

படித்த பள்ளியிலேயே ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பு ஒருவருக்கு கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ, அவருடைய முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி, கல்லூரி விழாவில் சிறந்த பாடகியாக தன்னைத் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கியவருடனேயே சேர்ந்து பாடியபோது தனக்கு ஏற்பட்டது என்கிறார் ஆர்த்தி எம்.என். அஷ்வின்.
“சிறு வயதிலிருந்தே இசைப் பயிற்சி எடுத்துக்கொண்டேன். ஆனாலும், மேடைக் கூச்சம் இருந்தது. அதனால், பள்ளி அளவில் நடைபெற்ற கலைவிழாக்களில்கூட பயந்து பயந்துதான் பாடுவேன்.
ஆனால், நான் பாடினால் பரிசு கிடைத்துவிடும். பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது மாணவர்கள் மத்தியில் சில பாடல்களைப்பாடுவேன். கல்லூரி விழா பாட்டுப் போட்டியில் உடன்படிக்கும் மாணவர்கள் என் பெயரைக் கொடுத்துவிட்டு, அதன்பிறகுதான் எனக்கு அந்த விஷயத்தைச் சொல்வார்கள்.
நண்பர்களின் பெயரைக் காப்பாற்ற நன்றாகப் பயிற்சிசெய்து பாடினேன். நடுவராக வந்திருந்த பிரபலப் பாடகர் ஹரிசரண், அனைத்துக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற அந்தக் கலைவிழாவில் சிறந்த பாடகியாக என்னைத் தேர்ந்தெடுத்துப் பரிசளித்தார்.
பின்னாளில் அவருடன் இணைந்து பாலாஜி கோபிநாத் இசையில் `சாரலே' என்னும் சுயாதீனப் பாடலைப் பாடியது இன்றைக்கும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்கிறார் ஆர்த்தி.
`தத்தித் தாவும்', `முதலும் முடிவும்' போன்ற இவரின் சுயாதீனப் பாடல்கள் சமூகவலைதளங்களில் பல ரசிகர்களை இவருக்குப் பெற்றுத் தந்திருக்கின்றன. இன்ஸ்டகிராம் பக்கங்களில் பிரபலப் பாடல்களைத் தன்னுடைய பாணியில் அவற்றின் சிறப்பு குறையாமல் `கவர்' வெர்ஷ’னாக பாடி ஆர்த்தி வியக்க வைத்திருக்கிறார்.
அதோடு, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகப் பின்னணிக் குரல் அளிப்பது, விளம்பரப் படங்களுக்கு ‘வாய்ஸ் ஓவர்’ கொடுப்பது என விரிகிறது அவரின் குரலிசை.
சென்னை முழுவதும் ஆங்காங்கே பரபரப்பாக இளசுகள் கூடும் ஷாப்பிங் மால்களில் தன்னுடைய `கான்சொனன்ஸ்' என்னும் இசைக் குழுவின் மூலமாக நேரடியாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார் ஆர்த்தி. நிகழ்ச்சிகளில் இவர் சுயாதீனப் பாடல்கள் மட்டுமல்லாமல், திரையிசைப் பாடல்களையும் பாடுகிறார்.
“கர்னாடக இசையை முறையாகக் கற்றிருந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். இசைப் பள்ளியில் மேற்கத்திய இசை, இந்துஸ்தானி இசையைப் படித்து முடிக்கும்போதுதான், என்னுடைய இசையில் எனக்கு நம்பிக்கை வந்தது.
லோகேஷ் கனகராஜின் `மாநகரம்' திரைப்படத்தில் `தொல்லை செய்யும் காதல்தானா..' என்னும் பாடலைப் பாடும் வாய்ப்பை இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸ் அளித்தார். அதன்பின், `காலங்களில் அவள் வசந்தம்', `ஓ மை கோஸ்ட்' போன்ற சில திரைப்படங்களில் சில பாடல்களைப் பாடியிருக்கிறேன்.
பல விதமான இசை வடிவங்களுக்கும் இன்றைக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பல இசை சார்ந்த முயற்சிகளைச் செய்துகொண்டே இருக்கிறேன்.
இசையின் பல பரிமாணங்களையும் நான் நேசிக்கிறேன். தற்போது கன்னடம் உள்ளிட்ட பிற மொழித் திரைப்படங்களிலும் பாடுவதற்கு வாய்ப்புகள் வருகின்றன. தொடர்ந்து இசையோடு பல வடிவங்களில் நான் பேசிக்கொண்டே இருப்பேன். என்னுடைய உரையாடலின் வடிவம் பாடுவது மட்டுமே!” என்கிறார் ஆர்த்தி.