

“உ
னக்கு வரப்போற பையன் என்ன பாடுபடப் போறானோ?”- இந்த வசனம் திரையில் ஒலிக்கும்போது அரங்கில் வெடித்துக் கிளம்பியது சிரிப்பலை. தன்பால் உறவாளரான தன்னுடைய மகனுக்கு ஆதரவாக அவரது அம்மா பேசும் இந்த வசனம் லோகேஷ் எழுதி இயக்கியிருக்கும் ‘என் மகன் மகிழ்நன்’ படத்தில் இடம்பெற்றிருக்கும். காதல் ஜனநாயகமானது. ஆனால் காதலர்கள்? ‘காதலர் தினம்’ கொண்டாடப் பலரும் காத்திருக்கும் இந்தத் தருணத்தில் தங்களின் காதல் அனுபவங்களைப் பகிர்கிறார்கள் திருநங்கைகளும் தன்பால் உறவாளர்களும்:
“‘சகோதரன்’ அமைப்பில் தன்னார்வலராக இருக்கிறேன். என்னுடைய காதல் கணவர் ஜுஜு பாய். நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். அவர்தான் முதலில் என்னிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். அவர்கள் வீட்டில் முழுமனதாக ஏற்றுக் கொண்டவுடன் திருமணத்தைப் பதிவுசெய்ய இருக்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சில ரவுடிகள் என்னுடைய தலையில் கல்லைப் போட்டதால், 32 தையல் போடும் அளவுக்குப் பெரிய காயம் ஏற்பட்டது. நான் கோமா நிலைக்குப் போய்விட்டேன்.
நான் முழுமையாகக் குணமாகும்வரை என்னுடனேயே அருகில் இருந்து கவனித்துக்கொண்டார். என்னுடைய திருநங்கைத் தோழிகள் மூலமாக அவர் எனக்காக அழுததையும் பரிதவித்ததையும் தெரி்ந்துகொண்டேன். நமக்கு ஒரு சோதனை வரும்போதுதான் யார் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பது தெரியும். அதன் பிறகு, அவர் மீதான பாசமும் நெருக்கமும் இன்னும் அதிகரித்தது” என்கிறார் திருநங்கை பெர்ரி கண்களில் கண்ணீர் ததும்ப.
“நான் பிறந்தது திண்டுக்கல் பக்கத்தில் ஒரு சிற்றூர். சிறுவயதில் எனக்குத் தன்பால் ஈர்ப்பு இருப்பதை சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு பத்திரிகையில் படித்த கட்டுரையின் மூலமாகத்தான் என்னைப் போன்று பலர் இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு படிப்பதன் மூலமாக நிறைய உண்மைகளைத் தெரிந்துகொண்டேன். தமிழ்நாடு எல்.ஜி.பி.டி. அமைப்பில் இணைந்து, தன்பால் ஈர்ப்புள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம்.
விக்னேஷைச் சமூக வலைத்தளம் மூலமாகத்தான் சந்தித்தேன். அவர் பெங்களூருவில் பணிபுரிகிறார். முதன்முதலாக ஒரு வீடியோ கால் செய்தார். சிறிது நாட்களில் அவர்தான், “எனக்கு உன் மீது நம்பிக்கை இருக்கிறது. நான் உன்னை விரும்புகிறேன்” என்று சொன்னார். நான் அதற்குப் பதில் ஏதும் சொல்லவில்லை. சிறிது நாளில் அவருக்குப் பிறந்த நாள் வந்தது. அவருக்குக் காலையிலிருந்து போன் செய்யவில்லை.
அவர் தவிப்பு அதிகமானது. ஒரு கட்டத்தில், ‘என்னை நீ விரும்பவில்லையா...’ என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். அன்று இரவு 10 மணிக்கு நான் போன் செய்து நானும் அவரை விரும்புவதாகத் தெரிவித்தேன். எனக்காக நிறைய கவிதை எழுதுவார். என்கிட்ட வேற பசங்க சும்மா பேசுனா கொஞ்சம் ஃபீல் பண்ணுவாரு. என்மேல ரொம்ப பொசசிவ்வா இருப்பாரு. இதைப் போல சின்ன சின்ன விஷயங்கள்தான் அவர் மீதான ஈர்ப்பை அதிகமாக்கியது.
குறுந்தாடி வைச்சிருப்பான், பெண் தன்மையோடு இருப்பான், வலது காதில் கடுக்கண் போட்டிருப்பான் என இப்படித் தவறான கற்பிதங்கள் ‘கே’ குறித்து நிறைய இருக்கின்றன. எங்களைப் போன்றவர்களை குடும்பங்கள் புறக்கணிக்காமல் இருந்தால், எங்களின் வாழ்க்கை இன்னமும் அர்த்தமுள்ளதாக இருக்கும். சமூக அங்கீகாரம், குழந்தையைத் தத்தெடுத்தல் போன்ற காரணங்களுக்காகவாவது 377-வது சட்டப் பிரிவை நீக்க வேண்டும்” என அக்கறையோடு பேசுகிறார் மோகன்.
“காதல் என்னும் பெயரில் பல ஆண்கள் விதவிதமான பொய்களைக் கூறி திருநங்கைகள் பலரை ஏமாற்றியிருக்கின்றனர். பரவலாக நடக்கும் இவற்றுக்கு ஊடகங்கள் எதுவும் முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை. அவை பதிவாவதும் இல்லை. காதல் என்னும் பெயரால் உயிர் இழப்புகளை அதிகம் சந்திப்பவர்கள் திருநங்கைகள். காதல் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருந்தாலும், நானும் ஏமாற்றப்பட்டேன். எப்படியாவது என்னுடைய காதலைப் பெற வேண்டும் என்று என்னை ஒருவர் தொடர்ந்தார். நானும் அவரது ஃபேஸ்புக், நண்பர்கள் பற்றிய விவரங்களை எல்லாம் கேட்டு, சரிபார்த்தேன். முழுதாக நம்பினேன்.
ஆரம்பத்தில் தினமும் என்னைப் பார்ப்பார். மணிக்கணக்காகப் பேசுவார். அவருக்கு வேண்டியது கிடைத்ததும், நாளடைவில் என் மீதான ஈர்ப்பு குறைந்தது. அவருடைய காதல் என் மீது படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரொம்பவும் மனசு விட்டுப் போச்சு. காதல் என்னும் பெயரில் என்னை முட்டாளாக்கிவிட்டார். அதைத்தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்கிறார் முகமும் மனமும் வாடியிருக்கும் ரோஸ்.