

இந்தியா - இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கிவிட்டது. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உத்தேசித்துள்ள ’பாஸ்பால்’ (’Bazball) திட்டம் குறித்து இங்கிலாந்து முன்னாள், இந்நாள் வீரர்கள் பேசிவருகிறார்கள். அதென்ன ’பாஸ்பால்’?
‘பாஸ்பால்’ என்பது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பிரண்டென் மெக்கலம் வந்தபிறகு, கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஒரு வார்த்தை. மெக்கலம் பயிற்சியாளராகவும் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும் நியமிக்கப்பட்ட பிறகு ‘பாஸ்பால்’ உத்தியை அணியில் புகுத்தினர்.
டெஸ்ட் கிரிக்கெட் என்பதே நிதானமாகவும் நேர்த்தியாகவும் விளையாடக்கூடிய ஒரு வடிவம். ஆனால், ஒரு நாள், டி20 போட்டிகளில் விளையாடுவதுபோல முதல் ஓவரிலிருந்தே தாக்குதல் பாணியில் அச்சமின்றி விளையாடி, விரைவாக ரன் குவிப்பில் ஈடுபடுவதுதான் ‘பாஸ்பால்’.
மெக்கலம் - பென் ஸ்டோக் கூட்டணிக்கு முன்பாக ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. 2022 ஜூனில்தான் மெக்கலம் - ஸ்டோக்ஸ் கூட்டணி பொறுப்புக்கு வந்தது. இங்கிலாந்தில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வந்தது நியூசிலாந்து அணி.
இந்தத் தொடரிலிருந்துதான் ‘பாஸ்பால்’ உத்தியை இங்கிலாந்து பின்பற்றத் தொடங்கியது. இந்தத் தொடரில் 3 போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றிபெற்றது. அடுத்து இந்தியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றிபெற்றது. ‘பாஸ்பால்’ உத்திக்குப் பிறகு 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணியில் கிரிக்கெட் வீரராகவும் கேப்டனாகவும் இருந்த மெக்கலம் விளையாடிய காலத்தில், ‘பாஸ்பால்’ உத்தியைத்தான் பின்பற்றிவந்தார். அதற்கு அவருக்குக் கைமேல் பலனும் கிடைத்தது. நியூசிலாந்து அணியில் அவர் மட்டுமே பயன்படுத்தி வந்த அந்த உத்தியை இன்று இங்கிலாந்து அணியின் உத்தியாகவே அவர் மாற்றியிருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் ‘பாஸ்பால்’ உத்தியை இங்கிலாந்து பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் சுழலுக்குச் சாதகமான இந்தியாவில் ‘பாஸ்பால்’ உத்தி ஒத்து வராது என்கிற எச்சரிக்கைகளையும் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் விடுத்துவருகின்றனர்.
‘பாஸ் பால்’ உத்தியை இங்கிலாந்து பின்பற்றினால் விக்கெட்டுகளைக் குவிப்பேன் என்று இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ராவும் பதிலடி கொடுத்திருக்கிறார். ஆக, இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது.
இவை ஒருபுறம் இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டின் இயல்புக்கு மாறாக விளையாடப்படும் ‘பாஸ்பால்’ உத்திக்கு எதிரான விமர்சனங்களும் கிரிக்கெட் உலகில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.