டெக் நாலெட்ஜ் 12: நொடிப் பொழுதில் ஓவியம் சாத்தியமா? :

டெக் நாலெட்ஜ் 12: நொடிப் பொழுதில் ஓவியம் சாத்தியமா? :
Updated on
2 min read

அண்மைக் காலத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பேசுபொருளாக இருப்பது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.). இது பயன்படுத்தப்படாத துறையே இல்லை எனும் அளவுக்குப் புதுமைகள் அறிமுகமாகின்றன. அந்த வரிசையில் மெய்சிலிர்க்க வைக்கும் டிஜிட்டல் ஓவியங்களை நொடிப்பொழுதில் உருவாக்குகிறது உமாஜிக் - ஏஐ ஆர்ட் ஜெனரேட்டர் (Umagic - AI Art Generator).

ஓவியங்கள் வரைய: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ‘ஓபன் ஏஐ’ நிறுவனம் ‘சாட் ஜிபிடி’ தேடு பொறியை அறிமுகம் செய்தது. சாட் ஜிபிடியின் வருகையைப் பார்த்து உலகமே பிரமித்தது. அதற்குக் காரணம், சாட்ஜிபிடி சாதாரண தேடுபொறிக்கும் மேலானது. இந்த சாட்ஜிபிடி தகவல்கள் வழங்கும், கவிதைகளைப் பாடும், விமர்சனங்கள் தரும், ஆலோசனைகள் வழங்கும். அதன் நீட்சியாக அறிமுகமானவைதான் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் படங்கள், ஓவியங்களைத் தீட்டும் செயலிகள். நீங்கள் மனதில் நினைக்கும் ஓவியத்தைக் கைப்பட வரையத் தேவையில்லை. வரைய நினைக்கும் ஓவியத்தின் சாராம்சத்தை எழுத்து வடிவில் குறிப்பிட்டாலே போதும், செயற்கை நுண்ணறிவு அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கும்.

முதலில் உமாஜிக் செயலியை கூகுளின் ‘பிளே ஸ்டோர்’ அல்லது ஆப்பிளின் ‘ஆப் ஸ்டோர்’ தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செயலியைத் திறந்தவுடன் ‘Enter Prompt’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் குறிப்புகள் இட வேண்டும். உதாரணத்துக்கு, ‘திறன்பேசியுடன் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்’ எனக் குறிப்பிட்டால், சில மணித்துளிகளில் நீங்கள் எதிர்பார்த்த ஓவியம் கிடைத்துவிடும். இப்படி குறிப்புகளைக் கொண்டு ஓவியங்களை வரையும் முறையைத்தான் ‘ஏஐ போட்டோ ஜெனரேட்டர்’ செயலிகள் எளிதாகச் செய்கின்றன. இந்த முறையில் ஓவியங்களை உருவாக்கப் பல செயலிகள் இருந்தாலும், உமாஜிக் செயலி இப்பணியைத் திறம்படச் செய்கிறது.

சாதகம் vs பாதகம்: ஆரம்பத்தில் உமாஜிக் செயலியைப் பயன்படுத்த கட்டணம் செலுத்தத் தேவையில்லை. குறிப்பிட்ட சில ஓவியங்களைத் தயாரித்ததற்குப் பிறகு புது கணக்கைத் தொடங்கி மீண்டும் கட்டணமின்றிப்பயன்படுத்தலாம் அல்லது அதே கணக்கைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்திப் பயன்படுத்தலாம். இந்தச் செயற்கை நுண்ணறிவுப் படங்கள் தயாரிப்புச் செயலிகளால் வழக்கமான ஓவியங்களைத் தாண்டி கற்பனை வளம் மிகுந்த ஓவியங்களை உருவாக்க முடியும். முறையாக ஓவியம் வரையத் தெரியாதவரும் சரியான குறிப்புகள் தந்து நினைத்த ஓவியங்களை உருவாக்கலாம். அழைப்பிதழ்கள், சமூக வலைதள போஸ்டர்கள் போன்றவற்றை உருவாக்க இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.

எனில், செயற்கை நுண்ணறிவுச் செயலிகளின் வருகையால் பாரம்பரிய ஓவியர்களுக்குப் பாதகம் இருக்குமா? இல்லை என்கிறார்கள் துறை சார்ந்த கலைஞர்கள். செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டால் கலைஞர்களின் தொழிலுக்கு ஓரளவு பிரச்சினை இருந்தாலும், அனைத்து வேலைகளையும் அதன் செயலிகளால் திறம்படச் செய்து முடிக்க முடியாது என்கின்றனர். அதாவது, நாம் வழங்கும் குறிப்புகள் அந்தச் செயற்கை நுண்ணறிவுச் செயலிக்குத் தெரியும்பட்சத்தில் ஓவியங்களை உருவாக்கிக் கொள்ளலாம். அந்த அளவுக்கு உலகளாவிய மொழிகளை, வார்த்தைகளின் அர்த்தங்களை அந்தச் செயலி உள்வாங்கிக் கொண்டிருக்க வேண்டும். அது சாத்தியம் இல்லாதபோது ஓவியங்களை உருவாக்க முடியாது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், வழக்கமான மற்ற செயற்கை நுண்ணறிவு ஓவியம் வரையும் செயலிகளைப் போல இதுவும் ‘டெம்ப்ளேட்டு’களால் ஆனதுதான். எனவே, ஒரே மாதிரியான ஓவியங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை உருவாக்கப்படலாம். எனினும் கலையை ரசிப்பவருக்கு, புதுமைகளைத் தேடிச் செல்பவருக்கு இந்த ‘ஏஐ போட்டோ’ தயாரிப்புச் செயலி கண்டிப்பாகப் புது அனுபவத்தைத் தரும். ‘ஏஐ’ தொழில்நுட்பமும் ஓவியங்களும் தொடர்பான துறையைப் பற்றி அறிய உமாஜிக் செயலி ஒரு அறிமுகமாக இருக்கும்.

(நாலெட்ஜ் அறிவோம்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in