

‘கா
ற்று வெளியிடை காதலில் களிக்கலாம்!; சாதி மதம் குறுக்கிட்டால் காலால் மிதிக்கலாம்!; கொண்ட காதல் வெல்ல வேண்டும்! அதற்கு என்ன தடை வந்தாலும் கலங்க வேண்டாம் அஞ்ச வேண்டாம்! நாங்கள் உள்ளோம்!’ என்று காதலர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வரிகளுடன் காதலர் தினத்தையொட்டி சென்னையில் வெளியிடப்பட்டிருக்கிறது ‘காதல் அரண்’ செயலி. இந்தச் செயலியை ஆணவப் படுகொலையிலிருந்து மீண்டு, சமூக செயல்பாட்டாளராக இயங்கிவரும் கௌசல்யா வெளியிட்டிருக்கிறார்.
சாதி, மதத்தின் பெயரால் குடும்பத்தினரின் வன்முறையை எதிர்கொள்ளும் காதலர்களுக்கு உதவுவதற்காகத் தொடங்கப்பட்டிருக்கிறது இந்தச் செயலி. சென்னை சைதாப்பேட்டையில் இயங்கிவரும் ‘அரண்’ இயக்கம், இந்தச் செயலியை உருவாக்கியிருக்கிறது. இந்தச் செயலியை வசுமதி வசந்தி என்ற மென்பொறியாளர் வடிவமைத்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளைத் தடுக்கவே இந்தச் செயலி என்கிறார் அரண் இயக்கத்தின் நிறுவனர் வே. பாரதி. “உடுமலைப்பேட்டை சங்கரின் ஆணவக்கொலை 2016-ல் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. அந்தச் சம்பவத்தின் விளைவுதான் இந்தச் செயலி. இனி, காதலின் பெயரால் இப்படிப்பட்ட படுகொலைகள் தமிழ்நாட்டில் நடக்கக் கூடாது என்ற நோக்கத்திலேயே இந்தச் செயலியை அறிமுகப்படுத் தியிருக்கிறோம்.
அதிகாரப்பூர்வமாக இந்தச் செயலியைத் தற்போது அறிமுகப்படுத்தினாலும், கடந்த ஓராண்டாகவே சாதி மறுப்பு காதல் திருமணங்களுக்கு எங்களது ‘அரண் அமைப்பு’ ஆதரவு அளித்துவருகிறது. இதுவரை, பத்து சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தியிருக்கிறோம்” என்கிறார் அவர்.
மது ஒழிப்புச் செயல்பாட்டாளர் சசிபெருமாள் மரணம், சென்னை வெள்ளம் போன்ற சம்பவங்களின்போது ஒருங்கிணைந்து செயல்பட்டவர்கள் இணைந்து ‘அரண்’ இயக்கத்தை 2015-ல் தொடங்கியிருக்கிறார்கள். ‘ஒப்புரவு ஒழுகு’ என்ற முழக்கத்துடன் இயற்கைப் பேரிடர் மீட்பு, மரக்கன்று நடுதல், குருவி கொடை போன்ற சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளிலும் இந்த அமைப்பினர் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இருப்பவர்கள் பயன்படுத்தும்படி இந்தக் ‘காதல் அரண்’ செயலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இருபது பேர் கொண்ட குழுவுடன் இயங்கிவரும் இந்த அமைப்பு, தன்னார்வ இளைஞர்களை ஒருங்கிணைத்துச் செயல்படவிருக்கிறது.
“தமிழ்நாட்டில் எங்கிருந்து காதலர்கள் பாதுகாப்புக்காக அணுகினாலும் நாங்கள் உதவவுதற்குத் தயாராக இருக்கிறோம். இப்போதைக்கு நண்பர்கள், நட்பு இயக்கங்கள் மூலமாக இந்தப் பணிகளைச் செய்கிறோம். இந்தப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கான தன்னார்வ இளைஞர்கள் உண்மையான ஈடுபாட்டுடன் முன்வந்தால்தான் இந்தச் செயலி தொடங்கப்பட்டதன் நோக்கம் வெற்றிபெறும்.
அதனால், தன்னார்வ இளைஞர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கிறோம். சாதி மறுப்பில் உறுதியுடன் தொடர்ந்து இயங்க ஆர்வமிருக்கும் இளைஞர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம்.
சென்னையிலிருந்து இந்தப் பணிகளை ஒருங்கிணைக்க முடியாதபட்சத்தில், நாங்கள் நேரடியாக சம்பவ இடங்களுக்குச் சென்றுவிடுகிறோம். குடும்பத்தினரின் அச்சுறுத்தலை மீறி சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் காதலர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும்வரை எங்கள் கண்காணிப்பில் வைத்திருந்து அவர்களைப் பாதுகாக்கிறோம்” என்று சொல்லும் வே. பாரதி, “சிலர் இந்தச் செயலியின் நோக்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு எங்களைத் தொடர்புகொள்கின்றனர்.
சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்கள் பாதுகாப்புக்காக எங்களை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம். ஆனால், காதலுக்கு ஆலோசனை வழங்குவது எங்களுடைய பணி கிடையாது” என்கிறார்.
இந்தச் செயலியை காதலர்கள் தங்களைக் காத்துக்கொள்ள மட்டுமல்ல, மணவாழ்வை மேற்கொள்ள வாழ்வாதாரம் எதுவுமில்லை என்றாலோ, சட்ட உதவி, வழக்கறிஞர் தேவையானாலும் செயலியில் பதிவிடலாம். செயலியைப் பயன்படுத்துவோருக்கு சில நிபந்தனைகளையும் விதிக்கின்றனர். செயலியைத் தரவிறக்கம் செய்ய: https://goo.gl/LPyZJZ