

த
மிழக மக்களைப் புலம்ப வைத்துவிட்டது பஸ் டிக்கெட் கட்டண திடீர் விலை ஏற்றம். பஸ் டிக்கெட் கட்டணத்தை ஒவ்வோர் ஆண்டும் மாற்றியமைப்போம் என்றும் சொல்லிவிட்டார்கள். அப்போ, இனி பஸ்ஸில் போன கடைசி தலைமுறை நாமதான் என மீம்ஸ் போட்டுவிட்டு, கவலையில் மூழ்கும் நிலைகூட சில ஆண்டுகளில் வரலாம். அதுவரை வேறெதில் போகலாம் என ஒரு ரவுண்டு விடலாமா? நாம் இப்போது யோசித்துக்கொண்டிருப்பதுபோலவே உலகம் பூராவும் வெவ்வேறு காரணங்களுக்காக மாற்று போக்குவரத்து வாகனங்களை வடிவமைக்கும் நடவடிக்கைகளில் பலர் இறங்கி இருக்கிறார்கள்.
பல்கேரியா நாட்டின் தலைநகரான சோஃபியாவைச் சேர்ந்த மிகைல் கிளனோவ், மார்டின் ஆஞ்சிலோவ் ஆகிய இரு நண்பர்களும் கைகோத்து ‘ஹாஃப் பைக்’ என்கிற புதிய மிதிவண்டி மாடலை 2010-ல் உருவாக்கினார்கள். ஸ்கூட்டரும் சைக்கிளும் கலந்த கலவையான இந்த வண்டியில் மூன்று கியர் ஹப் (Gear Hub) பொருத்தப்பட்டிருப்பதால், சிரமமே இல்லாமல் பெடல் அடித்து லாகவமாக ஓட்டலாம். சைக்கிளில் இருப்பதுபோல பெரிய சக்கரம் முன்புறத்திலும் இரண்டு சிறிய சக்கரங்கள் பின்புறத்திலும் இதில் உள்ளன. 8 கிலோ எடை கொண்ட ‘ஹாஃப் பைக்’-ஐ 90 கிலோ எடை உள்ளவர்கள்கூட ஓட்டலாமாம்.
கிரவுட் ஃபண்டிங் நிறுவனமான கிக்ஸ்டார்டர் வழியாக 2015-ல் 10 லட்சம் டாலர் பணத்தை மக்களிடமிருந்து திரட்டித் தங்களுடைய வாகனத்தின் அடுத்த வெர்ஷனான 2.1 உருவாக்கிப் பிரம்மாண்டமாக வாகனச் சந்தையில் அறிமுகப்படுத்தினார்கள் இந்த நண்பர்கள். ஆனால், ஒரு விஷயம், இதை நீங்கள் நின்றபடியேதான் ஓட்டணும்!
அடுத்து, 2016-ல் எல்லோரையும் கவர்ந்திழுத்தது ‘மோடோபேக்’. சக்கரம் பொருத்தப்பட்ட சூட்கேஸை பலரும் இன்று வெளியூர் செல்லப் பயன்படுத்துகிறோம் அல்லவா? அதை உருட்டிக்கொண்டுபோய் பஸ்ஸில் ஏறுவதற்குப் பதிலாக அதன் மேலே உட்கார்ந்து பயணித்தால் எப்படி இருக்கும் என்று சிகாகோவைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் யோசித்தார், ‘மோடோபேக்’-ஐ தயாரித்தார். Indiegogo.com மூலமாக கிரவுட் ஃபண்டிங்க் செய்து 1 லட்சத்து 15 ஆயிரம் டாலர் திரட்டி ஆயிரக்கணக்கில் தயாரித்தார். மின்சாரம் மூலமாக சார்ஜ் செய்து இயக்கப்படும் மோடோபேக்கில் யுஎஸ்பி போர்டர் வசதியும் பொருத்தப்பட்டுள்ளதால், இதை ஓட்டும்போது உங்களுடைய ஸ்மார்ட்ஃபோனை அதற்குள்ளேயே சார்ஜ் செய்துகொள்ளலாம். ஆக, மோட்டர் பைக்கிற்கு பதிலாக இது மோட்டர் பை!
வெறும் 2 கிலோ எடையில் ஒரே ஒரு சக்கரம் கொண்டதாகவும் பைக் இருக்கலாம் என்று உலகத்துக்கு 2015-ல் காட்டியவர் சீனாவைச் சேர்ந்த சென். தான் வடிவமைத்த ‘சோலோ வீல்’ ஸ்கூட்டருக்குக் காப்புரிமையும் பெற்றுவிட்டார். இதனுடைய தனித்துவமே எவ்வளவு குண்டும் குழியுமான சாலையிலும் இதில் பயணிக்கலாம். இவரும் கிக்ஸ்டார்டர் கேம்பெயின் மூலமாக 85 ஆயிரத்து 744 டாலர் திரட்டி ஆயிரக்கணக்கான சோலோவீல்களை தயாரித்துவிட்டார்.
இந்த வாகனங்கள் அனைத்தும் மிகக் குறைவான விலையில் விற்கப்படுவதால் உலக நாடுகளில் சத்தமில்லாமல், புகையில்லாமல் இவற்றின் வியாபாரம் களைகட்டுகிறது. நம்முடைய ஊருக்கு ஹாஃப் பைக், மோடோபேக், சோலோவீல் எல்லாம் எப்போது வரும் என்பது தெரியாது. அதுவரைக்கும் வீதியில் சூதானமா நடப்போம் பாஸ்!