

சொ
ந்தக் கிராமத்தை மறந்துவிட்டு நகரங்களிலேயே இளைஞர்கள் செட்டிலாகும் காலம் இது. அப்படிக் கிராமத்தைவிட்டுப் போன இளைஞர்கள், தங்கள் கிராமத்தில் மூடிக்கிடந்த பள்ளிக்கூடத்தை டிஜிட்டல் பள்ளிக்கூடமாக மாற்றிக் காட்டியிருக்கிறார்கள். இது நடந்திருப்பது, மகாராஷ்டிரா மாநிலம் பிம்பிரி கிராமத்தில்.
படித்து முடித்த பிறகு பிம்பிரி கிராமத்திலிருந்து வேலைவாய்ப்புக்காகச் சென்ற இளைஞர்கள்தாம் இவர்கள். இத்தனைக்கும் பெரிய வேலைகூடக் கிடையாது. கிடைக்கும் சிறு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இளைஞர்கள்தாம். பள்ளிக்கூடம் மூடப்பட்டதால், தங்கள் கிராமத்திலிருக்கும் சிறுவர், சிறுமியர் படிப்பதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பதை அறிந்து வேதனை அடைந்தனர்.
கிராமத்தைவிட்டு சென்றுவிட்டாலும், தங்கள் கிராமத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, சமூக வலைத்தளத்தில் இதற்காக ஒரு முயற்சியை முன்னெடுத்தனர் இந்த இளைஞர்கள்.
‘யாருக்காகவும் அல்ல, நமது பிம்பிரி கிராமத்தின் நலனுக்காக’ என்ற வாசகத்துடன் முயற்சியைத் தொடங்கினர்கள். சமூக வலைத்தளம் மூலம் எங்கெங்கோ இருந்த அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 60 இளைஞர்கள் சங்கமித்தனர். கை நிறைய சம்பாதிக்காவிட்டாலும், சொந்தக் கிராமத்தின் நலனுக்காக பிம்பிரி இளைஞர்கள் தங்கள் கையில் கிடைத்த பணத்தை அன்பளிப்பாகக் கொடுத்தனர். ஒரு வாரத்துக்குள் போதிய அளவு நிதி கிடைத்தது.
நிதி கிடைத்தவுடன், பிம்பிரி கிராமத்தில் ஒன்றுகூடிய இளைஞர்கள், 3 நாட்கள் அங்கேயே தங்கியிருந்து, பள்ளியைச் சீரமைத்தனர். தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் டிஜிட்டல் வகுப்பறைகளையும் தயார் செய்தனர். இதைத் தொடர்ந்து பிம்ப்ரியில் மீண்டும் அந்தப் பள்ளி செயல்படத் தொடங்கியது.
அங்குள்ள சிறுவர், சிறுமியர் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கூடம் சென்றுவருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்புவரை தங்கள் ஊரில் பள்ளியே இல்லை என்ற நிலை மாறி, தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக டிஜிட்டல் வகுப்பறை கிடைத்ததால், அவர்களின் எதிர்காலம் பிரகாசமாகி இருக்கிறது.
வசதியான வாழ்க்கை வாழவில்லை என்றாலும், எதிர்காலச் சந்ததியின் நலன் கருதி பிம்பிரி கிராமத்து இளைஞர்கள் மேற்கொண்ட சிறு முயற்சி, இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது.