

யூடியூபர், இன்ஃப்ளூயன்சர் - சமீப காலமாக சமூக வலைதளங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் சொற்கள் இவை. உணவு, உடை, பயணம், சாகசம், இசை, திரைப்படங்கள் ஆகியவற்றின் அனுபவங்களைப் பதிவு செய்யும் யூடியூபர்கள் ஏராளம் இருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் தமிழ்ப் புத்தகங்களை அறிமுகம் செய்து வாசிப்பைப் பரவலாக்கும் சில யூடியூபர்கள் அமைதியாகப் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் ‘புக்டியூபர்’ என்று அழைக்கப்படுகிறார்கள். புத்தக அறிமுகம் மட்டுமல்லாமல், பழைய, புதிய புத்தகங்களை விமர்சனமும் செய்கிறார்கள் இவர்கள். டிஜிட்டல் தளத்தில் இயங்கும் தமிழ் ‘புக்டியூபர்’களில் சிலரைப் பற்றி பார்ப்போம்.
* தி புக் ஷோ (The Book Show) - ரேடியோ ஜாக்கியும், நடிகையுமான ஆனந்தியின் யூடியூப் அலைவரிசை இது. ‘தி புக் ஷோ’ யூடியூப் என்கிற இந்த அலைவரிசையை 6.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். உளவியல், உறவுகள், சுய உதவி, நிதி மேலாண்மை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்தகங்கள் குறித்து யூடியூபில் இவர் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகிறார்.
கடந்த 2019 முதல் தொடர்ச்சியாகப் புத்தகப் பரிந்துரைகளையும் வழங்கி வருகிறார். காணொளிகளில் சுருக்கமாகவும், சுவாரசியமாகவும் தகவல்களைச் சொல்வது ஆனந்தியின் தனிச் சிறப்பு. யூடியூப் மட்டுமல்ல, ஸ்பாடிஃபை செயலியில் பாட்காஸ்ட்டாகவும் புத்தகங்கள் குறித்த நிகழ்ச்சிகளைப் பதிவேற்றி வருகிறார் ஆனந்தி.
அலைவைரிசையைக் காண: https://www.youtube.com/@TheBookShowbyrjananthi
* புத்தக அறிமுகம் (Puthuga Arimugam) - அபிஷா பாஸ்கர் என்பவரால் 2021இல் ‘புத்தக அறிமுகம்’ யூடியூப் அலைவரிசை தொடங்கப்பட்டது. இந்த அலைவரிசையை ஏழாயிரத்துக்கும் அதிகமானோர் பின்தொடர் கிறார்கள். வரலாற்றுப் புத்தகங்கள், நாவல்கள் பற்றி எளிமையான மொழியில் விளக்கங்களை அளிக்கும் அபிஷா, புத்தகங்கள் குறித்து விமர்சனங்களையும் பதிவிடுகிறார்.
அதுமட்டுமல்ல, அவர் அறிமுகம் செய்யும் புத்தகங்களை இணையத்தில் வாங்குவதற்கான சுட்டியையும் சேர்த்து தகவல் பெட்டியில் பதிவிடுகிறார். இதனால், காணொளியைப் பார்ப்பவர்கள் புத்தகத்தை வாங்க நினைக்கும் பட்சத்தில் சுட்டியை இயக்கி ஆர்டர் செய்து கொள்ள முடிகிறது.
அலைவைரிசையைக் காண: https://www.youtube.com/@puthagaarimugam3425
* ஒயிட் நைட்ஸ் (White Nights) - புத்தக விமர்சனங்களைத் தவிர்த்து இலக்கியம் தொடர்பான நிகழ்வுகள், உரையாடல்கள், எழுத்தாளர்களின் நேர்காணல்கள் போன்ற காணொளிகள் ’ஒயிட் நைட்ஸ்’ யூடியூப் அலைவரிசையில் கொட்டிக்கிடக்கின்றன. இதனால், மற்ற அலைவரிசைகளிலிருந்து சற்று தனித்து தெரிகிறது இந்த அலைவரிசை.
ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடரும் இந்த அலைவரிசையில் 500க்கும் அதிகமான காணொளிகள் காணக் கிடைக்கின்றன. சென்னைப் புத்தகக் காட்சி தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், களத்துக்கு சென்று வாசகர்களின் அனுபவங்களையும் காணொளிகளில் பதிவு செய்கிறார்கள்.
அலைவைரிசையைக் காண: http://surl.li/owgyl
* நாவல் ரிவ்யூ (Novel Review) - கடந்த 2017இல் தொடங்கப்பட்ட யூடியூப் அலைவரிசை ‘நாவல் ரிவ்யூ’. இந்த யூடியூப் அலைவரிசையை 43,000க்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். இந்திரா சௌந்திரராஜனின் மர்ம நாவல்கள், சுஜாதாவின் நாவல்கள், விருது வென்ற நாவல்கள் எனத் தனித்தனி தலைப்புகளில் நாவல்கள் பற்றிய காணொளிகள் இந்த அலைவரிசையில் காணலாம்.
அந்த வரிசையில் கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான கானொளிகள் இந்த அலைவரிசையில் கிடைக்கின்றன. இதில் பதிவிடப்படும் ‘நாவல்களின் ஒரு நிமிட விமர்சனம்’ நிகழ்ச்சி புது முயற்சியாக உள்ளது.
அலைவரிசையைக் காண: https://www.youtube.com/@Novelreview/featured
இவர்களைத் தவிர ‘புக்ஸ் ஹாவ் சோல்’ (Books have soul), ‘புக்ஸ் வித் அபி’ (Books with Abi), ‘இலக்கியப் பெட்டி’ போன்ற யூடியூப் அலைவரிசைகளிலும் தமிழ்ப் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பதிவுகள் காணக்கிடக்கின்றன.
******
யூடியூபில் புத்தக விமர்சனங்களைப் பதிவிடும் ‘புக்டியூபர்’களைப் போல இன்ஸ்டகிராமில் கில்லாடிகள் இந்த இன்ஃபுளூயன்சர்கள். பெரும்பாலான மில்லெனியல் கிட்ஸ்களின் இருப்பிடமாக இருக்கும் இன்ஸ்டகிராம் தளத்திலும் தமிழ் நூல்களுக்கென தனி இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
‘பிம்பம்’, ‘தமிழ் புக்ஸ்’ என்கிற பக்கங்களை நிர்வகிக்கும் நிவேதாவும், சேரவஞ்சியும் தமிழ் புத்தக வாசிப்பை இன்ஸ்டகிராம் பயனர்கள் மத்தியில் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பிம்பம் (Bimbam): தான் வாசிக்கும் புத்தகங்கள் குறித்து ஒளிப்படத்துடன் கூடிய தகவல்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டு வருகிறார் நிவேதா. புத்தக அறிமுகங்களைத் தவிர, ‘புத்தகப் பயணம்’ என்கிற தலைப்பில் பல்வேறு புத்தக நிலையங்கள் பற்றியும் எழுதுகிறார்.
நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கும் இப்பக்கத்தை பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் புத்தக நிகழ்வுகள், புத்தகக் காட்சிகள், அரங்குகள் ஆகியவற்றின் தகவல்களை நிவேதா பகிர்வது சுவராசியமாக உள்ளது.
இன்ஸ்டகிராம் பக்கம்: https://www.instagram.com/__bimbam__/?hl=en
தமிழ் புக்ஸ் (Tamil Books) - புத்தக விமர்சனங்கள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கவிதைகள், மேற்கோள்கள் எனத் தகவல் களஞ்சியமாக இருக்கிறது ‘தமிழ் புக்ஸ்’ இன்ஸ்டகிராம் பக்கம். இப்பக்கத்தை பிரபாகரன் சேரவஞ்சி என்பவர் நிர்வகித்து வருகிறார். தமிழ் மொழி, வாசிப்பு சார்ந்து தொடர்ச்சியாகப் பதிவிட்டு வருகிறார்கள். இவை தாண்டி சேரவஞ்சியின் எழுத்துகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
இன்ஸ்டகிராம் பக்கம்: https://www.instagram.com/tamilbooks_/