செயற்கை நுண்ணறிவு நடிகர்கள்

ஐ.எஸ்.ஆர். செல்வகுமார்
ஐ.எஸ்.ஆர். செல்வகுமார்
Updated on
3 min read

தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மேலோங்கியிருக்கும் டிஜிட்டல் யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தினசரி வேலைகளில் சரிபாதி தொழில்நுட்பங்களையே சார்ந்திருக்கிறது. அந்த வகையில் தொழில்நுட்பங்களின் உச்சமாகக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மெல்ல மெல்ல அன்றாட வாழ்க்கையிலும் நுழைந்து வருகிறது. ‘ஏஐ’ தொழில்நுட்பம் சார்ந்து தீராக் காதல் கொண்டவராகத் தொழில்நுட்பத் தளத்தில் இயங்கி வருகிறார், சென்னையைச் சேர்ந்த ஐ.எஸ். ஆர். செல்வகுமார். செல்வகுமாரின் தந்தை ஐ.எஸ். ஆர்.. இவர் பிரபல திரைப்பட நடிகர். 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் துறையில் தந்தை இருந்ததால் செல்வகுமாருக்கு சினிமாவின் மீது எப்போதுமே ஓர் ஈர்ப்பு.

ஆனால், இளமை காலத்தில் உடனடியாக சினிமாவில் செல்வகுமார் நுழையவில்லை. அதற்கான காலம் வரும்வரை காத்திருந்தார். பிறகுதான் கணினி துறையில் கால்பதித்திருக்கிறார். “அடிப்படையில் நான் ஒரு சாப்ட்வேர் பொறியாளர். சாப்ட்வேர் தொடர்பாகப் பல வருடங்களாக மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறேன். எண்பதுகளின் இறுதியில் கணினி சார்ந்த நிறுவனத்தை வைத்திருந்தேன். அந்தக் காலகட்டத்தில் கணினி படித்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதால், என் வாழ்வில் கணினி ஒரு அங்கமாகவே அப்போது மாறிப் போனது” என்று கூறும் செல்வகுமார், தொலைக்காட்சியில் நுழைந்த பயணமே அவரை சினிமாவுக்கும் அழைத்து வந்தது என்கிறார்.

ஐ.எஸ்.ஆர். செல்வகுமார்
ஐ.எஸ்.ஆர். செல்வகுமார்

தொலைக்காட்சி டூ சினிமா: தொண்ணூறுகளின் இறுதியில் தொலைக்காட்சி வேகமாக அறிமுகமான காலம். கணினி தொழில்நுட்பம் சார்ந்து செல்வகுமார் பிரபலமாக இருந்ததால், முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் உள்ளவர்களுடன் உரையாடும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. இந்தத் தொடர்புகளின் மூலம் பொழுதுபோக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. “என்னுடைய தயாரிப்பு நிகழ்ச்சிகள் நேர்த்தியாக இருக்கும் என்பதால், தொலைக்காட்சி துறையில் என் பெயர் ஆழமாகவே பதிந்துவிட்டது. இதனையடுத்து சேனல்கள் பக்கம் என் கவனம் சென்றது” என விவரிக்கும் செல்வகுமார், அங்குதான் பார்வையாளர்களைக் கவரக்கூடிய புதிய புதிய முயற்சிகளைச் செய்யத் தொடங்கி இருக்கிறார்.

புதிய அனுபவங்கள்: “வாழ்வில் புதிய அனுபவங்களைத் தேடுவது எப்போதும் பிடித்தமான ஒன்று. அதன் பொருட்டே தொலைக்காட்சி பயணத்துக்குப் பிறகு சேனல் சென்றேன் இறுதியாக சினிமா என் கனவாக இருந்தது. அதில் நுழைந்தவுடன் அப்போது எனக்கு கைக் கொடுத்தது, நான் கற்ற தொழில்நுட்ப அறிவுதான். டிஜிட்டல் கேமரா மூலம் டிஜிட்டல் முறையில் திரைப்படம் ஒன்றை இயக்கினேன். படத்தின் பெயர் ‘வித்தையடி நான் உனக்கு’ முழுக்க, முழுக்க டிஜிட்டலில் எடுக்கப்பட்ட இப்படத்தில் மொத்தம் இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே இடம் பெற்றன” என்கிறார் செல்வகுமார். அறிமுகமாகும் தொழில்நுட்பங்களை நோக்கி செல்வகுமார் ஓடிக் கொண்டிருந்தபோதுதான், ‘ஏ.ஐ.’ ( செயற்கை நுண்ணறிவு) அவருக்கு அறிமாகி இருக்கிறது.

