மார்கழி கானா!

மார்கழி கானா!
Updated on
1 min read

ண்மையில்தான் இயல், இசை, நாடகக் கலைகளை வளர்க்கும் பண்பாட்டு நகரமாக சென்னையைத் தேர்வு செய்தது யுனெஸ்கோ. கர்னாடக இசை சென்னையில் பிரபலமாக இருப்பதுபோல, சென்னையின் பூர்வக்குடிகளோடு ஒன்றிய கானாவும் மக்களுக்கு மிகவும் நெருக்கமான இசைதான். மார்கழி மாதம் சென்னையில் கர்னாடக இசைக் கச்சேரிகள் பாரம்பரியமாக நடைபெற்றுவருவதைப் போல கானா கச்சேரியும் நடக்க வேண்டும் என கானா இசைக் கலைஞர்களுக்கு ஆசை. அந்த ஆசையைத் தீர்த்துக்கொள்ளும் விதமாக அண்மையில் அன்னக்கூடை கானா கச்சேரி சென்னை வடபழனியில் நடந்தேறியது.

சென்னையின் பூர்வகுடி மக்களிடமிருந்து தோன்றிய கானா பாடல்களை அவர்களே மெட்டமைத்து, பாடல் வரிகளை உருவாக்கி, எந்த விதிமுறைகளும் இல்லாமல், எல்லா தளங்களிளும் பாடுவதுதான் கானா. மனதில் தோன்றும் வரிகளை ஒரே நொடியில் பாடலாக மாற்றிவிடுவது கானாவுக்கே உள்ள சிறப்பு. சென்னையில் கானா இசைக் கலைஞர்கள் ஏராளமாக உள்ளனர். கானாவில் புகழ்பெற்ற ‘மரண கானா’ விஜியின் தலைமையில்தான் இந்தக் கச்சேரி நடைபெற்றது. அன்னக்கூடை தவிர, கானாவுக்குப் பாரம்பரியமாகப் பயன்படுத்தும் சஃபீரா, பக்கிர் மேளம், புல்புல்தாரா போன்ற இசைக் கருவிகளுடன் கானா இசைக் கலைஞர்கள் கானா பாடல்களை உற்சாகமாகப் பாடினார்கள். சோகம், காதல், மகிழ்ச்சி என எல்லா தளங்களிலும் கானா ஒலித்தது.

கானா விஜியின் பாடலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எந்தக் கட்டுப்பாடும் இன்றி உணர்ச்சி பெருக்கெடுத்து ஆடினார்கள். முடிவில் கானா இசைக் கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

மார்கழியில் கானா கச்சேரி நடத்தியது குறித்து விஜியிடம் கேட்டோம். “சென்னைப் பூர்வகுடிகளின் பாரம்பரிய இசையான கானாவுக்கு அங்கீகாரம் கிடைக்காமலேயே இருக்கிறது. மற்ற இசைக் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் பாராட்டுகளும் சலுகைகளும் கானா கலைஞர்களுக்குக் கிடைப்பதில்லை. இது கானா கலைஞர்களுக்கு ஒரு குறைதான். தொடக்கமாகவும் வித்தியாசமாகவும் இருக்கட்டுமே என்பதற்காகத்தான் மார்கழியில் கானா கச்சேரியை நடத்தினோம்” என்கிறார் விஜி.

இது மார்கழி கானா!

ச.ச. சிவ சங்கர்

படங்கள் உதவி: நீல்கமல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in