2023 இன் வைரல் நிகழ்வுகள்!

2023 இன் வைரல் நிகழ்வுகள்!
Updated on
4 min read

ஒவ்வோர் ஆண்டும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கிற்குப் பஞ்சமே இருப்பதில்லை. அந்த வகையில் 2023இல் வைரலான அம்சங்களை அசைபோடுவோம்.

ட்விட்டர் மூடல்: 2022இல் ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது முதலே அதிரடி மாற்றங்களைத்தொடர்ந்து மேற்கொண்டுவந்தார் எலான் மஸ்க். 2023 ஜூலையில் ட்விட்டரின் நீலக் குருவியை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக நாயை லோகோவாக வைத்து அதிர்ச்சி கொடுத்தார் மஸ்க். பிறகு என்ன நினைத்தாரோ, ‘எக்ஸ்’ எனத் திருநாமத்தை மாற்றினார். அதோடு ‘புளூ டிக்’ வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமென இன்னொரு ‘செக்’ வைத்த மஸ்க், ‘எக்ஸ்’ தளத்தில் ஏதாவது மாற்றங்களைதற்போது வரை செய்துகொண்டே வருகிறார். இதனால், ட்விட்டர் தொடர்ந்து லைம் லைட்டில் இருந்தது.

‘வாவ் லுக்’ - கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் சுட்டி சிறுவனின் ‘எப்புரா..’ காணொளி வைரலானதைப் போல, இந்த ஆண்டு ‘ஜஸ்ட் லுக்கிங் லைக் எ வாவ்’ வைரலானது. டெல்லியைச் சேர்ந்த ஆடை விற்பனையாளர் ஜஸ்மீன் கவுர், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வியாபாரத்தை விளம்பரப்படுத்த பயன்படுத்திய இந்த வசனம், ஒரே இரவில் உலக அளவில் பிரபலம் ஆனது. அமுல் விளம்பரம் முதல் தீபிகா படுகோன் வரை தத்தமது ஸ்டைலில் இந்தக் காணொளியை மறு உருவாக்கம் செய்து பகிர்ந்தனர். நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்ட வைரல் வசனமாகப் பதிவானது இந்த ‘வாவ்’.

விராட் ‘வாக்’ - பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவுக்கு நழுவிப்போனது. எனினும், இத்தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஆசிய கோப்பை இந்தியா வசமாகியிருந்தது. அப்போது வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அப்போட்டியின் இடைவேளையின்போது தண்ணீர்எடுத்துக் கொண்டு மைதானத்துக்குள் வந்த கோலி, சேட்டையாக குதித்து ஓடிவந்த காணொளி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

ஓயாத மழை: பிரிக்க முடியாதவை - டிசம்பர் மாதமும் வெள்ளமும் எனும் அளவுக்குக் கடந்த ஆண்டுகளில் ஏதாவதொரு ‘மழை சம்பவம்’ தமிழ்நாட்டில் நடந்தேறி வருகிறது. சென்னை மட்டுமல்லாது தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களும் கன மழையால் இந்த முறை பாதிக்கப்பட்டன. வழக்கம் போல மழை மீம்கள் ஒரு பக்கம் இருக்க, சமூக வலைதளத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி தன்னார்வலர்கள் மழைக்கால உதவிகளையும் செய்யத் தவறவில்லை. ஓயாத மழையும் அதில் வெளிப்பட்ட மனிதமும் இந்த ஆண்டு மறக்க முடியாத அம்சங்களாயின!

கலங்க வைத்த கான்சர்ட்: எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு 2023இல் ‘கான்சர்ட் கலாச்சாரத்தின்’ பிடியில் சிக்கி யிருந்தது சென்னை.பெரும் பாலான இசையமைப் பாளர்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்த, சில நிகழ்ச்சிக் கொண்டாட்டங்கள் திண்டாட்டத்தில் முடிந்தன. ஏ.ஆர். ரஹ்மான் இசைக் கச்சேரியில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்து, கூட்டம் கூடி, டிராபிக்கில் சிக்கி சின்னாபின்னமான ரசிகர்கள், சமூக வலைதளங்களில் வேதனைகளைக் கொட்டித் தீர்த்தனர். ரசிகர்களின் இந்த ஆதங்கம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாகவே இருந்தது. எதிர்காலத்தில் விழித்துக்கொள்வார்கள் என நம்புவோமாக.