இனி எல்லாமே ஏ.ஐ. - “வருங்காலத்தில் ‘ஏ.ஐ.’ நம் வாழ்க் கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை உணர்ந்துள்ளேன். அதன் வெளிப்பாடாகவே கவியரசு கண்ணதாசனின் ‘யாதன கேட்டேன்’ கவிதையை அடிப்படையாக வைத்து திரைப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளேன். இப்படத்தில் அப்படி என்ன புதிதாக உள்ளது என நீங்கள் கேட்கலாம், இருக்கிறது. படத்தில் நிஜ நடிகர்களுடன், ‘ஏ.ஐ.’ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட நடிகர்களும் நடித்திருக்கிறார்கள் என்பது இதன் சிறப்பம்சம்” என்கிறார் செல்வகுமார். ‘ஏ.ஐ. நிலா’, ‘ஏ.ஐ. தமிழி ’ ஆகியோர் படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய ‘ஏ.ஐ. கதாபாத்திரங்கள். இப்படத்தை தொடர்ந்து முழுக்க முழுக்க ‘ஏ.ஐ.’ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட நடிகர்களை வைத்து திரைப்படத்தை உருவாக்கும் முயற்சியிலும் செல்வகுமார் இறங்கி இருக்கிறார். “ஏஐ கதாபாத்திரங்கள் மனிதர்களின் உணர்வுகளைத் தத்ரூபமாக வெளிப்படுத்தக் கூடியவை” என்று சொல்லும் செல்வகுமார். ’வெல்கம் டூமாரோ’ என்கிற தலைப்பில் 10 குறும்படங்கள் அடங்கிய அந்தாலஜியையும் உருவாக்கி வருகிறார்.

கட்டுப்பாடு இருக்கட்டும்: ‘ஏ.ஐ.’யின் சிறப்புகளைப் பகிரும் செல்வகுமார், அதிலுள்ள குறைபாடு களையும் கூறத் தவறவில்லை. “ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு ஆதரவளிக்கும் அதே நேரத்தில் அதில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ‘டேட்டா எண்ட்ரி’ போன்ற பல வேலைகள் எதிர்காலத்தில் ‘ஏ.ஐ’ பக்கம் செல்லக்கூடும். ஆட்குறைப்பு நடவடிக்கையின் அங்கமாக இதனை நிறுவனங்கள் கையில் எடுக்கலாம். முதலில் அனைவரும் ‘ஏ.ஐ.’யின் பயன்பாட்டைப் புரிந்துகொள்வது அவசியம். அப்புரிதலே ‘ஏ.ஐ. தொழில்நுட்பத்தைக் கண்டு எழும் அச்சத்தைப் போக்கும். உதாரணத்துக்கு கணினியை எடுத்துக்கொள்ளுங்கள். தொடக்கத்தில் கணினியின் வருகைக்கு எதிர்ப்புகள் இருந்தன.

ஆனால், நாளடைவில் கணினி இயக்கத்தெரிந்தவர்களுக்கான தேவை அதிகரித்தது. இதுவே வருங்காலத்தில் ‘ஏ.ஐ.’யிலும் நடக்கப் போகிறது. வேலையிழப்பைத் தவிர்க்க ‘ஏ.ஐ.’-யில் பயிற்சி பெற்றிருப்பது அவசியம். ‘ஏ.ஐ.’யை முழுவதுமாக உள்வாங்கிக்கொண்டால் அதனைக் கட்டுப்படுத்தும் எஜமானாராக நாம் மாறுவோம். ‘ஏ.ஐ.’ மூலம் உருவாக்கப்படும் தொழில்நுட்பப் பயன்பாடுகளில் முடிவெடுக்கும் திறன் நம்மிடமே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அற மீறல்கள் நிகழ வாய்ப்பில்லை. எனவே, ‘ஏ.ஐ.’ தொழில்நுட்பத்தைக்கையாள்பவர்களாக நாம் மாற வேண்டும் அதே நேரத்தில் அறிவுசார், கற்பனைசார் தகவல்களை ‘ஏ.ஐ.’ தொழில்நுட்பத்திடம் முழுமையாக ஒப்படைத்துவிடக் கூடாது. அதனை இயக்கும் அதிகாரம் நம்மிடமே இருக்க வேண்டும்” என்று எச்சரிக்கவும் செய்கிறார் செல்வகுமார்.

- indumathy.g@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in