கண்டுபிடிப்பாளரின் கதை: ஆகவே, ஏளனம் நல்லது!

கண்டுபிடிப்பாளரின் கதை: ஆகவே, ஏளனம் நல்லது!
Updated on
2 min read

ரை

ட் சகோதரர்கள் தாங்கள் கண்டுபிடித்த விமானத்தின் மூலம் நாட்டு எல்லைகளைச் சுருக்கினார்கள் என்றால், இலன் மஸ்க் அதற்கு ஒருபடி மேலே. தான் தோற்றுவித்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மூலம் கேலக்ஸியைச் (பால்வெளி) சுருக்க முயல்கிறவர் இவர். கடந்த நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் தங்கள் நாட்டவர் வசிக்க ஏற்ற இடங்களைக் கண்டுபிடிக்க வேறு கண்டங்களுக்கு எப்படி மாலுமிகளை அனுப்பினார்களோ, அதேபோல இன்று மனிதர்கள் வசிக்கத் தேவையான இடங்களைப் புதிய கிரகங்களில் தேடுவதற்கு தன் நிறுவனத்திலிருந்து விண்வெளிக் கலன்களை இலன் மஸ்க் அனுப்பிக்கொண்டேயிருக்கிறார்.

இலன் மஸ்க் பிறந்தது தென் அப்பரிக்காவில் உள்ள பிரிடோரியாவில். இலன் தன் பன்னிரண்டு வயதுக்குள்ளாகவே கணினித் துறையில் தேர்ச்சி பெற்றுவிட்டார். அதைச் சுயமாக அவர் கற்றுக்கொண்டது கூடுதல் சிறப்பு. இலன் தன் பதினேழாவது வயதில் கனடாவுக்குச் சென்று பொருளாதாரத்திலும் இயற்பியலிலும் பட்டம் பெற்றார். பின்னர் இயற்பியலில் ஆராய்ச்சிப் படிப்புக்காக ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தவர், என்ன நினைத்தாரோ ஒரு மாதத்துக்குள்ளாக மனதை மாற்றிக்கொண்டு, சுயதொழிலில் இறங்கிவிட்டார்.

அவர் முதலில் ஆரம்பித்தது ‘ஸிப்2’ எனும் நிறுவனத்தை. ஆனால், அவரிடமிருந்து அந்த நிறுவனத்தை 350 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து காம்பாக் நிறுவனம் 1999-ல் வாங்கிக்கொண்டது. அதன்பின் இலன் மஸ்க் எக்ஸ்.காம் எனும் ஆன்லைன் கட்டண நிறுவனத்தைத் தொடங்கினார். அதை இபே நிறுவனம் அவரிடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு 2002-ல் வாங்கிக்கொண்டது.

அந்தப் பணத்தைக் கொண்டு ஸ்பேஸ்எக்ஸ் எனும் விண்வெளி பயணத்துக்கான நிறுவனத்தை இலன் மஸ்க் தொடங்கினார். கண்டம் விட்டுக் கண்டம் தாக்கும் ஏவுகணைகளின் செயல்பாட்டை ஆராய்வதன்மூலம் தன் விண்வெளிப் பயணக் கனவை நனவாக்க முயன்றார். அதற்காக உபயோகத்தில் இல்லாத பழுதடைந்த ஏவுகணைகளைப் பெறுவதற்காக ரஷ்யா சென்றார்.

ஆனால், அனுபவமற்ற இலனை ரஷ்ய விஞ்ஞானிகள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அது மட்டுமல்ல; அவர்கள் கேட்ட 8 மில்லியன் டாலரும் மிகவும் அதிகம் என்று அவருக்குத் தோன்றியதால், சுயமாகவே விண்வெளி கலனைத் தயாரிக்க இலன் மஸ்க் முடிவெடுத்தார்.

அப்படித் தயாரித்த விண்கலனுக்கு இலன் மஸ்க் வைத்த பெயர் என்ன தெரியுமா? ‘பஃப் தி மேஜிக் டிராகன்’. ஒரு தொலைக்காட்சி படம் ஏற்படுத்திய தாக்கத்தால் டிராகன் என்று பெயரிட்டார். அதை விண்வெளிக்குச் சுமந்து செல்லும் ராக்கெட்டுக்கு ‘பால்கன்’ என்று பெயர் வைத்தார்.

இது ‘ஸ்டார் வார்ஸ்’ என்ற படத்தில் தாக்கம் ஏற்படுத்திய விண்கலனின் பெயர். இலன் மஸ்க் தன் நிறுவனத்தின் மூலம் இவற்றை ஏழு வருடங்களில் வடிவமைத்தார். 2008-ல் இவருடைய நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்தான் இன்றும் தனியாரால் ஏவப்பட்ட ஒரே செயற்கைக்கோள். 2012-ல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளிக் கலனை இணைத்த முதல் வணிக நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றது.

இப்போது சூரிய சக்தி, பேட்டரி மூலம் இயங்கும் கார்களைத் தயாரிப்பதில் இவரது இந்த நிறுவனம்தான் முன்னணியில் உள்ளது. மின்சார கார்களைப் பொறுத்தவரை பேட்டரியை சார்ஜ் செய்வது மிகவும் சிரமம். அந்த நடைமுறைச் சிக்கலை பெட்ரோல் நிலையங்களைப் போன்று பாட்டரி நிலையங்களை நிர்மாணித்துக் களைந்தார்.

இன்று உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 53-ம் இடத்தில் உள்ள இலன் மஸ்க், ஆரம்ப காலத்தில் மிகுந்த ஏளனத்துக்கும் அவமானத்துக்கும் உள்ளானவர். ஆனால், அவர் தன் கனவிலும் எண்ணத்திலும் உறுதியாக இருந்தால், விண்வெளி ஆராய்ச்சிக்காக நாசாவே இன்று அவருடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

காலத்தை விஞ்சிய எல்லா கண்டுபிடிப்பாளர்களும் அவர்களின் எண்ணங்களும் கனவுகளும் சாத்தியப்படும்வரை சமூத்தின் ஏளனக் கண்கொண்டே பார்க்கப்பட்டனர். சிலர் தாங்கள் கண்டுபிடித்த உண்மைகளைப் பகிரங்கமாகச் சொன்னதற்காக உயிரையும் இழந்துள்ளனர். ஆனால், அந்த ஏளனப் பார்வைளால் அச்சுறுத்தல்களால் அவர்களின் ஆர்வத்துக்குத் தடைப்போட்டுக்கொண்டதில்லை.

நிந்திக்கப்பட்டாலும் கொல்லப்பட்டாலும் ஏளனத்துக்கு உள்ளாக்கப்பட்டாலும், காலங்காலமாக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஏதாவது கண்டுபிடித்து நம் வாழ்க்கையை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு வாழும் உதாரணம் இலன் மஸ்க்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in