

உலகில் காதலர்கள் இல்லாத நாடுகள் இல்லை. அதுபோலவே விநோத நம்பிக்கைகள் இல்லாத காதலர்களும் இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் காதலர்கள் பலவிதமான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றனர். ‘காதலர் தினம்’ நெருங்கிவிட்ட நிலையில், காதலர்களின் நம்பிக்கைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
காதல் பூட்டு: பாரம்பரிய இடங்கள் தொடங்கி மரங்கள் வரை காதலர்கள் தங்கள் பெயரைப் பொறிப்பது காலங்காலமாகச் செய்வதுதான். ஆனால், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பூட்டை வைத்துத் தங்கள் காதல் நம்பிக்கையை வளர்க்கின்றனர். பாரீஸ் நகரில் சியன் என்கிற நதி உள்ளது.
இந்த நதியின் மீதுள்ள பான்ட்டெஸ் ஆர்ட்ஸ் நடைபாலம் காதல் பூட்டுகளைச் சுமந்துகொண்டிருக்கிறது. இந்தப் பாலத்தில் உள்ள பக்கவாட்டுக் குறுக்குக் கம்பங்களில் காதலர்கள் பூட்டுப் போடும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 2008இலிருந்துதான் இந்த நூதனப் பழக்கம் தொடங்கியிருக்கிறது. ஐரோப்பிய எழுத்தாளர் பெடிரிகோ மொக்கியா, 2006இல் எழுதிய ‘ஐ வாண்ட் யு’ என்கிற நாவல் ஏற்படுத்திய தாக்கத்தால் இந்தப் பழக்கம் காதலர்களிடம் தொற்றிக்கொண்டிருக்கிறது.
காதலர்கள் பூட்டில் தங்கள் பெயரை எழுதி அதனைப் பாலத்தில் உள்ள கம்பத்தில் பூட்டி, சாவியை நதியில் தூக்கி எறிந்துவிடுகிறார்கள். பூட்டிய பூட்டு போல் காதலும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நம்பிக்கையைக் காதலர்கள் பின்பற்றுகின்றனர்.
இதுபோன்ற பழக்கம் பிரான்ஸில் மட்டுமல்ல, ஜெர்மனி, சீனா, செர்பியா, அமெரிக்கா, தென் கொரியா, இத்தாலி, ரஷ்யா, ஸ்லோவேனியா, செக் குடியரசு, தாய்லாந்து உள்பட பல நாடுகளிலும் ‘காதல் பூட்டு’ நம்பிக்கை நிலவுகிறது.
காதல் பட்டன்: போன தலைமுறையினர் ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்வது என்பது அவ்வளவு பெரிய காரியம். இன்றோ அது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஜப்பானில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் காதலைச் சொல்ல எளிய வழியைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். தாங்கள் விரும்பும் பெண்ணின் முன்னால் சென்று தங்கள் சட்டையின் இரண்டாம் பட்டனைக் கழற்றிக் காண்பிக்க வேண்டும்.
இப்படிச் செய்தால், ‘உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. காதலிக்க விரும்புகிறேன்’ என்று அர்த்தமாம். அந்தப் பெண்ணுக்கும் பிடித்திருந்தால், தனது சட்டையின் இரண்டாம் பட்டனைக் கழற்றித் தன் சம்மதத்தைச் சொல்வாராம். இரண்டாம் பட்டன்தான் இதயத்துக்கு அருகில் இருக்கிறது. தன் மனதைத் திறந்து காட்டுவதற்கு இது சமமானதாம். நல்லவேளை, காதலிக்காக நெஞ்சைப் பிளந்து இதயத்தைத் தர வேண்டிய அவசியம் இல்லை.
