எங்கள் ஊர் எங்கள் குரல்!

எங்கள் ஊர் எங்கள் குரல்!
Updated on
3 min read

பத்துக்குப் பத்து சதுர அடி அளவிலான வீடுகள், குறுகலான பாதைகள், அலங்காரத் தோரணங்கள்போல் வீடுகளுக்கு இடையே காயப்போடப்பட்ட துணிகள், அங்கு இங்குமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறார்கள், ஆங்காங்கே அம்பேத்கர் படம் என வியாசர்பாடி வரவேற்கிறது.

வடசென்னையின் பிரதானப் பகுதியான வியாசர்பாடி, தமிழ்த் திரைப்படங்களில் காலங்காலமாக அடையாளப்படுத்தப்படும் காட்சிகளிலிருந்து முற்றிலும் விலகி நிற்கிறது.

கால்பந்தாட்டம், கேரம், குத்துச்சண்டை விளையாட்டுகளில் சர்வதேச அளவில் வீரர், வீராங்கனைகள் இங்கிருந்து பங்கேற்கிறார்கள். விளையாட்டு மட்டுமல்லாமல், அரசியல், கலாச்சார ரீதியாகவும் பன்முகங்களை வியாசர்பாடி கொண்டிருக்கிறது. அதை வெளிப்படுத்தும் முயற்சியாக அந்தப் பகுதி இளைஞர்களால் 2011இல் தொடங்கப்பட்ட அமைப்புதான் ’வியாசை தோழர்கள்’.

இளம் மாணவர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தைக் கொண்டுசேர்க்க ’வியாசை தோழர்கள்’ நடத்தும் ’அம்பேத்கர் பகுத்தறிவு பாடசாலை’தான் தற்போது அந்தப் பகுதி இளைஞர்களுக்கான அடையாளமாக மாறி இருக்கிறது. கல்வியுடன் நின்றுவிடாமல், மாணவர்களின் விளையாட்டு, கலைத் திறன்களை வளர்க்கும் வகையில் பல பயிற்சிகளையும் இந்த அமைப்பு வழங்கி வருகிறது.

அந்த வகையில் ஒளிப்படக் கலையில் ஆர்வமுள்ள 8 இளைஞர்களின் ஒளிப்படக் கண்காட்சி அண்மையில் நடந்து முடிந்துள்ளது. வியாசை தோழர்கள், பழனிக்குமார் ஸ்டூடியோ, சென்னை காலநிலை நடவடிக்கை குழு, பாரி ஊடகம் ஆகியவை இணைந்துதான் ’எங்கள் தெருக்கள், எங்கள் கதைகள்’ என்கிற தலைப்பில் ஒளிப்படக் கண்காட்சியை நடத்தின.

த்ரிஷா
த்ரிஷா

அடையாள அரசியல்: கண்காட்சியில் இடம்பெற்ற ஒளிப்படங்கள் கட்டிடங்கள், கடைகள், மரங்கள் மீது வைக்கப்பட்டிருந்தன. இது பார்வையாளர்களுக்குப் புதுவித அனுபவத்தை அளித்தது. தாங்கள் எடுத்த ஒளிப்படங்களை உற்சாகமாக அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த ஒளிப்படக் கலைஞர் த்ரிஷா, “கல்லூரியில் என் பெயரே வியாசர்பாடிதான். என் பேராசிரியர்களே அப்படித்தான் அழைப்பார்கள். ஆனால், சென்னையின் மற்ற பகுதி மாணவர்களுக்கு இம்மாதிரியான அடையாளப்படுத்தல்கள் இல்லை.

என் இருப்பிடம் இவர்களுக்குள் ஏதோ நெருடலை ஏற்படுத்துகிறது என்பதை நாளடைவில் புரிந்துகொண்டேன். வியாசர்பாடி என்கிற பெயரில் நடக்கும் அரசியலையும் எங்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளையும் அறிந்தேன். ’வியாசை தோழர்கள்’ அமைப்பில் சேர்ந்தேன்.

வடசென்னை மீதிருக்கும் பொது பிம்பம் மாற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். மாட்டிறைச்சி சாப்பிடுவதும், கோலிக்குண்டு விளையாடுவதும் குற்றமல்ல என்பதை உரக்கச் சொல்ல நினைத்தோம். அதன் தொடர்ச்சியே இந்த ஒளிப்படக் கண்காட்சி” என்கிறார்.

