

இ
னிப்புப் பிரியர்களின் பட்டியலில் குலாப் ஜாமுனுக்கு அடுத்த இடத்தை அனேகமாகப் பிடித்துவிடுவது ரசகுல்லாதான். சர்க்கரைப் பாகில் மிதக்கும் வெண்ணிறப் பஞ்சு போன்ற ரசகுல்லா கடந்த 150 ஆண்டுகளாகச் சுவைக்கப்பட்டுவருகிறது!
பாலாடைக் கட்டியாலான இனிப்புப் பண்டங்களைத் தயாரிப்பதில் நிபுணத்துத்துவம் பெற்ற மேற்குவங்கத்தில்தான் 1868-ல் நொபின் சந்திரதாஸ் என்பவர் ரசகுல்லாவை உருவாக்கினார். இதனால் ‘ரசகுல்லாவின் கொலம்பஸ்’ என்ற ஹாஷ்டாகுடன் அவருக்கு லைக்ஸ் குவிந்துவருகிறது! வட கொல்கத்தாவில் பாக்பஜார் பகுதியில் இன்றும் அவருடைய இனிப்புக் கடையில் கூட்டம் அலைமோதுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை வங்க இனிப்புகள் என்றாலே கே.சி.தாஸ் இனிப்பகம்தான் நினைவுக்குவரும். கே.சி.தாஸ் என்பவர் நொபின் சந்திரதாஸின் மகன் என்பதையும் ரசகுல்லா உருவான வரலாற்றையும் அந்நிறுவனத்தின் இணையதளம் நமக்குச் சொல்கிறது. சொல்லப்போனால், அறிவியல் கண்டுபிடிப்புக்கு இணையான சிக்கலும் சிரமமும் போட்டியும் ரசகுல்லா உருவான கதையில் ஒளிந்திருக்கிறது.
ஏனென்றால், பாலிலிருந்து பாலாடைக் கட்டியைப் பிரித்தெடுப்பது நெடுங்காலமாகத் தவறான உணவுப் பழக்கமாக இந்தியாவில் கருதப்பட்டுவந்தது. போர்த்துகீசியர்களிடமிருந்துதான் பாலாடைக் கட்டியைத் தயாரிக்கும் முறையை மேற்கு வங்கத்தினர் கற்றுக்கொண்டார்கள். அதுவும், சர்க்கரைப் பாகில் பாலாடைக் கட்டியைக் கொதிக்கவைத்து ரசகுல்லாவை முழுசாக வெளியில் எடுக்கப் பல வருஷம் படாதபாடுபட்டார் நொபின் என்கிறார் உணவு வரலாற்றாசிரியர் கே.டி. அச்சையா.
இத்தனை சுவையான கதை அம்சம்மிக்க ரசகுல்லா ‘நம்முடையதே’ என்ற மேற்கு வங்கத்தினரின் கொண்டாட்டத்தில் 2015-ல் குழப்பம் உண்டானது. நொபின் சந்திர தாஸின் வரலாற்றை முன்வைத்து ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீட்டை 2015-ல் கோரியது மேற்கு வங்க அரசாங்கம். வரிந்துகட்டிக்கொண்டு ரசகுல்லாவுக்கு உரிமைகொண்டாடியது ஒடிஸா அரசு.
600 ஆண்டுகளுக்கு முன்னரே ரசகுல்லாவின் முன்னோடியான ‘சென்னா பொடா’ பூரி ஜகநாதர் கோயிலில் வழங்கப்பட்டது என்று 150 பக்க ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து வாதிட்டது ஒடிசா. பி.கே. இன்டஸ்ட்ரியல் டிரெயினிங் சென்டர் என்ற ரசகுல்லா தயாரிப்புப் பயிற்சி நிறுவனத்தைக்கூடத் தாங்கள் நடத்திவருவதையும் ஆதாரமாக ஒடிஸா காட்டியது. இப்படி ஒரு இனிப்புக்கு நடந்த காரசாரமான சண்டை 2017 நவம்பரில் ‘ரசகுல்லா மேற்கு வங்கத்துக்கே சொந்தம்’ என்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்குவந்தது.
நிறைவாக, நொபின் சந்திரதாஸையும் அவர் உருவாக்கிய ரசகுல்லாவையும் கவுரவிக்கச் சிறப்பு தபால் உறையை வெளியிட இந்தியத் தபால் துறை தற்போது முடிவெடுத்திருக்கிறது. இது கூடுதல் இனிப்பான செய்திதானே!