

ந
ம்மூரில் அரசியல் நிகழ்வுகளையும் அரசியல்வாதிகளையும் கேலிச் சித்திரமாக வரைகிறார்கள் அல்லவா? அது போலவே ஜெர்மனியிலும் உலக அரசியல் தலைவர்களை நையாண்டி செய்கிறார்கள். ஆனால், இது ஒரு திருவிழாவாக நடப்பது நையாண்டிக்குப் பெருமை சேர்க்கிறது. அந்தத் திருவிழாவின் பெயர் ‘ரோஸ் திங்கள்’.
ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தைத் தொடங்கும் நாளுக்கு முந்தைய நாள் இந்த விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்தத் திருவிழாவில் கலந்துகொள்ளும் இளைஞர்கள், பொதுமக்கள் அரசியல் தலைவர்களைப் பொம்மைகள்போல் செய்து நையாண்டி செய்தபடி வருகிறார்கள். அப்படி வருபவர்களும் தங்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்கள்போல ஒப்பனை செய்துகொண்டு வருவது பார்ப்பவர்களை வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும்.
திருவிழாவுக்காக வடிவமைக்கப்படும் உலக அரசியல் தலைவர்களின் கேலிச் சித்திரப் பொம்மைகளைப் பார்க்கவே உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஜெர்மனியில் குவிந்துவிடுகிறார்கள். அண்மையில் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தும் 74 வகையாகன கேலிச் சித்திர பொம்மைகள் இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் இடம்பெற்றன.