

அன்புக்குரியவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதில்கூடப் புதுமையை எதிர்பார்க்கும் காலம் இது. எனவே திருமண நாள், பிறந்த நாள், புதுமணத் தம்பதிக்கு வழக்கமான பரிசுகளை அளிப்பதை பலரும் விரும்புவதில்லை. வித்தியாசமான பரிசுகளையே விரும்புகிறார்கள்.
ஏனெனில் அந்தச் சிறப்பான தருணங்களை மேலும் சிறப்பானதாக மாற்ற இதுபோன்ற புதுமையான பரிசுகள் நினைவில் என்றும் நிலைக்க வைக்கும். அப்படிப்பட்ட புதுமையான பரிசுகளில் ஒன்றுதான் ‘மினியேச்சர்’ பொம்மை. அன்புக்குரியவர்களை பொம்மைகளாக மாற்றித் தரும் இந்தப் புதுமையான பரிசுகளைத் தேடி அலைபவர்களுக்காக உதவுகிறது சென்னையைச் சேர்ந்த ‘மை க்யூட் மினி’ (My Cute Mini).
போரூரில் உள்ள இந்த நிறுவனத்துக்குச் சென்றால் விதவிதமான மினியேச்சர் பொம்மைகள் வரவேற்கின்றன. கலையின் மீதுள்ள ஆர்வத்தால் இந்த நிறுவனத்தை நடத்திவருகிறார் ஸ்ரீ ஹரிசரண் என்கிற இளைஞர்.
கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றுள்ள அவர், ஐ.டி. நிறுவனம் ஒன்றில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். ‘மை க்யூட் மினி’ நிறுவனத்தைத் தொடங்குவதற்காகப் பணியைவிட்டு விலகியிருக்கிறார்.
பொம்மை செய்ய ஆசை: “பள்ளி, கல்லூரி நாள்களிலிருந்தே கலை, டிசைன், கிரியேட்டிவிட்டி போன்றவற்றில் ஆர்வம் அதிகம். சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது என்னுடைய நண்பர், சிற்பம் ஒன்றைச் செய்து தர முடியுமா என்று கேட்டார். அவருக்காக ஒரு சிற்பத்தை வடிவமைத்தேன்.
இந்த நிகழ்வுதான் மினியேச்சர் பொம்மை நிறுவனத்தைத் தொடங்க ஒரு தொடக்கப் புள்ளியாக இருந்தது. கடந்த 2014இல் வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் ‘மினியேச்சர்’ உருவ பொம்மைகளைத் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்க முடிவு செய்தேன். பொம்மைகளைச் செய்வதற்குச் சரியான பொருளைத் தேடிக்கொண்டிருந்தோம்.
பலகட்ட யோசனைகளுக்குப் பிறகு செயற்கைப் பீங்கான் (சிந்தட்டிக் செராமிக்) மூலம் பொம்மைகளைச் செய்யத் தொடங்கினோம். அவற்றை ஃபேஸ்புக்கில் அறிமுகம் செய்தவுடனே நல்ல வரவேற்பு கிடைத்தது” என்கிறார் ஸ்ரீ ஹரிசரண்.
வெளிநாடுகளில் இயந்திரத்தில் செய்யப்படும் ‘மினியேச்சர்’ உருவ பொம்மைகளை, இவர் கைகளால் செய்கிறார். அதனால், இவர்களுடைய தயாரிப்புகள் உயிர்ப்புடன் இருக்கின்றன. சிந்தடிக் செராமிக்கில் ஒரு பொம்மையைத் தயாரிக்க 10 நாள்கள் வரை எடுத்துக்கொள்கிறார்.
உடனடியாகப் பொம்மையைக் கேட்பவர்களுக்கு பாலி ரெசின் மூலம் செய்யப்படும் மினியேச்சர் பொம்மைகளைப் பரிந்துரைக்கிறார். மினியேச்சர் பொம்மையைப் புதுமணத் தம்பதிக்குப் பரிசாக அதிகம் கொடுக்கிறார்கள். இதைத் தவிர திருமண நாள், பிறந்த நாள், வேலையிலிருந்து ஓய்வு பெறும் நாள், காதலர் தினம் போன்ற முக்கிய நாள்களில் உருவ பொம்மையைப் பரிசாகக் கொடுக்க ஸ்ரீ ஹரிசரணை அணுகுகிறார்கள்.
மணமக்கள் பொம்மைகள்: இந்த மினியேச்சர் பொம்மைகள் எந்தெந்த வடிவில் கிடைகின்றன? “மினியேச்சர் உருவ பொம்மையைச் செய்ய விருப்பமானவர்களின் ஒளிப்படங்களைக்கொடுத்தால் போதும். முகம் நன்றாகத் தெரியும்படி இருக்க வேண்டும். வெவ்வேறு கோணத்தில் உள்ள ஒளிப்படங்களைக் கொடுத்தால் இன்னும் கொஞ்சம் சுலபமாக இருக்கும். 7 அங்குலம், 9.5 அங்குலம், 1 அடி என மூன்று விதமான அளவுகளில் பொம்மைகளைச் செய்கிறோம்.
பெரும்பாலும் மணமகன், மணமகள் உள்ளிட்ட விதவிதமான பொம்மைகளைப் பலரும் விரும்பி வாங்குகிறார்கள். காதலர் தினத்துக்கான பரிசு பொம்மைகளைச் செய்ய நவம்பரிலிருந்தே ஆர்டர்கள் வந்துவிடும். பொம்மையின் விலை 3,500 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உள்ளது” என்கிறார் ஸ்ரீ ஹரிசரண்.
தற்போது ஆன்லைன் சேவை அதிகரித்து விட்டதால், இவருடைய மினியேச்சர் பொம்மைகளுக்கு இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்தும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும்கூட ஆர்டர்கள் வருகின்றன. “ஆன்லைன் சேவை பெருகிவிட்டதால் பலரும் எங்களுடைய ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பக்கங்களைப் பார்த்துவிட்டு அழைக்கிறார்கள்.
குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அழைப்புகள் வருகின்றன. ஆன்லைன் மூலமும் ஆர்டர்கள் கிடைப்பதால் மினியேச்சர் பொம்மை செய்யும் நிறுவனத்தைச் சென்னையைத் தவிர்த்து பிற இடங்களில் அமைக்கும் எண்ணம் எழவில்லை. ஆன்லைன் வழியாகவே எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கிறது” என்கிறார் ஸ்ரீ ஹரிசரண்.
அழகான மினியேச்சர் பொம்மைகளைக் காண: https://www.facebook.com/MyCuteMini/