Last Updated : 13 Apr, 2018 10:08 AM

 

Published : 13 Apr 2018 10:08 AM
Last Updated : 13 Apr 2018 10:08 AM

ஆகாயத்தில் ஒரு ஹோட்டல்!

 

நீ

ண்ட நாள் கழித்து நண்பரைப் பார்க்கும்போது,“மச்சி... வா விண்வெளி ஓட்டலுக்குப் போய் ஒரு டீ சாப்பிட்டுகிட்டே பேசுவோம்” என்று அழைத்தாலும் இனி ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஏனென்றால், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஓரியான் ஸ்பான் (Orion Span) விண்வெளியில் ஓர் அட்டகாசமான ஹோட்டலைக் கட்டப் போகிறது. விண்வெளியில் விருந்தினர்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் தயாராகிவரும் இந்த ஹோட்டல், வரும் 2021-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட உள்ளது. பின்னர், 2022-ம் ஆண்டு முதல் இந்த விண்வெளி ஹோட்டல் விருந்தினர்களை வரவேற்கத் தயாராகிவிடும்.

பூமியிலிருக்கும் நட்சத்திரச் சொகுசு ஹோட்டல்களும் ஓரியான் ஸ்பான் நிறுவனத்தின் விண்வெளி ஹோட்டலுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்றே ஒன்றுதான், புவியீர்ப்பு விசை. காரணம், பூமியில் சமைப்பதைப் போல் காஸ் அடுப்புத் தணலில் அங்கே சமைக்க முடியாது. ஏனென்றால், தீயின் செயல்பாடு புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் வித்தியாசமாக இருக்கும். எனவே, சமைப்பதில் தொடங்கி அவற்றைப் பரிமாறி, விருந்தாளிகளைச் சாப்பிட வைப்பதுவரை விண்வெளி ஹோட்டலில் பணியாற்றும் சிப்பந்திகளுக்கு எல்லாமே சவால்தான்.

இந்த ஹோட்டலுக்குச் செல்ல வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் பில்லியனராக இருக்க வேண்டும். விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் ஷாக் ஆகும் அளவுக்கு உள்ளது அதன் கட்டணம். 95 லட்சம் டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹61.60 கோடி. இந்தக் கட்டணத்தைச் செலுத்தினால் மட்டும் விண்வெளி ஹோட்டலுக்குச் சென்றுவிட முடியாது. விண்வெளிக்குச் செல்வதற்கு அளிக்கப்படும் 3 மாத பயிற்சியை வெற்றிகரமாக முடித்து சான்றிதழ் பெற்றால் மட்டுமே விண்வெளி ஹோட்டலுக்குச் செல்ல அனுமதி கிடைக்கும். அப்படி அனுமதி கிடைத்தால் 12 நாட்கள்வரை அங்கே தங்கியிருக்கலாம்.

விண்வெளி ஹோட்டலில் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 6 பேர் மட்டுமே தங்க முடியும். அதிலும் 2 பேர் ஹோட்டல் சிப்பந்திகள். எனவே, 4 விருந்தினர்களே தங்க முடியும். பூமியிலிருந்து ராக்கெட்டில் புறப்பட்டால், சுமார் 30 நிமிடங்களில் ஹோட்டலைச் சென்றடையலாம். பூமியிலிருந்து 200 மைல் உயரத்தில் சுற்றிக்கொண்டே இருக்கும் இந்த ஹோட்டல், பூமியை 90 நிமிடங்களுக்கு ஒரு முறை சுற்றி வரும். ஹோட்டலில் இருக்கும் 12 நாட்களும் விருந்தினர்கள் தினமும் 16 முறை சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்க்க முடியும்.

இதைத் தவிர்த்து அங்கிருக்கும் 12 நாட்களில் விண்வெளியில் பழங்கள், காய்கறிகளை வளர்க்கும் ஆய்வில் பங்கேற்கவும் விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். விண்வெளியில் தங்கியிருக்கும் வீரர்கள் எப்படித் தங்களின் நேரத்தை சர்வதேச விண்வெளி நிலையத்தில் செலவழிக்கிறார்கள் என்பதையும் விருந்தினர்கள் அறிய முடியும்.

‘கிராவிட்டி’ என்ற ஹாலிவுட் படத்தில் வருவதைப் போலவே, புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் அமைய உள்ள இந்த ஹோட்டலில் எல்லாமே ஸ்பெஷலாக இருக்கும் என நம்பலாம்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x