

சாக்லேட் பிடிக்காத குழந்தைகளோ பைக் பிடிக்காத இளைஞர்களோ இருக்கிறார்களா என்ன? இளமையின் துடிப்புடன் முறுக்கான கைகளை ஸ்டைலாக ஹேண்டில்பாரில் பிடித்தபடி, கண்கள் அலைபாய, காற்றில் அலைந்துதிரியும் கேசத்தைக் கைகளால் தடவியவாறு பைக்கில் செல்வார்கள் இளைஞர்கள்.
இளமையின் வாயிலில் நுழையும்போது அவர்கள் எண்ணத்தின் பாதியைப் பைக்தான் நிறைத்திருக்கும். மீதிப் பாதியை எது நிறைத்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இளைஞருக்கு ஒரு நல்ல பைக் இருந்தால் போதும்; மீதி எல்லாம் தானாய் நடக்கும். ஆக அந்த வயதில் வசீகரமான பைக் என்பது மட்டுமே அவர்களின் கனவாக இருக்கும்.
இளைஞர்களின் கனவை நிறைவேற்றுவதற்காக மோட்டார் நிறுவனங்கள் தொடர்ந்து புதுப் புது இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்துகின்றன.
சுஸுகி ஜிக்ஸெர் 155சிசி
ஆகஸ்ட் 10-ம் தேதி சுஸுகி நிறுவனத்தின் ஜிக்ஸெர் 155சிசி பைக் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. சுஸுகி ஜிக்ஸெர் 155சிசி இன்ஜின் பைக்கில் 5 விதமான வேகங்களைக் கையாளும் வகையில் 5 ஸ்பீடு மானுவல் கியர் பொருத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ட்ஸ்ப்ளேயில் பைக்கின் வேகம், பெட்ரோல் அளவு, நேரம், கியர் போன்றவற்றை எண்களாகவே அறிந்துகொள்ளலாம். இதன் கறுப்பு நிற 17 அங்குல அலாய் சக்கரங்கள் இரண்டும் தலா ஆறு ஸ்போக்ஸ்களைக் கொண்டுள்ளன. முன் சக்கரத்தில் பைப்ரே நான் ஏபிஎஸ் பிரேக்கும் பின் சக்கரத்தில் ட்ரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.
சாலைகளில் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கும் வகையில் இதில் பெரிய மோனோ ஷாக் அப்சார்வர் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் ப்யூவல் டேங்கை மேலிருந்து பார்த்தால் டைமண்ட் வடிவத்தில் அழகாக இருக்கும்.
கண்ணைப்பறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கை வாங்குவதற்காக அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்றுவருகிறது. இதன் விலை ரூ. 72,000 – ரூ. 78,000.
பஜாஜ் டிஸ்கவர் 150 எஸ், 150 எஃப்
இரு சக்கர வாகன உற்பத்தியில் பெயர்பெற்ற நிறுவனமான பஜாஜ் தனது டிஸ்கவர் 150 எஸ், 150 எஃப் ஆகிய மாடல்களை ஆகஸ்ட் 11 அன்று அறிமுகப்படுத்தப்போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிஸ்கவர் 150 எஸ் மாடல் இரண்டு வகைகளில் கிடைக்கும் என்றும், ஒன்றில் வழக்கமான டிரம் பிரேக்கும் மற்றொன்றில் ஃப்ரண்ட் டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மாடல் பஜாஜ் டிஸ்கவர் 125 எஸ்டி மாடலைப் போன்றே இருக்கும் என்கிறார்கள்.
இந்த மாடல் பைக்கில் 5 ஸ்பீடு கியர் பொருத்தப்பட்டிருக்கும். டிஸ்கவர் 150 எஃப் மாடலில் டிஸ்க் பிரேக், பின் சக்கரத்தில் மோனோஷாக் அப்சார்வர் சிஸ்டம், எலக்ட்ரிக்கல் ஸ்டார்டர் வசதி, கிக் ஸ்டார்டர் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
என்றாலும் பிற டெக்னிகல் சங்கதிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொல்லப்படுகிறதே தவிர அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த பைக்குகளை வாங்க அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்றுவருகிறது. இதன் விலை ரூ. 55,000 – ரூ. 65,000.
இது தவிர பல்சர் 150என்எஸ், 200 எஸ்எஸ் ஆகிய மாடல்களையும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் பஜாஜ் நிறுவனத்துக்கு உள்ளது என்றும் கூறுகிறார்கள். விதவிதமான புது பைக்குகளின் வருகை இளைஞர்களை ரெக்கை கட்டிப் பறக்கவைக்கிறது.