குளிர்கால ஒலிம்பிக்: அறியப்படாத விளையாட்டு; அசத்திய இந்தியர்

குளிர்கால ஒலிம்பிக்: அறியப்படாத விளையாட்டு; அசத்திய இந்தியர்
Updated on
2 min read

ந்தியாவில் குளிர்கால விளையாட்டுகள் இன்னும் பிரபலமாகவில்லை. அதனால், ‘குளிர்கால ஒலிம்பிக்’ பற்றியும் இந்தியர்கள் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் சார்பில் தொடர்ந்து குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்துகொண்டிருக்கிறார் ஷிவா கேஷவன். இந்தியர்களுக்குப் பெரிதும் அறிமுகம் இல்லாத ‘லூஜ்’ (Luge) விளையாட்டில் ஆறு குளிர்கால ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காகப் பங்கேற்ற ஒரே போட்டியாளர் இவர்.

தென் கொரியாவின் பியோங்சங்கில் குளிர்கால ஒலிம்பிக் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு, ஒலிம்பிக்கில் ஷிவா கேஷவன் கலந்துகொண்டதுதான் அவரது கடைசி ஒலிம்பிக். தன் 36 வயதில் ‘லூஜ்’ விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றிருக்கிறார் இவர்.

16CHGOW_SHIVA1 ஷிவா கேஷவன்

‘லூஜ்’ என்ற பிரஞ்சு வார்த்தைக்கு ‘இழுவை நகர்த்தி’(Sledge) என்று அர்த்தம். இந்த விளையாட்டின் பிறப்பிடம் சுவிட்சர்லாந்து. இந்த விளையாட்டில், தடகள வீரர்கள் பனிப்பாதையில் இழுவை நகர்த்தியில் படுத்தபடி, மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் சறுக்குவார்கள். தடுப்புக் கருவி எதுவும் இல்லாமல் பயணிக்கும் தடகள வீரர்கள், லேசாகத் தலையைத் தூக்கி எங்கே செல்கிறோம் என்று மட்டுமே பார்க்க முடியும்.

விளையாடுபவரின் துணிச்சல் மட்டுமே இந்த விளையாட்டின் அடிப்படை. இந்த விளையாட்டில் தவறுகளுக்கு இடமில்லை. வீரர்கள் தவறு செய்தால், அதற்குப் பெரிய விலைகொடுக்க வேண்டியிருக்கும். இந்த விளையாட்டை ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளில் விளையாடுகிறார்கள். இதில் ஒற்றையர் பிரிவுதான் ஷிவா கேஷவனின் சாய்ஸ்.

இமாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த ஷிவாவுக்கு இந்த விளையாட்டு அவருடைய பெற்றோர் மூலம் அறிமுகமாகியிருக்கிறது. இத்தாலியைச் சேர்ந்த அவருடைய தாயும் கேரளாவைச் சேர்ந்த அவருடைய தந்தையும் இணைந்து ஒரு சாகச விளையாட்டு நிறுவனத்தை நடத்திவந்தார்கள்.

சனாவரில் அவர் படித்த பள்ளியில் ‘லூஜ்’ விளையாட்டைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஒருமுறை சர்வதேச லூஜ் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள். ஏற்கெனவே சாகச விளையாட்டுகளால் ஈர்க்கப்பட்டிருந்த ஷிவா கேஷவனுக்கு இந்த விளையாட்டுப் பிடித்துபோனது. 1998-ம் ஆண்டில் பதினாறு வயதில் தன் முதல் ஒலிம்பிக் போட்டியில் காலடி எடுத்துவைத்தார் ஷிவா. இந்த விளையாட்டை இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் பேரார்வத்தாலும் சொந்த முயற்சியாலும் மட்டுமே தொடர்ந்திருக்கிறார் இவர்.

ஏனென்றால், இந்தியாவில் இதுவரை லூஜ் விளையாட்டை விளையாடுவதற்கான வசதி இல்லை. வருங்காலத்தில் வசதிகள் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவுதான். அதனால், ஷிவா பெரும்பாலும் வெளிநாடுகளில்தான் பயிற்சிபெற்றுவந்தார்.

அது முடியாதபோது, வேறுவழியில்லாமல் இமயமலை அடிவாரத்தின் சாலைகளில் இந்த விளையாட்டைப் பயிற்சி செய்துதான் ஒலிம்பிக்கில் பங்கேற்றார். இமயமலை அடிவாரத்தில் இந்த விளையாட்டில் இவர் பயிற்சி செய்யும் காணொலி ஒன்று தற்போது குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.

இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் ஆதரவில்லாமல் சொந்த முயற்சியால் நிதி ஆதரவைத் திரட்டி, இந்த விளையாட்டைத் தொடர்ந்துவந்திருக்கிறார் ஷிவா. மணாலியில் ஓர் இத்தாலிய உணவகத்தையும் விருந்தினர் மாளிகையையும் பகுதி நேரமாக நடத்தி தன்னுடைய ஒலிம்பிக் கனவை நனவாக்கிக்கொண்டிருக்கிறார்.

ஒலிம்பிக்கில் ஷிவா பதக்கம் வெல்லாவிட்டாலும், ஆசிய லூஜ் சாம்பியன்ஷிப் உள்பட பல போட்டிகளில் 11 பதக்கங்களை வென்றிருக்கிறார். ஒலிம்பிக்கில் முழுநேரத் தனிப்பட்ட பயிற்சியாளர் இல்லாமல், அரசின் ஆதரவில்லாமல் இந்த விளையாட்டில் இந்த அளவுக்கு இவர் சாதித்திருப்பது பெரிய விஷயம்.

வருங்காலத்தில் இந்தியாவில் ‘குளிர்கால ஒலிம்பிக்’ விளையாட்டு அறிமுகமானால், ஷிவா கேஷவன்தான் அதற்குப் பாதை வகுத்த முதல் வீரராக நினைவுகூரப்படுவார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in