அஸ்வின் 500!

அஸ்வின் 500!
Updated on
1 min read

ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகள் என்கிற மைல்கல் சாதனையை இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார். சர்வதேச அளவில் இந்தச் சாதனையைப் படைத்த ஒன்பதாவது வீரர் அஸ்வின்.

அவருடைய 500 விக்கெட் சாதனையின் பின்னணி: இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் சாக் க்ராலியை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார் அஸ்வின்.

இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் அஸ்வின். அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளைச் சாய்த்து முதலிடத்தில் உள்ளார்.

இலங்கையின் முத்தையா முரளிதரனுக்குப் பிறகு குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது வீரர் அஸ்வின். முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் இச்சாதனையைப் படைத்தார். அஸ்வின் 98 போட்டிகளில் படைத்திருக்கிறார். இருவருமே தமிழர்கள் என்பது சுவாரசியமான தகவல்.

அஸ்வின் ஓர் ஆல்ரவுண்டரும்கூட. டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளையும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களையும் குவித்த மூன்றாவது வீரர். இப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் உள்ளனர்.

98 டெஸ்ட் போட்டிகளில் 34 முறை ஐந்து விக்கெட்டுகளையும், 8 முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஒரே இந்தியப் பந்துவீச்சாளர் அஸ்வின்.

இந்திய வீரர்களில் அதிக முறை தொடர் நாயகன் விருது பெற்ற வீரர்களில் அஸ்வினும் ஒருவர். இதுவரை 10 முறை தொடர் நாயகன் விருதைப் பெற்றுள்ளார்.

விராட் கோலி தலைமையின் கீழ் மட்டும் 55 டெஸ்ட் போட்டிகளில் 293 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர் அஸ்வின். இது ஒரு கேப்டனின் கீழ் அஸ்வின் எடுத்த அதிக விக்கெட்டுகள்.

இந்திய அணி வென்ற டெஸ்ட் போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் அஸ்வின்.

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை அதிகபட்சமாக 15 டெஸ்ட் போட்டிகளில் 12 முறை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார் அஸ்வின்.

தனது 500 டெஸ்ட் விக்கெட்டுகளில் 251 வலக்கை மட்டையாளர்களையும் 249 இடக்கை மட்டையாளர்களையும் அஸ்வின் வீழ்த்தியிருக்கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in