

ஸ்மாட்ரான் நிறுவனம் அடுத்த ஸ்மார்ட்போன் மாதிரியை அறிமுகம் செய்யத் தயாராகிவருகிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முதலீட்டாளராகவும் விளம்பரத் தூதராகவும் பெற்றுள்ள இந்நிறுவனம், கடந்த ஆண்டு எஸ்டிஆர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக டி.போன்பி எனும் புதிய மாதிரியை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த போனின் விலை 9,000 ரூபாயாக இருக்கும். 5,000mAh பேட்டரி இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும் என கிஸ்பாட் தளம் தெரிவிக்கிறது.
செயலி புதிது: நொடியில் போஸ்டர்கள்
இணையம் மூலமே போராட்டங்களை ஒருங்கினைக்கவும் வழிநடத்தவும் சமூக ஊடகங்கள் உதவியாக இருக்கின்றன. இத்தகைய இணைய இயக்கங்களை ஒருங்கிணைப்பதற்கான முயற்சியில் உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது வாக்வோக் செயலி. ஐபோனுக்கான இந்த செயலி மூலம் போராட்ட நோக்கத்தை அழகாகச் சொல்லும் போஸ்டர்களை எளிதாக உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கான மாதிரிகளை இந்தச் செயலியே வழங்குகிறது. அவற்றிலிருந்து தேர்வு செய்து நம் நோக்கத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ளலாம். இவற்றை சமூக ஊடகங்களிலும் பகிரலாம்.
மேலும் தகவல்களுக்கு: https://www.walkwoke.com
தகவல் புதிது: கடந்த ஆண்டின் டிஜிட்டல் சொல்
‘ஷிட்போஸ்ட்’ என்றால் என்ன? இந்த வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்காவிட்டால்கூட, இதன் தாக்கத்தை இணையத்தில் நிச்சயம் உணர்ந்திருக்கலாம். இணைய உரையாடலை பாழக்க அல்லது ஒருவரை வெறுப்பேற்றும் நோக்கத்தோடு வெளியிடப்படும் தேவையில்லாத கருத்துகள் அல்லது பதிவுகள் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. இத்தகைய வெட்டி வீண் வம்புப் பதிவுகளை ஃபேஸ்புக்கிலும் பிற தளங்களிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தப் பதிவுகளை குறிக்கும் ஷிட்போஸ்ட் எனும் வார்த்தையே கடந்த ஆண்டின் டிஜிட்டல் சொல்லாக அமெரிக்க பேச்சு வழக்குக் கழகம் தேர்வு செய்தது. கடந்த ஆண்டின் சொல்லாக, இணையத்தை உலுக்கி வரும் பொய்ச்செய்தி நிகழ்வான ஃபேக்நியூஸ் தேர்வாகியுள்ளது.