

உலகில் வித்தியாசமான உணவகங்களுக்குப் பஞ்சமில்லை. உணவகத்தை வித்தியாசமாக வடிவமைப்பது, புதிய ருசியில் உணவு சமைப்பது, பரிமாற ரோபாட்களை அனுப்புவது, இவ்வளவு ஏன் விதவிதமான ஆஃபர்கள் வழங்குவது என உணவகங்கள் புதிய முறையில் வாடிக்கையாளர்களைக் கவர பல உத்திகளைக் கையாள்கின்றன. அந்த வகையில் ஜப்பானில் உள்ள ஓர் உணவகம், வித்தியாசமான சேவையை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்த்துவருகிறது. ஜப்பானின் நகோயா என்கிற பகுதியில் சஜிஹோகோயா என்கிற உணவகம் ஒன்று, வாடிக்கையாளர்களின் கன்னத்தில் ‘பளார்’ விட்டு வித்தியாசமான சேவையை வழங்கிவருகிறது. வாடிக்கையாளரின் கன்னத்தில் ஓர் அறைவிட ஜப்பான் பணத்தில் 300 யென் வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.170. எங்கேயாவது உணவகத்துக்கு வர கன்னத்தில் அறை விடுவார்களா? இந்த ‘பளார்’ நடைமுறைக்குக் குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. வாடிக்கையாளர்கள் விரும்புவதால் கன்னத்தில் அறை விடும் சேவையை வழங்குவதாக அந்த உணவகம் தெரிவித்துள்ளது. இதற்காக அந்த உணவகம் தற்போது பிரபலமும் ஆகிவிட்டது. இப்படியெல்லாம் ஓர் உணவகம்!
வைரலுக்கு வயதில்லை! - இன்ஸ்டகிராம், யூடியூபைத் திறந்தாலே சமையல் தொடர்பான காணொளிகள் வரிசை கட்டும். அந்த அளவுக்கு உணவு, சமையல் தொடர்பான காணொளிகள் இன்ஸ்டகிராம், யூடியூபில் அதிகம். அதேபோல சமையல் தொடர்பான காணொளிகளைக் காணும் பார்வையாளர்களும் அதிகம் இருக்கிறார்கள். தற்போது சமூக வலைதளங்களில் 85 வயதான மூதாட்டி ஒருவர் அடிக்கடி டிரெண்டிங்கில் இடம்பிடித்து விடுகிறார். அவருடைய பெயர் விஜய் நிஸ்சால். யூடியூபில் ‘தாதி கி ரசோய்’ (Dadi Ki Rasoi) என்கிற பெயரில் இவருக்கு அலைவரிசை இருக்கிறது. இவருடைய காணொளிகள் சரியாக 90 விநாடிகள் மட்டுமே ஓடக்கூடியவை என்பது இந்த அலைவரிசையின் சிறப்பு.
அந்த ஒன்றரை நிமிடத்தில் நேர்த்தியாகவும் சுவையாகவும் எப்படிச் சமையல் செய்வது என்பதை விவரிக்கிறார் விஜய் நிஸ்சால். இதனாலேயே இவருடைய காணொளிகள் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகிவிடுகின்றன. இன்ஸ்டகிராமில் 8 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் இந்தப் பாட்டிக்கு உள்ளனர். சின்ன வயதில் தன்னுடைய அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்ட சமையல் கலையைத்தான் இப்போது இந்த அலைவரிசையில் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறார் இந்தப் பாட்டி.
மீன் தொட்டிக்குள் மேஜிக்: சாதிப்பதற்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் அமெரிக்காவில் 13 வயதான சிறுமி ஒருவர். இந்த வயதிலேயே சமூக வலைதளங்களில் இச்சிறுமி பேசுபொருளாகியிருக்கிறார். மீன் தொட்டியில் ஸ்கூபா டைவிங் செய்தபடி மேஜிக் செய்து அசத்தியிருக்கிறார் அவேரி எமர்சன் என்கிற இந்தச் சிறுமி. சிறு வயதிலிருந்தே மேஜிக் செய்வது என்றால் அவேரிக்கு அவ்வளவு ஆசை. கரோனா பொது முடக்கத்தின்போது வீட்டிலேயே அடைந்துகிடந்தார் அவேரி. அப்போது நீருக்கடியில் சாகசம் செய்யும் ஸ்கூபா டைவிங் பயிற்சிக்கு மட்டும் சென்று வந்தார்.
ஏதாவது, புதுமையாகச் செய்ய வேண்டும் என்று விரும்பிய அவேரி மேஜிக்கையும் ஸ்கூபா டைவிங்கையும் இணைத்து செய்ய பயிற்சியைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகள் இந்தப் பயிற்சியை மேற்கொண்டு வந்த அவேரி, அண்மையில் சான்பிரான்சிஸ்கோவில் ஒரு மீன் தொட்டிக்குள் ஸ்கூபா டைவிங் செய்துகொண்டே 38 விதமான மேஜிக்குகளைச் செய்து காட்டியிருக்கிறார். அதுவும் 3 நிமிடங்களில் இந்த மேஜிக்கை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். குறைந்த நிமிடங்களில் நீருக்கடியில் அதிக மேஜிக் செய்ததால் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துவிட்டார் அவேரி.
தொகுப்பு: மிது கார்த்தி