

பொ
துவாக, பட்டுப்போன மரங்கள் மீது பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், சண்டிகர் நகரைச் சேர்ந்த கவின்கலை ஆசிரியர் துள்சி ராம் பிரஜாபதிக்குப் பட்டுப்போன மரங்களைப் பார்த்தால் ஆர்வம் துளிர்த்துவிடுகிறது. பட்டுப்போன மரங்களை, கலைப் படைப்பாக மாற்றுவதில் இவருக்குக் காதல். சண்டிகரில் ஏராளமான பட்டுப்போன மரங்களைக் கலைப் படைப்பாக மாற்றி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் இவர். சாலையோர மரங்களைத் தனது கலைப் படைப்புகளுக்காக இவர் தேர்வுசெய்யும் பின்னணி இன்னும் ஆச்சரியப்பட வைக்கிறது.
துள்சி ராமின் சொந்த ஊர் ஃபரிதாபாத். தனது வீட்டில் கலைப் படைப்புகளை உருவாக்குவதற்காக மரங்களைச் செதுக்குவது இவரது வழக்கம். ஆனால், அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் மரங்களைச் செதுக்குவதால் அதிக சத்தம் வருவதாக அவரிடமே புகார் தெரிவித்தனர். அதனால், வேறு வழியின்றி கலைப் படைப்புகளுக்காக வேறு ஒரு கச்சாப்பொருளைத் தேடும் நிலை ஏற்பட்டது துள்சி ராமுக்கு. அப்போது அவருக்கு விக்யான் சாலையிலுள்ள பட்டுப்போன மரங்கள் கைகொடுத்துள்ளன.
அந்தச் சாலை வழியாகச் செல்வோர்கூடத் தொடக்கத்தில் துள்சி ராமைக் கண்டுகொள்ளவில்லை. நாளாக நாளாக ஒவ்வொரு பட்டுப்போன மரமும் ஒரு கதையைச் சொல்லத் தொடங்கியது.
சமூக அவலங்களுக்கு எதிரான கருத்துகளைத் தனது படைப்பில் புகுத்திய துள்சி ராமின் முயற்சிக்குக் கை மேல் பலன் கிடைத்தது. நடைப்பயணம் சென்றவர்கள் துள்சி ராமின் கலைப் படைப்புகளை ரசிக்கத் தொடங்கினர்.
இப்போது வார விடுமுறை, அரசு விடுமுறை நாட்களில் இதற்காகவே ஃபரிதாபாத்திலிருந்து சண்டிகரில் உள்ள விக்யான் சாலைக்கு வந்துவிடுகிறார் துள்சி ராம். சில மணி நேரம் தங்கி மரங்களைச் செதுக்கி, படைப்புகளை உருவாக்குகிறார். அங்குள்ள 8 பட்டுப்போன மரங்களைத் தனது படைப்புகளுக்காகத் தேர்வுசெய்த துள்சி ராம், தற்போது இறுதிக் கட்டத்தையும் எட்டியிருக்கிறார்.
பொதுவாக, பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளைத் தடுக்கும் விதமாக மரச் சிற்பங்களைச் செதுக்குகிறார் துள்சி ராம்.
சரி, பட்டுப்போன மரங்களைக் கலைப் படைப்பாக மாற்றும் தாகம் ஏற்பட்டது ஏன் என்று கேட்டால், மனிதர் மிகச் சாதாரணமாகப் பதிலளிக்கிறார்.
“பல ஆண்டு காலம் மனிதர்களுக்கு நிழலும் காற்றும் கனியும் கொடுத்த இந்த மரங்கள் கேட்பாரற்ற நிலையிலிருந்ததைப் பார்த்த போது என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
அதனால், சமூகத்துக்கு மீண்டும் பயனளிக்கும் வகையில் இந்த மரங்களை மாற்ற நினைத்தேன். அதன் பயனாகச் சமூகத்துக்கு நல்ல செய்திகளைச் சொல்லும் கலைப் படைப்புகளாக இந்த மரங்களை மாற்றத் தொடங்கினேன்” என்கிறார் துள்சி ராம்.
விக்யான் சாலையிலிருக்கும் பட்டுப்போன மரங்கள் அனைத்தையும் படைப்புகளாக மாற்றிவிட்டால், பிறகு என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கும் துள்சிராமிடம் பதில் இருக்கிறது.
“ஃபரிதாபாத்துக்கு அருகே உள்ள பிற நகரங்களுக்குச் சென்று இதே போன்ற பட்டுப்போன மரங்களைப் படைப்புகளாக மாற்றுவேன்” என்று கூறும் துள்சி ராம், “ஒரு வேளை பட்டுபோன மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினால்கூட, அதிலிருக்கும் கலைப் படைப்புகளை ஏதாவது ஒரு அரசு அலுவலகத்தில் அலங்காரப் பொருளாக வைத்துக்கொண்டாலே போதும்” என்கிறார்.