

வீ
ட்டில் திருமணம் என்றாலே, வேலை வெளுத்துவாங்கிவிடும். சில மாதங்களுக்கு முன்பே வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் வேலையைப் பிரித்துக்கொண்டால்தான், திருமண நாளுக்கு முன்பாக அனைத்தையும் கச்சிதமாக முடிக்க முடியும். இப்படி அலைந்து திரியாமல் இருக்க விரும்புபவர்கள் ‘ஈவெண்ட் மேனேஜ்மென்ட்’ நிறுவனங்களைத் தேர்வு செய்கிறார்கள். இப்போது இந்தப் பாணி அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது. சென்னையை அடுத்த நாவலூரில் ‘வெட்டிங் ஸ்ட்ரீட்’டையே அமைத்திருக்கிறார்கள். அதென்ன வெட்டிங் ஸ்ட்ரீட்?
திருமணத்துக்குத் தேவையான அனைத்தும் ஒரே வீதியில் அமைக்கப்பட்டிருப்பதால் இந்தப் பெயர். சுமார் 25 ஆயிரம் சதுர அடியில் இந்த வெட்டிங் ஸ்ட்ரீட்டை அமைத்திருக்கிறார்கள். மணமக்கள் ஆடைகள், மேக்கப், மெஹந்தி, போட்டோகிராபி, டெகரேஷன், ரிட்டர்ன் கிப்ட், சாப்பாடு, இசை நிகழ்ச்சி எனத் திருமண சேவைகள் இங்கு ஒரே இடத்தில் கிடைக்கின்றன.
வெட்டிங் ஸ்ட்ரீட் முறையைப் பற்றி அதன் அமைப்பாளரான சரத்திடம் கேட்டோம். “வட இந்தியாவில் வெட்டிங் ஸ்ட்ரீட்கள் நிறைய உள்ளன. சென்னைக்கு இது புதிது. தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் விரும்பும் பாணி இது. அதனால்தான் நாவலூரில் இதை அமைத்தோம். எங்கும் அலையாமல் திருமண சேவைகளைப் பெற விரும்புபவர்களுக்கு இது உதவும்” என்கிறார் சரத்.