

ஹாரி ஹாம்ப்லேவுக்கு 18 வயதுதான். ஆனால், அதற்குள் இணைய உலகில் முத்திரைப் பதித்து அவர் அசத்தியிருக்கிறார். அது மட்டுமல்ல; இன்ஸ்டாகிராமில் அவரை மூன்றரை லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இணையம் மூலம் அவருக்கு வருமானமும் கொட்டுகிறது. அவரது படைப்புகளைக் கண்டு ரசிக்கக் காத்திருக்கும் ரசிகர் பட்டாளமும் உருவாகி இருக்கிறது. இணையத்தில் தன் பெயரைத் தாங்கி நிற்கும் டீ-ஷர்ட்களையும் காபி கோப்பைகளையும் விற்கக்கூடிய அளவுக்கு அவர் இணைய நட்சத்திரமாக உருவாகி இருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், ஹாம்ப்லே இணையத்தில் மினி சாம்ராஜ்யத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.
கார்ட்டூனிஸ்ட்
வெறும் கார்ட்டூன்களாக வரைந்தே இந்த சாம்ராஜ்யத்தை ஹாம்ப்லே உருவாக்கியிருக்கிறார் என்பதுதான் ஆச்சர்யம். இன்ஸ்டாகிராம் அடிப்படையில் ஒளிப்படப் பகிர்வுச் செயலி என்றாலும், காட்சிரீதியான எல்லாவற்றையும் அதில் பகிரலாம். இப்படித் தான் ஹாம்ப்லே தான் வரைந்த கார்ட்டூன்களை இன்ஸ்டாகிராமில் பகிரத் தொடங்கினார். கார்ட்டூன்கள் தவிர காமிக்ஸ் கதைபோல தொடர் படங்களையும் அவர் வரைகிறார். அவரது கார்ட்டூன்களில் பீன் எனும் கதாபாத்திரம் பிரதானமாக இடம்பெறுகிறது.
இவை எல்லாம் சேர்ந்துதான், ‘கெட்னிப்ஸ்’ (ketnipz ) எனும் பெயரிலான அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பிரபலம் ஆக்கியிருக்கின்றன.
தொடக்கத்தில் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் படங்களையும் மனித உருவங்களையும் வரைவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஹாம்ப்லே. ஆனால், அவை அலுப்பூட்டவே தனது பாணியை மாற்றிக்கொண்டார். எளிதான கோடுகளோடு கேலி, நகைச்சுவை உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலான கார்ட்டூன் பாணிப் படங்களை வரையத் தொடங்கினார். அதன்போக்கில் மையப் கதாபாத்திரத்தையும் உருவாக்கினார். சிக்கலான படங்களை விட்டு, கேலிச்சித்திர பாணியிலான படங்களை வரையத் தொடங்கியது அவரது படைப்பாக்கத்துக்கு ஊக்கமாக அமைந்தது.
கார்ட்டூன்களை டிஜிட்டல் வரைபலகையில் வரைந்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார். கூடவே ட்விட்டரிலும் பகிர்கிறார். ஐந்து மணி நேரத்துக்கு மேல் செலவிட்டுப் படங்களை அவர் நேர்த்தியாக உருவாக்கிய பிறகே பகிர்கிறார். தினமும் ஒரு கார்ட்டூனாவது உருவாக்க வேண்டும் எனும் வழக்கத்தையும் ஹாம்ப்லே வைத்திருக்கிறார். நேர்த்தியாகவும் சிரத்தையுடனும் தொடர்ந்து வரைந்துவருவதால், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் கூடிவருகின்றனர்.
ஊக்கம் தரும் படங்கள்
ஹாம்ப்லே வரையும் கார்ட்டூன்கள் இந்த அளவு பிரபலமாவதற்கு முக்கியக் காரணம், அவை உண்டாக்கக்கூடிய நல்லெண்ணமே. கேலி, நகைச்சுவையைப் பிரதானமாகக்கொண்டு வரைந்தாலும் அந்தப் படங்கள் ஒரு நல்ல செய்தியை உணர்த்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. அவரது படங்கள் ஒன்று ஆறுதல் அளிக்கின்றன இல்லை ஊக்கம் அளிக்கின்றன. இதன் காரணமாகவே இன்ஸ்டாகிராம் நிர்வாகம் அவரிடம் பயனாளிகள் பயன்படுத்தக்கூடிய கருணை உணர்வுமிக்க ஸ்டிக்கர்களை உருவாக்கித் தருமாறு கேட்டிருக்கிறது.
உலகில் எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் அச்சம் அதிகமாக இருக்கும் நிலையில், மனித குலத்தின் கருணைமிக்க பக்கத்தை நினைவுபடுத்துவது அவசியமாகிறது என்று முதிர்ச்சியாக விளக்கம் தருகிறார் ஹாம்ப்லே. இணையத்தில் துவேஷமான கருத்துகளை எதிர்கொண்டாலும் தனது பாணியில் ஆக்கப்பூர்வமாகவே அதற்குப் பதில் அளிக்கிறார்.
அவரது படங்கள் பெரும்பாலும் எளிதாகப் புரிந்துகொண்டு எல்லோரும் தொடர்புப்படுத்திக் கொள்ளக்கூடியதுபோலவே இருக்கின்றன. இதனால் அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக, அமெரிக்காவில் அதிக அளவில் இருக்கின்றனர். இதற்காக அமெரிக்க நேரத்தை மனதில்கொண்டு படங்களைப் பதிவேற்றுகிறார்.
மேல்படிப்பைத் தொடராமல் வீட்டிலிருந்து வரைந்தபடியே சம்பாதிக்கும் ஹாம்ப்லே, வாய்ப்பு கிடைத்தால் எதிர்காலத்தில் அமெரிக்காவில் செட்டிலாக விரும்புவதாகக் கூறுகிறார்.
இவை எல்லாவற்றையும்விட ஆச்சர்யம் என்னவென்றால், தனது கார்ட்டூன்களுக்கு இத்தனை பெரிய அளவில் ரசிகர்கள் கிடைக்காமல் இருந்தாலே நன்றாக இருந்திருக்கும் என அவர் சொல்வதுதான். “என்னைப் பொறுத்தவரை கலை என்பது மற்ற வழிகளில் என்னால் வெளிப்படுத்திக்கொள்ள முடியாத விஷயங்களை வெளிப்படுத்திக்கொள்வதுதான்” என்கிறார் அவர். ஆனால், அதை தனது கார்ட்டூன்கள் மூலம் கச்சிதமாக அவர் செய்து வருவதே வெற்றிக்குக் காரணம்.