

போலீஸ் கட்டிங், ஸ்டெப் கட்டிங், பங்கி ஸ்டைல் போன்ற பழைய சிகை அலங்காரங்கள் எல்லாம் இளைஞர்கள் மத்தியில் காலாவதியாகிவிட்டன. இன்றைய இளைய தலைமுறையினர் விதவிதமாக முடி அலங்காரம் செய்துகொள்கிறார்கள். தலையைச் சுற்றி முடியைக் கரைத்துவிடுவது, வகிடுக்கு ஒருபுறமாக முடியை மழித்துக்கொள்வது என வெரைட்டி காட்டுகிறார்கள். ஆனால், இந்த ஸ்டைல்கள் மட்டுமல்ல, இன்னும் ரகம் ரகமாக சிகை அலங்காரங்கள் இருக்கவே செய்கின்றன. தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் சிகை அலங்காரங்களைப் பற்றிப் பார்ப்போம்.
குயிஃப் (Quiff):
1950, 1980களில் இளைய தலைமுறையினர் மத்தியில் பிரபலமாக இருந்த ஒரு ஸ்டைல். தலைக்கு மேலே கிரீடம் இருப்பதைப் போன்று சிகை அலங்காரம் செய்துகொள்வது. அந்தச் சிகை அலங்கார ஸ்டைல் மீண்டும் இளைய தலைமுறையினர் மத்தியில் வலம் வரத் தொடங்கியுள்ளது. முன் பக்கத்தில் நீளமாகவும் பின் பக்கத்தில் குறைவாகவும் முடியை வைத்துகொண்டால், அதுதான் ‘குயிஃப்’. நீள் வட்டம் (ஓவல்), வட்டம், தாடை அகன்ற முக அமைப்பு இருப்பவர்கள் இந்த ஸ்டைலைப் பின்பற்றலாம். அடர்த்தியாகவும் மிருதுவாகவும் உள்ளன முடிகொண்டவர்களுக்கும் ஏற்ற ஸ்டைல் இது.
மிட் லென்த் வேவ்ஸ் (Mid-Length Waves):
இன்று பலரும் இந்த ஸ்டைலில் முடியை வளர்த்துக்கொள்கிறார்கள். நீளமாக முடியை வளர்த்து, நடுவில் வகிடு எடுத்துக்கொள்வதுதான் ‘மிட் லென்த் வேவ்ஸ்’. வட்ட, நீள்வட்ட வடிவில் முக அமைப்பு உடையவர்கள் இந்த ஸ்டைலில் சிகை அலங்காரம் செய்துகொண்டால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மிருதுவான தன்மையில் சுருள் முடிகொண்டவர்கள் இந்த ஸ்டைலைப் பின்பற்றலாம்.
ஸ்லீக் சைடு பார்ட் (Sleek Side Part):
வசீகரமான தோற்றத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றால், நீங்கள் இந்த ஸ்டைலைப் பின்பற்றலாம். இடதுபுறத்தில் வகிடு எடுத்து, வழித்து சீவியது போன்ற ஸ்டைல் இது. எந்த முக அமைப்பு இருந்தாலும் எந்த வகையில் முடி இருந்தாலும் இந்த ஸ்டலைப் பின்பற்றலாம். என்றாலும் நீள்வட்ட அல்லது செவ்வக வடிவில் முக அமைப்புக் கொண்டவர் களுக்கு இந்த ஸ்டைல் கச்சிதமாகப் பொருந்தும்.
பஸ் கட் (Buzz Cut with Design):
கிருதா, காது மடலை ஒட்டிய பகுதியில் அணிலுக்கு கோடு போட்டது போன்று இழுத்துக்கொள்வது இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்டைல். அந்தக் கோட்டையே நீண்ட வடிவில் ‘இசட்’ போல இழுத்துக் கொண்டால், அதுதான் ‘பஸ் கட்’. ஆனால், இந்தச் சிகை அலங்காரத்துக்கு முடியைக் குட்டியாக வெட்டிக்கொள்ள வேண்டும். எந்த முக அமைப்புக் கொண்டவர்களும் இந்த ஸ்டைலைப் பின்பற்றலாம். குறிப்பாக, குட்டை முடி கொண்டவர்களுக்கு இது ஏற்றது.
டேப்பர்டு ஃபேட் (Tapered Fade):
‘ஜெய்ஹிந்த்’ படத்தில் நடிகர் செந்தில் வைத்துக்கொண்டு வந்த ‘கீரிப்பிள்ளை’ தலை ஸ்டைல்தான் இது. அந்தப் படத்தில் நடுவில் மட்டுமே முடி இருக்கும். ஆனால், ‘டேப்பர்டு ஃபேட்’ ஸ்டைல் தலையைச் சுற்றி 3 செ.மீ. உயரத்தில் முடியை முழுமையாக மழிக்காமல், சிறிது முடியை வைத்துக்கொண்டு, மற்ற இடங்களில் அடர்த்தியாக முடியை வைத்துக்கொள்வது. இன்றைய இளைய தலைமுறையினரிடம் மிகவும் பிரபலமாக இருக்கும் சிகை அலங்கார ஸ்டைல் இது. நீள்வட்ட, சதுர முக அமைப்புகளைக் கொண்டவர்கள் இந்த ஸ்டைலைப் பின்பற்றலாம். நீளமான முடியைக் கொண்டிருப்பவர்களுக்கும் ஏற்ற ஸ்டைல் இது.