

கூ
குள் டூடுல்களைக் கேள்விப்பட்டிருப்போம், பார்த்திருப்போம். மெனக்கெடாமல் எளிமையாக வரையப்படும் ஓவியங்களே டூடுல். திரைப்பட ஒளிப்பதிவாளரும் ஓவியருமான ஸ்ரீராம சந்தோஷ் முதன்முறையாகத் தனது டூடுல் ஓவியங்களைக் கொண்ட கண்காட்சியை நடத்திவருகிறார்.
இவருடைய டூடுல் ஓவியங்களின் மையக்கருத்து மிக எளிமையானது. எத்தனையோ வளர்ச்சிகள், பிரம்மாண்டங்கள் நம் வாழ்க்கையைச் சூழ்ந்துவிட்டாலும் சாதாரணம் என நாம் நினைக்கும் விஷயங்களும் எளிமையுமே தினசரி வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவருகின்றன.
‘ஹேப்பி மேன்’, ‘ஹேப்பி உமன்’, ‘ஹேப்பி லாலா’ (எல்லோருக்கும் பிடித்த உயிரினங்களில் ஒன்றான யானை) ஆகிய மூன்று கதாபாத்திரங்களும் வாழ்க்கையில் தங்களுக்கான மகிழ்ச்சியை எப்படிக் கண்டடைகின்றன என்பதுதான் இவருடைய ஓவியங்களின் மையம்.
கடந்த 14 ஆண்டுகளாக டூடுல் ஓவியங்களை இவர் வரைந்துவருகிறார். தனது சொந்த அனுபவங்களின் வெளிப்பாடாக ‘ஹேப்பி பீயிங்’ என்ற தலைப்பில் தினசரி அவர் பதிவேற்றிவந்த டூடுல் ஓவியங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
எல்லா நாளும் நல்ல நாள்தான், வாழ்க்கையை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதில்தான் அந்த நாள் அடங்கியுள்ளது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீராம் ஓவியங்களை வடித்துள்ளார்.
‘டெய்லி டோஸ் ஆஃப் ஹேப்பினஸ்’ என்ற அவருடைய டூடுல் ஓவியக் கண்காட்சி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள டிம்பிள்ஸ் ஆர்ட் கேலரியில் பிப்ரவரி 10-ம் தேதிவரை நடைபெறுகிறது. வாருங்கள் கொஞ்சம் உற்சாகம் பெற்றுத் திரும்புவோம்.