டிரெண்டிங் ஹெல்மெட்டுகள்!

டிரெண்டிங் ஹெல்மெட்டுகள்!
Updated on
1 min read

விதவிதமான இரு சக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும் என்கிற ஆசை இளைஞர்களுக்கு இருப்பது போலவே, வித்தியாசமான, புதுமையான ஹெல்மெட்டுகளை அணிந்துகொண்டு வாகனம் ஓட்ட விரும்பும் இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். அந்த வகையில் உலகின் பல நாடுகளில் டிரெண்டிங்கில் இருக்கும் சில ஹெல்மெட்டுகள்:

ஸ்பைடர் ஹெல்மெட்

ஸ்பைடர்மேன் ரசிகர்களாக இருப்பவர்கள் விரும்பி அணியும் ஹெல்மெட் என்று ஒரு ஹெல்மெட் ஆன்லைனில் கிடைக்கிறது. ஸ்பைடர்மேன் தலை ஸ்டைலில் இருப்பதுதான் இந்த ஹெல்மெட்டின் சிறப்பு. இதை அணிந்துகொண்டு சாலையில் பைக்கில் வந்தால் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். சில வெளிநாடுகளில் இந்த ஹெல்மெட்டை இளைஞர்கள் விரும்பி அணிகிறார்கள். சாலையில் சீறிப் பாயும் இளைஞர்களின் சாய்ஸ் இந்த ஹெல்மெட்தானாம்.

ஸ்மைல் ஃபேஸ் ஹெல்மெட்

குழந்தைகள் வித்தியாசமான முகமூடியைப் போட்டுக்கொண்டு சுற்றுவார்கள் அல்லவா? அதுபோலவே இருக்கிறது ஸ்மைல் ஃபேஸ் ஹெல்மெட். கண், மூக்கு, வாய், சிரித்த பல் வரிசை என ஆச்சரியமூட்டுகிறது. வெளிநாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவிலும் இதற்கு வரவேற்பு இருக்கிறது. ஆன்லைனில் இந்த ஹெல்மெட்டுகள் கிடைக்கின்றன.

பயமுறுத்தும் ஹெல்மெட்

‘பிரீடேடார்’ (Predator) எனப்படும் வேட்டை முக ஹெல்மெட் கிழக்கு ஆசிய நாடுகளில் மிகப் பிரபலம். குறிப்பாகத் தாய்லாந்து நாட்டில் இந்த வகையான ஹெல்மெட்டுகளை இளைஞர்கள் அணிய விரும்புகிறார்கள். பயமுறுத்தும் தோற்றத்தில் இந்த ஹெல்மெட் இருக்கிறது. ஆன்லைன் விற்பனையில் இந்த ஹெல்மெட்டுக்குத் தனி வரவேற்பு உள்ளது.

கறுப்பு பேய் ஹெல்மெட்

இதுவும் ஒரு முகமூடி ஹெல்மெட் போன்றதுதான். சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த ஹெல்மெட்டுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்கள். பயமுறுத்தும் பேய் தோற்றத்தில் இந்த வகையான ஹெல்மெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. சாலையில் இந்த ஹெல்மெட்டை அணிந்துகொண்டு போனால் பயத்தில் பொதுமக்கள் அலறியடித்து ஓடுவது நிச்சயம்.

கிரியேட்டிவ் ஹெல்மெட்

சாலையில் ஹெல்மெட் அணியாமல் வரும் இளைஞர் ஒருவர், டிராபிக் போலீஸ்காரரிடம் இருந்து தப்பிக்க தர்ப்பூசணிப் பழத்தை ஹெல்மெட் போல் தலையில் கவிழ்த்துகொண்டு செல்லும் டி.வி. விளம்பரம் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபலம். உண்மையிலேயே தர்ப்பூசணிப் பழ ஸ்டைலில் ஹெல்மெட்டுகளும் சந்தையில் கிடைக்கின்றன. இது மட்டுமல்ல டென்னிஸ் பந்து, கோல்ஃப் பந்து, கால்பந்து, மூளை வடிவிலும்கூட கிரியேட்டிவ் ஹெல்மெட்டுகள் கஜஸ்கஸ்தான் நாட்டு இளைஞர்களிடம் பிரபலமாகி வருகின்றன.

இப்படி இன்னும் பல புதுமையான, ஸ்டைலான யூத்புல் ஹெல்மெட்டுகள் விதவிதமாக வெளிநாடுகளில் தொடர்ந்து அறிமுகமாகிவருகின்றன. இவை ஆன்லைனிலும் கிடைக்கின்றன. இருந்தாலும், நம் நாட்டுச் சட்டத்துக்கு உள்பட்டு உயிர்காக்கும் வடிவிலான ஹெல்மெட்டுகளை அணிவதே உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் நல்லது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in