

‘கிரேட்னஸ் இஸ் ஆன் அடிக்ஷன்’ என்பார்கள் ஆங்கிலத்தில். எந்த ஒரு துறையிலும் உயரத்தை அடைவது ஒரு போதை. அதற்கு அடிமையாகிவிட்டவர்களை, அவர்களாகவே விழுந்தால் அன்றி, கீழே கொண்டுவருவது சிரமம். டென்னிஸ் விளையாட்டைப் பொறுத்தவரை, ரோஜர் ஃபெடரரை இனி யாராலும் கீழே இழுத்துவர முடியாது என்றுதான் தோன்றுகிறது!
1,144 போட்டிகள், 20 மேஜர் பட்டங்கள், 97 கரியர் பட்டங்கள். இவை அத்தனையும் 36 வயதுக்குள் அடைந்துவிட்டார். அதுவும் ஒற்றையர் பிரிவு போட்டிகளில்! இப்போது ஏ.டி.பி. தரவரிசையில் மீண்டும் நம்பர் 1 இடம். முதலிடத்தைப் பிடித்திருக்கும் மிகவும் வயதான வீரர் என்ற பெருமையுடன், வரலாற்றில் நீக்கமற இடம்பிடித்துவிட்டார் ஃபெடரர்.
36 வயதில் வேறு எந்த விளையாட்டிலும் வீரர்கள் இருக்கலாம். ஆனால், ரோஜர் ஃபெடரரைப் பொறுத்தமட்டில், இது ஒரு மறுபிறப்பு. காரணம், 2013 முதல் 2016-ம் ஆண்டுவரை அவர் ஒரு முக்கிய பட்டம்கூட வெல்லவில்லை. ‘ஃபெடரருக்கு இனி ஃபுல் ஸ்டாப்’ என்று முடிவுரை எழுதத் தொடங்கியது டென்னிஸ் உலகம்.
நேர்த்தியும் கலைத்திறனும் கலந்த விளையாட்டு ரோஜருடையது. அவர் விளையாடுவதைப் பார்த்தால், ‘அடடா, ரொம்ப ஈஸியா இருக்கும் போலையே!’ என்று எண்ணத் தோன்றும். ஆனால், அந்த நேர்த்திக்கும் கலைத்திறனுக்கும் பின்னால் இருக்கும் உழைப்பு அசாதாரணமானது. உடல் வலிமையைவிட, டென்னிஸ் விளையாட்டின் மீது அவருக்கு இருக்கும் அலாதி விருப்பம் மிக அதிகமானது, அடர்த்தியானது. அதுதான் அந்த முற்றுப்புள்ளியை ‘கமா’வாக மாற்றியது.
ஃபிட்னஸ், டென்னிஸ் ராக்கெட், பந்தை எதிராளியிடம் திருப்பும் ஃபோர்ஹேண்ட், பேக்ஹேண்ட் உத்திகள் (தனது ஃபோர்ஹேண்ட் உத்தியை மாற்றியதால் தனது பரம வைரியாகக் கருதப்படுகிற ரஃபேல் நடாலைக் கடந்த ஆண்டில் மட்டும் தொடர்ந்து நான்கு முறை தோற்கடித்தார்) என ‘மேஜர் டைட்டில்’ வெல்லாத அந்தக் காலகட்டத்தில் தனக்கு நெகட்டிவாக இருந்தவற்றை பாசிட்டிவாக மாற்றி, தோல்விகளிலிருந்து மீண்டு வந்தார் ஃபெடரர்.
‘புல் மைதானங்களின் அரசன்’ என்று ஃபெடரர் புகழப்படுவது உண்டு. என்றாலும், களிமண் மற்றும் ‘ஹார்ட் கோர்ட்’ என்று சொல்லப்படுகிற கான்கிரீட் மைதானங்களிலும் விளையாடி கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நான்கு வீரர்களில் ஃபெடரரும் ஒருவர். எனினும், காயமடைந்த தன் கால் மூட்டுகளுக்கு அவ்வளவாக வேலை வைக்காத மைதானங்களைத் தேர்வுசெய்து விளையாடும் திட்டமிடல், ஃபெடரரின் புத்துயிர்ப்புக்கு இன்னொரு காரணம் என்றும் சொல்லலாம்.
ஜெயித்துக்கொண்டே இருப்பதும், சாதனைகள் செய்துகொண்டே இருப்பதும் ஒரு கட்டத்தில் பலருக்கும் அலுத்துவிடும். குறிப்பாக, விளையாட்டு வீரர்களுக்கு. கார் ரேஸ் வீரர் ஷுமேக்கர் அப்படித்தான் போட்டிகளிலிருந்து விலகினார். கிரிக்கெட்டில் அப்படி நிறைய வீரர்களைச் சொல்லிவிட முடியும்.
டென்னிஸ் விளையாட்டிலும் அப்படியான நபர்கள் உண்டு (2004-ல் ஃபெடரர் முதன்முறையாக முதலிடம் பெற்றபோது இருந்த இதர ‘டாப் 10’ வீரர்கள் அனைவரும் தற்போது ஓய்வுபெற்றுவிட்டார்கள்!). ஆனால், ரோஜர் ஃபெடரர் விதிவிலக்கு. காரணம், அவர் வெற்றிகளையோ சாதனைகளையோ துரத்தவில்லை. தனது விளையாட்டை இன்னும் மெருகேற்ற வேண்டும் என்ற பேரார்வம்தான் ஃபெடரரை இன்றும் மைதானத்தில் இயங்கச் செய்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், ‘கற்றுக்கொள்வதை நிறுத்திக்கொள்ளும்போது நாம் (விளையாட்டில்) முதுமை அடைகிறோம்’ என்பார்கள். 30 வயதுக்குப் பிறகு பலரும் ஓய்வுபெற விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் முதுமையடைந்துவிடுகிறார்கள். ஃபெடரரோ, இன்னும் விளையாட ஆசைப்படுகிறார். ஒவ்வொரு முறையும் மைதானத்துக்குள் நுழையும்போதும் புதிதாகக் கற்றுக்கொள்ள நினைக்கிறார். அதனால்தான் அவர் என்றும் இளமையாக இருக்கிறார். அப்படிப் பார்த்தால், தற்போது ஃபெடரரின் தரவரிசை எண்தான், அவருடைய வயதும்!