

பொங்கல், கரும்பு, விடுமுறை குதூகலம், ஜல்லிக்கட்டு இவற்றைத் தாண்டி பாரம்பரிய உடைகளும் இன்றைய இளைய தலைமுறையினரின் பொங்கல் விருப்பப் பட்டியலில் சேர்ந்துவிட்டன. எப்போதும் ஜீன்ஸ் சகிதம் காட்சியளிக்கும் இளைஞர்கள் அன்றைய தினம் ‘அரும்பாடுபட்டு’ வேட்டிக்கு மாறிவிடுகிறார்கள். விதம்விதமாக மாடர்ன் உடைகளில் வலம் வரும் யுவதிகளும் பாரம்பரிய உடையான பாவாடை தாவணி, சேலைக்குத் தாவிவிடுகிறார்கள். இந்த ஆண்டு பொங்கலை எப்படிக் கொண்டாடப் போகிறீர்கள் என்று சிலரிடம் கேட்டோம்.
# ஒட்டுற வேட்டி: “சில வருஷமா பொங்கல் அன்னைக்கு வேட்டிக் கட்டுறதுல ஆர்வம் வந்துடுச்சி. வேட்டிக் கட்டிட்டுப் போனாவே தனி கெத்துதான். வேட்டி கட்டினா அவிழ்ந்துக்குமோன்னு பயந்திருக்கேன். இப்போதான் ஒட்டுற வேட்டியெல்லாம் வந்துடுச்சே. அதனால வேட்டி கட்டிக்கிறதும் ஈஸியாடுச்சு.
அம்மா செய்யுற சர்க்கரை பொங்கலையும் வடையையும் சுடச்சுடச் சாப்பிட்டால் தேனாமிர்தமாய் இருக்கும். நண்பர்களோடு சேர்ந்து அரட்டை அடிச்சுக்கிட்டே கரும்பு சாப்பிடுவது இன்னொரு சுகம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த கௌதம்.
# அம்மாவுக்கு உதவி: “முன்பெல்லாம் பொங்கல் திருநாள் வரப்போ, சேர்ந்தாப்ல 4 நாள் லீவு கிடைக்குமேன்னு சந்தோஷமா இருக்கும். இப்போ என்ன கலர் புடவை கட்டலாம்கிறதுல ஆர்வம் வந்துடுச்சு.
பார்க்குற எல்லோரும் புடவையில இருக்குறப்ப, நாம மட்டும் மாடர்ன் டிரஸ்ல இருந்தா நல்லாவா இருக்கும்? அப்படியே பொங்கல் அன்னைக்கு அம்மா மட்டும் கஷ்டப்பட்டு சமைச்சிக்கிட்டு இருப்பாங்க. அதனால, அவுங்களுக்கு கூடமாட உதவுவேன்” என்கிறார் நீலகிரியைச் சேர்ந்த ஷர்மிளா.
# புடவை சாய்ஸ்: “தினமும் புடவை கட்ட முடியாதுங்கிறதால பொங்கல் அன்னைக்கு என்னோட சாய்ஸ் புடவைதான். அழகா கட்டிக்கிட்டு கரும்பு சாப்பிட்டுட்டு, அம்மாஆசையா செய்யுற சக்கர பொங்கலை சுடச்சுடச் சாப்பிட்டுட்டு டி.வி.யில புது படம் பார்ப்பேன். அக்கம்பக்கத்தில் போகி பண்டிகை அன்றும் பொங்கல் அன்றும் அழகான பெரிய பெரிய கோலம் போடுவார்கள். அதையெல்லாம் காலையில் எழுந்து பார்த்து மகிழ்வேன்” என்று புன்னைகைக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த தாரணி.
# தமிழர் மரபு: “எங்க வீட்டுல எப்பவுமே தமிழர் மரபை மறந்திடக் கூடாதுங்கிறதல உறுதியா இருப்போம். அதனால, எங்க வீட்டுல ஆண்கள் எல்லோருமே வேட்டியிலும் பெண்கள் புடவையிலும் இருப்பார்கள். 16 வகையான காய்கறிகள போட்டு சமைக்குற பொங்கலுக்காக அன்னைக்கு காலைலேர்ந்தே வயிறை காயப் போட்டு வைத்திருப்பேன்.
முன்ன மாதிரி டி.வி.யில் படம் பார்ப்பது எல்லாம் குறைஞ்சுபோச்சு. நண்பர்கள், உறவினர்களுக்கு போன் போட்டு பொங்கல் வாழ்த்து சொல்லி நானும் வாழ்த்தைப் பெற்றுக்கொள்வேன்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த விக்னேஷ்.
# மீசைய முறுக்கிட்டு: “என்னதான் ஜீன்ஸ், டிசர்ட் போட்டாலும், வேட்டிக்கு இருக்குற மதிப்பே தனிதான். வேட்டி கட்டிக்கிட்டு மீசைய முறுக்கிட்டு நடந்தா, அது தனி ஸ்டைலா இருக்கும். வேட்டி கட்டவே முன்னாடி பயந்தேன்.
இப்போ அந்தப் பிரச்சினையே இல்ல. பொங்கல் அன்னைக்கு வேட்டிய மடிச்சுக் கட்டிகிட்டு ஃபிரெண்ட்ஸோட சுத்துவேன். அப்படியே நண்பர்களோடு சேர்ந்து புதுப் படத்துக்கும் போய்ட்டு வந்தால்தான் பொங்கல் முடிந்த மாதிரியே இருக்கும். ”என்கிறார் திருச்சியைச் சேர்ந்த பிரசன்னா.
அப்போ, நீங்க எப்படி கொண்டாடப் போறீங்க?