

ஒ
ரே ஒரு வைரல் வீடியோ மூலம் ஓவர் நைட்டில் ஒபாமாவாக மாறியிருக்கிறார் மலையாள இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.
இணைய உலகைக் கடந்த ஆண்டு கலக்கோ கலக்கெனக் கலக்கியது ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல். இந்திய ஃபேஷன் டிசைனர் மாணவிகள் இந்தப் பாடலுக்கு ஆடிய நடனம் எக்குத்தப்பாக வைரல் ஆனது. குறிப்பாக, இந்தப் பாடலுக்கு நடனமாடிய ஷெரில் புகழ் வெளிச்சத்தில் மிதந்தார். இப்போது கேரளாவிலிருந்து மீண்டும் ஒரு பாடல் மூலம் அறிமுக நடிகை பிரியா பிரகாஷ் இணைய உலகைப் புரட்டிப்போட்டிருக்கிறார்.
புது முகங்கள் நடித்துள்ள ‘ஒரு அடர் லவ்’ என்ற படத்தில் பிரியா பிரகாஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ‘மணிக்ய மலரய பூவி...’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலில் தோன்றும் நடிகை பிரியா பிரகாஷ், புருவ அசைவிலும் கண்ணசைவிலும் சைகை மொழியில் பாய் ஃபிரெண்டுடன் பேசியிருப்பார். இந்தக் காட்சிகள் அடங்கிய பாடல் சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினரால் யூடியூபில் வெளியிடப்பட்டது.
வெளியிடப்பட்ட ஓரிரு நாட்களிலேயே இந்தப் பாடலை சுமார் 2 கோடிப் பேர் பார்த்துள்ளனர். இதனால் இந்தப் பாடல் இணைய உலகில் வைரலானது. இன்ஸ்டாகிராமில் மட்டும் 17 லட்சம் பேர் ஒரே நாளில் இந்தப் பாடலைப் பார்த்துள்ளனர். இது புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் இன்ஸ்டாகிராமில் பிரியா பிரகாஷைப் பின்தொடர்வோர் எண்ணிக்கையும் 6 லட்சமாக அதிகரித்தது.
பாடலும் நடிகை பிரியா பிரகாஷும் பிரபலமானதோடு முடிந்துவிடவில்லை. நடிகை பிரியா பிரகாஷின் புருவ அசைவை வைத்து அநேக மீம்களும் உலவத் தொடங்கியிருக்கின்றன. புருவ அசைவை வைத்து ‘காதலர் தின’ மீம்களைப் பலரும் உலவவிட்டனர். குறும்புக்கார மீம்ஸ் கிரியேட்டர்கள் விஜயகாந்தின் புருவ அசைவுகளுக்கு பிரியா பிரகாஷ் பதில் தருவதுபோல வெளியிட்ட வீடியோவும் ஹிட் ஆனது.
அத்தோடு நிற்காமல், இவரின் எக்ஸ்பிரெஷன்களுடன் பிரதமர் மோடியை வைத்தும் இளைஞர்கள் வெளியிட்டுள்ள மீம்ஸ்களும் வீடியோ வெர்ஷன்களும் இணைய உலகில் தீயாய்ப் பரவிவருகின்றன.
‘ஜிமிக்கி கம்மல்’ போலவே இந்தப் பாடலும் பிரியா பிரகாஷ் புண்ணியத்தால் மெகா ஹிட் ஆகியிருப்பதால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம். கேரளாவுக்கும் இணைய வைரல் உலகுக்கும் ஏதோ ஒரு மறைமுகத் தொடர்பு இருக்கும்போல!