சக்திவேல்
சக்திவேல்

கல்வியே ஆயுதம்: ’வியாசை தோழர்கள்’ அமைப்பில் பல ஆண்டுகளாகப் பயணிக்கும் சக்திவேல், குழந்தைகளுக்கு கபடி உள்ளிட்ட விளையாட்டுப் பயிற்சிகளை வழங்கி வருகிறார். “இந்த அமைப்பில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள். வியாசர்பாடி என்றாலே ரவுடிகளும் தீயப்பழக்கம் கொண்ட இளைஞர்களும்தாம் இருப்பார்கள் என்கிற முன்தீர்மானத்தோடே பலரும் அணுகுகிறார்கள்.

இந்த நிலை மாறக் கல்வியே ஆயுதம் என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்கு ’வியாசை தோழர்கள்’ அமைப்பு எனக்கு உதவியது. படிப்பிலும் விளையாட்டிலும் என் முழுத்திறனை வெளிப்படுத்தி, ஆசிரியர்கள் முன் என்னை நிரூபித்தேன். அதன் பிறகே அவர்கள் என்னைப் புரிந்துகொண்டனர்.

எங்கள் பகுதி சிறார்களுக்குக் காலையிலும் இரவிலும் டியூஷன் நடத்துகிறோம். அவர்களுடைய பெற்றோரும், நாங்கள் சரியான பாதையைக் காட்டுகிறோம் என்கிற நம்பிக்கையில் ஆதரவு அளிக்கிறார்கள். இங்குள்ள சிறார்கள்தாம் எங்கள் எதிர்காலம். நாங்கள் காட்டும் பாதை அவர்களுக்கு எதிர்காலத்தில் கூடுதல் வெளிச்சத்தை அளிக்கும் என உறுதியாக நம்புகிறோம்.

வியாசை தோழர்களின் ஒளிப்படக் கண்காட்சி எங்கள் பகுதி மக்களின் வாழ்க்கையை நெருக்கமாகவும் அழகாகவும் காட்டியிருக்கிறது. இது திரைப்படங்களில் காட்டப் படுவது போன்ற வடசென்னை அல்ல. உண்மையான வடசென்னையை இந்த ஒளிப்படக் கண்காட்சி மூலம் காட்ட முயற்சித்துள்ளோம்” என்கிறார் சக்திவேல்.

பழனிக்குமார்
பழனிக்குமார்

உழைக்கும் மக்களின் வரலாறு: சமூகப் பிரச்சினைகளைத் தொடர்ந்து ஆவணப்படுத்தி வரும் ஒளிப்படக் கலைஞர் பழனிக்குமார் ’வியாசை தோழர்கள்’ அமைப்புடன் இணைந்து இந்த ஒளிப்படக் கண்காட்சியை ஒருங்கிணைத்தார். “வடசென்னைக்கான வழக்கமான அடையாளத்தை மாற்ற ’வியாசை தோழர்கள்’ அமைப்புடன் இணைந்து பல முன்னெடுப்புகளைச் செய்துவருகிறோம். அதன் நீட்சியாக ஒளிப்படங்கள் எடுக்கப்பட்ட இடத்திலேயே அதற்கான கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது இந்தியாவில் முதல் முறையாக இருக்கலாம். தொடர்ந்து இம்மாதிரியான நிகழ்வுகளை நடத்துவோம்” என்கிறார் பழனிக்குமார்.

’வியாசை தோழர்கள்’ அமைப்பின் மையமாக இருந்து, அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார் சரத்குமார். “இந்த அமைப்பை நடத்துவதில் வரவேற்பு இருந்தாலும், சில எதிர்ப்புகளும் இருக்கின்றன” என்கிறார் அவர். “’போட்டோகிராபி’ என்பது சக்திவாய்ந்த கலை.

சரத்குமார்
சரத்குமார்

அதன் மூலம் எங்கள் மக்களின் கதைகள் கூறப்படும்போது, பிற பகுதி மக்கள் புரிந்துகொள்வார்கள். வடசென்னையின் முகம் மாறலாம். எந்தத் தடையுமின்றி எங்கள் பயணம் அமைந்தால், எங்கள் தலைமுறையிலேயே மிகப் பெரிய மாற்றத்தைக் காணலாம்” என உறுதிபடக் கூறுகிறார் சரத்குமார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in