

சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழ் - ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் சிலர்:
# அனிருத்தன் வாசுதேவன்: மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்ற அனிருத்தன் வாசுதேவன், முக்கிய தமிழ் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 2016ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருது அனிருத்தனுக்கு வழங்கப்பட்டது.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலை ‘ஒன் பார்ட் வுமன்’ என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அம்பையின் சிறுகதைகள் அடங்கிய ‘எ நைட் வித் எ பிளாக் ஸ்பைடர்’ என்கிற புத்தகத்தையும் மொழிபெயர்த்துள்ளார்.
சமீபத்தில் 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசு நெடும்பட்டியலில் அனிருத்தன் மொழிபெயர்ப்பில் வெளியான ‘பைர்’ நாவல் தேர்வு செய்யப்பட்டது. இது பெருமாள் முருகன் எழுதிய ‘பூக்குழி’ நூலின் மொழிபெயர்ப்பாகும்.
# பிரியம்வதா: சென்னையைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் பிரியம்வதா,தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கிடைக்கும் நேரத்தில் தமிழ் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார்.
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘அறம்’ நாவலை ‘ஸ்டோரிஸ் ஆஃப் தி ட்ரூ’ என்றும், ‘வெள்ளையானை’ நாவலை ‘வொயிட் எலிபண்ட்’ என்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவைத் தவிர ‘மொழி’ என்கிற இந்திய மொழிகளும் இலக்கியமும் சார்ந்து இயங்கும் நிறுவனத்தை நிர்வகிக்கிறார்.
# நந்தினி கிருஷ்ணன்: எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் நந்தினி கிருஷ்ணன் சென்னையைச் சேர்ந்தவர். பெருமாள் முருகனின் ‘கழிமுகம்’ நாவலை ‘எஸ்சுயரி’ என்றும், சிறுகதைகளை ‘ஃபோர் ஸ்ட்ரோக்ஸ் ஆஃப் லக்’ என்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இவைத் தவிர கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை 10 பாகங்களாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதன் முதல் இரண்டு நூல்களான ‘ஃபர்ஸ்ட் ஃப்ளட்’, ‘ட்ரபிள்டு வாட்டர்ஸ்’ ஆகியவை 2023இல் வெளியாயின. தவிர ஆங்கிலத்தில் இரண்டு நூல்களையும் எழுதியுள்ளார்.
# ஜெகதீஷ் குமார்: ஆசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஜெகதீஷ் குமார் தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் 16 சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘எ ஃபைன் த்ரெட்’ என்கிற தலைப்பில் எழுதியிருக்கிறார். எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் ‘இலையுதிர் காலம்’ புத்தகத்தையும் ‘தி ஃபால்’ என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
# மீனா கந்தசாமி: கவிஞர், மொழிபெயர்ப்பாளர், நாவலாசிரியர் மீனா கந்தசாமி சென்னையைச் சேர்ந்தவர். சாதிய வன்கொடுமை, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான படைப்புகளை எழுதுபவர். சமூக மொழியியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
எழுத்தாளர் சல்மாவின் ‘மனாமியங்கள்’ நாவலை ‘வுமன், ட்ரீமிங்’ என்கிற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். திருக்குறளின் ‘காமத்துப்பால்' பகுதியை ‘The Book of Great Desire' என்னும் பெயரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து உள்ளார்.
# சுதா ஜி திலக்: 1978இல் தமிழில் வெளியான கரிச்சான் குஞ்சுவின் ‘பசித்த மானிடம்’ நாவலை ஆங்கிலத்தில் ‘Hungry humans’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார் சுதா ஜி திலக். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், சென்னை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். குழந்தைகளுக்கான புத்தகமும், சிறுகதைகளும் எழுதியுள்ளார்.
# ஜனனி கண்ணன்: அமெரிக்காவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர், மொழிபெயர்ப்பாளர் ஜனனி கண்ணன். எழுத்தாளர் பெருமாள் முருகனின் முதல் நாவலான ‘ஏறுவெயில்’ புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த் துள்ளார். ‘ரைஸிங் ஹீட்’ என்கிற தலைப்பில் இந்த நாவல் ஆங்கிலத்தில் வெளியானது.
இது தவிர, பெருமாள் முருகனின் மற்றொரு நாவலான ‘ஆளண்டாப்பட்சி’-ஐ ‘ஃபையர்பேர்டு’ என்கிற தலைப்பில் ஜனனி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இப்புத்தகத்துக்கு 2023ஆம் ஆண்டுக்கான ஜே.சி.பி விருது வழங்கப்பட்டது.
தொகுப்பு: ராகா