காதல் கரண்டி: பிரிட்டனில் வேல்ஸ் பகுதியில் காதலைச் சொல்ல அந்தக் காலத்தில் விநோதமான வழக்கம் ஒன்றைப் பின்பற்றியிருக்கிறார்கள். ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணைப் பிடித்துவிட்டால் உடனே அவர், மர உளி, சுத்தியல், ரம்பம் எல்லாம் வாங்கிவிடுவாராம்! காதலைச் சொல்ல உடனடியாக ஒரு தச்சுத் தொழிலாளியாக மாற வேண்டும். அப்படி மாறி அவர் கரண்டி ஒன்றைச் செய்ய வேண்டும்.
அதற்கு ‘காதல் கரண்டி’ என்று பெயர். கரண்டி என்றதும், நம் வீட்டுச் சமையலறைகளில் பயன்படுத்தும் கரண்டி என்று நினைத்துவிட வேண்டாம். மிகவும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட கரண்டி அது. காதலர் தானே செய்து இந்தக் கரண்டியை விரும்பும் பெண்ணிடம் கொடுப்பாராம்.
இப்படிக் கொடுத்தால் அந்தப் பெண்ணைத் தனக்குப் பிடித்திருக்கிறது; அவளைக் காதலிக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம். நவீன காலத்தில் இந்த வழக்கம் வேல்ஸில் இப்போது நடைமுறையில் இல்லை. ஆனால், காதலர் தினத்தையொட்டி காதல் கரண்டிகள் அலங்காரப் பொருளாகக் கடைகளில் கிடைப்பது நடைமுறையில் இருக்கிறது.
காதல் சாக்லெட்: காதலர் தினத்தில் சாக்லெட்டுகளுக்குத் தனி இடம் உண்டு. நம்மூரில் காதலை வெளிப்படுத்த காதல் அட்டைகளுடன் சாக்லெட்டுகளும் இடம்பிடிக்கும். ஜப்பானில் சாக்லெட்டைக் கொடுத்தே காதலை வெளிப்படுத்துகிறார்கள். ஜப்பானில் ஓர் இளம்பெண் தன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கடை சாக்லெட்டைத் தந்தால், அது காதல் இல்லையாம்.
ஆனால். வீட்டில் தயாரித்த சாக்லெட்டை மறைத்து எடுத்துக்கொண்டு யாரிடமாவது கொடுத்தால் அது நிச்சயமாக காதல்தானாம். வீட்டில் தயாரித்த சாக்லெட்டைப் பரிசாகப் பெறுபவர் அதிர்ஷ்டசாலி. ஆமாம். அவர் அந்தப் பெண்ணின் காதலர் ஆகிவிடுவார்.
ஆனால், அந்தப் பெண்ணின் காதலை வீட்டு சாக்லெட்டைப் பரிசாகப் பெற்றவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா? அதற்கு அவர் இதயத்துக்கு அருகில் உள்ள சட்டையின் இரண்டாவது பட்டனைக் கழற்றிக் காட்ட வேண்டும்!
காதல் இலை: இங்கிலாந்தில் காதலர் தினத்துக்கு முந்தைய தினமான பிப்ரவரி 13 இரவு அன்று இளம்பெண்கள் தலையணையில் ஐந்து இலைகளை வைத்து உறங்குவார்களாம். அதுவும் பிரியாணி இலைகள். தலையணையின் நான்கு மூலைகளிலும் நடுவிலும் பிரியாணி இலைகளை இளம் பெண்கள் வைக்கிறார்கள்.
இப்படித் தூங்கினால் வருங்கால கணவரைப் பற்றிய கனவுகள் வரும் என்று அவர்கள் நம்புகிறார்கள். திருமணமாகாத பெண்கள் இப்படி என்றால், திருமணமானவர்கள் பிப்ரவரி 14 அன்று பரிசுகளை நிச்சயமாகப் பரிமாறிக் காதலர் தினத்தைக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் இரவு உணவை ஒன்றாக அமர்ந்து உண்டபடி காதலையும் சேர்த்தே பரிமாறிக்கொள்வார்கள்.