போலி ‘ஃபிளாஷ்பேக்’ - இயக்குநர் லோகேஷ் கனக ராஜின் ‘லியோ’ திரைப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதிலும் அந்த ‘ஃபிளாஷ்பேக்’ காட்சி குறித்து படம் பார்த்தவர்களும், ரசிகர்களும் ஆளுக்கொரு காரணத்தையும் கதையையும் அவிழ்த்துவிட்டனர். இதனால் சமூக வலைதளத்தில் பேசு பொருளானது இந்த விவகாரம். இதுதொடர்பாக பேட்டி அளித்த லோகேஷ், ‘அந்த ஃபிளாஷ்பேக் பொய்தான்’ என்று சொல்ல நெட்டிசன்கள் மொத்த மீம்களையும் முழுவீச்சில் இறக்கிவிட்டனர். படம் வெளியாகி ஒரு வாரத்துக்குப் பிறகு இயக்குநர் படத்தை விளக்கிக் கொண்டிருப்பதைச் சுட்டி லோகேஷை ‘அட்டாக்’ செய்தனர் நெட்டிசன்கள்.

பார்பி vs ஓபன்ஹைமர்: கனவுகளின் இளவரசியான பார்பியும், அணுகுண்டுகளின் தந்தை ஓபன் ஹைமரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். ஹாலிவுட்டின் இரண்டு பெரிய பட்ஜெட் திரைப்படங்களான ‘பார்பி’, ‘ஓபன்ஹைமர்’ ஒரே நேரத்தில் வெளியாக ரசிகர்களின் மோதல் உச்சத்தை எட்டியது. ஹிட்டாகப் போவது எது, வசூலைக் குவிக்கப்போவது எது எனப் படங்கள் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் அடித்துக் கொள்ளத் தொடங்கினார். உலக அளவில் டிரெண்டிங் ஆன இந்த மோதலை ‘பார்பன்ஹைமர்’ எனக் குறிப்பிடுகின்றனர் இணையவாசிகள். 2023இல் வைரல் வார்த்தைகளில் ‘பார்பன்ஹைம’ருக்கும் நிச்சயம் ஓர் இடமுண்டு.

ரகளையான மீம் டெம்ப்ளேட்: பழைய காணொளிகளை எடுத்து மீண்டும் டிரெண்ட் செய்வது புதிதல்ல. அந்த வரிசையில் தனியார் நிகழ்ச்சியொன்றின் ஒரு பகுதியை மீண்டும் டிரெண்ட் செய்தனர் இணையவாசிகள். தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைக்குச் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் வைத்து பஞ்சாயத்து செய்யும் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியில், லாரன்ஸ் என்பவர் பங்கேற்றிருக்கிறார். நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே வேடிக்கையாகப் பேசியவர் ஒரு கட்டத்தில் எதிர் தரப்பில் இருந்தவரைப் பார்த்து, ‘மேடம் இது நடிப்பு மேடம்’ எனச் சுட்டிக்காட்ட, மீம் கிரியேட்டர்கள் இதை டெம்ப்ளேட்டாக மாற்றிவிட்டனர். 9 ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த நிகழ்ச்சியை மீண்டும் டிரெண்ட் செய்து மீம்களைத் தெறிக்கவிட்டனர் நெட்டிசன்கள். இந்த ஆண்டின் பிரபல மீம் டெம்ப்ளேட்டாக மாறியது லாரன்ஸின் வசனம்.

யார் இந்த ஓரி? - இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் ‘ஓரி’ என்பவருக்கும் இடமுண்டு. ஆனால், பலரும் எதிர்பார்ப்பதைப் போல ஓரி ஒரு நடிகரோ, விளையாட்டு வீரரோ அல்ல. பாலிவுட்டில் பிரபல நட்சத்திரங்கள் பலரோடு நட்பில் இருப்பவர் மட்டுமே. ஆனால், அவர்களோடு ஓரி எடுத்துக்கொள்ளும் செல்ஃபிகளும், ஒளிப்படங்களும் ஒவ்வொரு முறையும் சமூக வலைதளத்தில் வைரலாயின. ஏனென்றால் வித்தியாசமாக ‘போஸ்’ கொடுத்து ஒளிப்படங்களை எடுத்துக்கொள்வது ஓரியின் பாணி. இதனால் இணையவாசிகளின் கவனத்துக்கு வந்த ஓரி யார் என்று அதிகம் பேரால் தேடப்பட்டார்.

ஐ ஷோ ஸ்பீட்: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் டேரன் ஜெ. வாட்கின்ஸ். ‘ஐ ஷோ ஸ்பீட்’ அல்லது ‘ஸ்பீட்’ எனப் பிரபலமாக அறியப்படுபவர். இவர் ஒரு ‘2கே கிட்’. பல்வேறு விளையாட்டுகள், விளையாட்டுத் தொடர்கள் பற்றித் தனது யூடியூப் அலைவரிசையில் பேசி காணொளிகளைப் பதிவேற்றி வருகிறார். இவரது வேடிக்கையான பேச்சும் நகைச்சுவையான வசனங்களும் டிரெண்டிங் ஆக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இவரைப் பின்தொடர்கின்றனர். ஸ்பீடின் முக பாவனைகள் அவ்வப்போது மீம் டெம்ப்ளேட்டுகளாகவும் வலம் வர, விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமான முகமாக மாறினார் ஸ்பீட்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in