

இந்தியாவுக்கே கலாச்சார தலைநகரம் எனும் பெருமையை வழங்கியிருப்பதில் சென்னை மார்கழி திருவிழாவுக்குக் கணிசமான பங்கிருக்கிறது. அப்படிப்பட்ட திருவிழா தொடங்குவதற்கு முன்பாகவே புகழ்பெற்ற இசைக் கலைஞர்களையும் நடனக் கலைஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில், மீனம்பாக்கத்திலுள்ள ரேடிசன் புளூ நட்சத்திர விடுதியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருக்கிறது ஈவெண்ட் ஆர்ட் நிறுவனம்.
‘மார்வெலஸ் மார்கழித் திருவிழா' எனும் தலைப்பில் நடந்த இந்தப் பிரம்மாண்டமான விழாவில் ஸ்டீவன் சாமுவேல் தேவஸியின் இதமான இசை பின்னணியில் ஒலிக்க, மூத்த இசை, நாட்டியக் கலைஞர்கள் முதல் கலை உலகில் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் இளம் கலைஞர்கள் வரை பெருமிதமாக நடந்து வந்தது கண்கொள்ளாக் காட்சியாகப் பார்வையாளர்களை வசப்படுத்தியது.
கர்னாடக இசைப் பாடகர்கள் சுதா ரகுநாதன், அருணா சாய்ராம், ரஞ்சனி காயத்ரி, உத்ரா உன்னிகிருஷ்ணன், சிக்கில் குருசரண், பரதநாட்டியக் கலைஞர்கள் பத்மா சுப்பிரமணியம், வைஜெயந்திமாலா பாலி, வயலின் கலைஞர்கள் லால்குடி ஜி.ஜே.ஆர்கிருஷ்ணன், விஜி, கணேஷ்- குமரேஷ் உள்ளிட்ட கலைஞர்கள் இந்த விழாவில் பங்கெடுத்து சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியை லட்சுமி, சரஸ்வதி ஆகிய இருவரும் சிறப்பாக ஒருங்கிணைத் திருந்தனர்.