

சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் ரோகன் போபண்ணா. அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எய்டனுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். இதன்மூலம் 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்கிற சாதனையை போபண்ணா படைத்தார்.
இது போபண்ணா வெல்லும் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய போபண்ணா, பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். கடந்த முறை விட்டதை இந்த முறை ஆடவர் இரட்டையர் பிரிவில் சாதித்துவிட்டார்.
ஏற்கெனவே 2017இல் பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும்கூட. அது மட்டுமல்லாமல், 24 முறை ஏடிபி டூர் இரட்டையர் பட்டங்களை வென்றிருக்கிறார் போபண்ணா. தற்போது ஏடிபி இரட்டையர் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தையும் போபண்ணா பிடித்திருக்கிறார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த போபண்ணா டேவிஸ் கோப்பை, ஹோப்மேன் கோப்பையிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். வயது கூடும்போது டென்னிஸ் விளையாட்டில் சர்வீஸ்களின் வேகம் குறைந்துவிடும். ஆனால், 40 வயதுக்கு முன்பு எப்படி போபண்ணா விளையாடினாரோ, அதுபோலவே இப்போதும் விளையாடி வருகிறார். போபண்ணா பெற்ற வெற்றிகள் பலவும் 35 வயதுக்குப் பிறகே வந்தவை. இதன்மூலம் அவருக்கு வயதாகிவிட்டது என்கிற வாதத்தையும் தூள்தூளாக்கியிருக்கிறார்.
சென்னைப் பையன்: போபண்ணா சாதித்தது போலவே, ஆஸ்திரேலிய ஓபன் காது கேளாதோர் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த பிரித்வி சேகர் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். 2023இல் ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் ஹங்கேரியின் கபோர் மாத்தேவிடம் பிரித்வி தோல்வியடைந்தார்.
ஆனால், இந்த முறை கபோர் மாத்தேவை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டு பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் கடந்த ஆண்டு அடைந்த தோல்விக்குப் பதில் சொல்லியிருக்கிறார். ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற நிலையில், இரட்டையர் பிரிவில் இரண்டாமிடத்தையும் அவர் பெற்றார்.
கடந்த 2017இல் நடைபெற்ற டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் டென்னிஸில் ஒரு பதக்கம் வென்றிருந்த பிரித்வி சேகர், 2022இல் மூன்று பதக்கங்களை வென்று டென்னிஸ் பயணத்தில் அழுத்தமான தடத்தைப் பதித்தார். தற்போது 30 வயதாகும் பிரித்வி சேகர் இந்திய ரயில்வே அணியின் ஓர் அங்கமாகவும் உள்ளார்.
செவித்திறன் குறைபாடு உள்ள பிரித்வி 8 வயதில் டென்னிஸ் பயணத்தைத் தொடங்கினார். டென்னிஸ் மீதிருந்த தீராக் காதலை அறிந்துகொண்ட அவருடைய பெற்றோர் சேகர் - கோமதி இருவரும் பிரித்வியை ஊக்கப்படுத்தி டென்னிஸ் விளையாட்டில் மெருகேற்றினர்.