (wave house) போன்றவை உலகளவில் பிரபலமான ‘கன்டென்ட் ஹவுஸ்’களாகஅறியப்படுகின்றன.
தனிநபர்கள் இன்ஃப்ளூயன்சர்களாக இயங்கு வதைவிட ‘கன்டென்ட் ஹவுஸ்’ஸில் இன்ஃப்ளூயன்சர்களாக இருக்கும் போது பிரபலம் என்கிறஅடையாளமும், ஒருவருக்கு இன்னொருவர் துணையாகஇருக்கும் வாய்ப்பும் இருப்பதால் ‘கன்டென்ட் ஹவு’ஸில் குடியேறும் இளைஞர்கள் அதிகரித்து வருகிறார்கள். இந்தியாவிலும் டிஜிட்டல் ‘கன்டென்ட் ஹவுஸ்’கள் உருவாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை!