

எ
ன்னால் 1974-ம் ஆண்டை மறக்க முடியாது. அந்த ஆண்டுதான் தமிழ் மொழிப் பாடத்தைப் பயிற்றுவிக்கும் பணியில் காந்திகிராம உயர் கல்வி நிறுவனத்தில் இணைந்தேன். என் வயது ஒத்தவர்களும் வயதில் மூத்தவர்களும் எனக்கு மாணவர்களாக இருந்தனர். மாணவப் பருவத்திலேயே நான் கவியரங்கம், பட்டிமன்றங்களில் கலந்துகொண்டதால் வகுப்பறைச் சூழலைச் சமாளிக்கப் பொதுமேடை அனுபவங்கள் துணையாயிருந்தன.
1976-ம் ஆண்டில்தான் நிகர்நிலைப் பல்கலைத் தகுதியைப் பெற்றது காந்திகிராம கிராமிய உயர் கல்வி நிறுவனம். இதன் பின்னர்தான் கலை, அறிவியல் பாடங்கள் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றன. ஒவ்வொரு துறை மாணவர்களுக்கும் தனித்தனியே வகுப்புகள் நடைபெறும். தமிழ் மொழிப் பாடம் மட்டும் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளைச் சார்ந்த அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக நடத்தப்படும். பொதுக்கூட்டம்போல் பெருங் கூட்டமாக மாணவர்கள் நூற்றுக்கணக்கில் கூடுகிற வகுப்பறையில் ஒலிப்பெருக்கி இன்றி, குரலை உயர்த்திப் பாடம் நடத்திய பின்னரே வருகைப் பதிவு எடுப்பது வழக்கம்.
ஒரு நாள் இரண்டு முறை, “உள்ளேன் அம்மா…” என்று ஒரே குரல் ஒலித்தது. வகுப்புக்கு வராத நண்பனுக்காகக் குரல் கொடுத்து அன்றைக்குப் பிடிபட்டவன் சீனிவாச கௌசிகன்.
கிராமத் தொழில் மற்றும் நிர்வாகம் படித்துவந்த மாணவன். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பான். எதைச் சொன்னாலும் சட்டெனப் புரிந்துகொள்வான். நேராகக் கேள்விகளைக் கேட்கும் புத்திகூர்மை உடையவன். எதையும் குறிப்பறிந்து செயல்படும் அவனது பண்பு சிறப்பானது.
அனைத்து மாணவர்களோடும் அன்பாகப் பழகும் சீனிவாச கெளசிகன், நியாயத்தின் பக்கம் குரல் கொடுக்கும் மாணவனும்கூட. தான் சரியென உறுதியாக நம்பும் விஷயத்துக்குக் குரல் கொடுக்கத் தயங்க மாட்டான். ‘மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை’ என்ற எண்ணத்திலிருந்த சிறந்த மாணவர்களில் சீனிவாச கெளசிகனும் ஒருவன்.
அன்றைய காலகட்டத்தில், ஆசிரியர்- ஆசிரியர் அல்லாதார்; மாணவர் - முன்னாள் மாணவர் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆசிரியர் அல்லாதோர் சங்கத்தினர் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, காந்திய வழியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒருமாத காலமாக நடத்தினர். இந்த நிகழ்ச்சி மாணவர்களின் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மாணவர்களும் கோரிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டு, போராட்டம் நடத்தினர். வளாகச் சூழலின் அமைதி குலைந்தது. சீரமைக்க முனைந்த நிர்வாகத்தினர் பல்வேறு முயற்சிகளுக்கிடையே நான்கு மாணவரைக் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்தனர். நால்வரில் ஒருவனாக சீனிவாச கௌசிகனும் இருந்தான்.
அது தேர்வு நேரம் வேறு. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளானது. என்னை ‘அம்மா’ என்று வாய் நிறைய அன்பாக அழைக்கும் மாணவர்களுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்தேன். நீதிமன்றம் மூலம் தேர்வெழுத அனுமதி பெற, மாணவர்களுக்கு உதவினேன். சென்னை உயர் நீதிமன்ற ஆணையைப் பெற்று தண்டனைக்குள்ளான நால்வரும் தேர்வெழுதி, அதில் வெற்றியும் பெற்றனர். சீனிவாச கௌசிகன் மட்டும் வழக்குச் செலவுக்கான தொகையுடன் என் வீட்டில் வந்து நின்றான். தொகையை வாங்க மறுத்து, வாழ்த்தி அனுப்பினேன்.
படித்து முடித்த பின்னர், ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தும் தனது சகோதரியிடம் பயிற்சி பெற்றான். அதன் பயனாக, சொந்தமாக ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை சென்னையில் தொடங்கி, இளம் தொழில்முனைவரானான் சீனிவாச கௌசிகன்.
2003-ம் ஆண்டில் இதயவியல் மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் செல்ல நேர்ந்தது. பரிசோதித்த மருத்துவர், ‘இதயத்திலிருக்கும் அடைப்பை உடனே நீக்கவில்லையெனில், உயிருக்கே ஆபத்து’ என்று அச்சுறுத்தினார். பயணச் செலவுக்கென்று எடுத்துச் சென்ற தொகை இதய சிகிச்சை செலவுக்கு எம்மாத்திரம்? சட்டென நினைவில் வந்தான் சீனிவாச கௌசிகன்.
அழைத்தவுடனே, ‘உள்ளேன் அம்மா…’ என்று பெருந்தொகையுடன் வந்து நின்றான். மகனிருக்க மலைப்பு எதற்கு என்பது போல உடனிருந்து உதவினான். எனது இதயத்தின் அடைப்பை நீக்க கெளசிகன் உதவுவான், வருவான் என்றா, அவனது கல்லூரி வாழ்க்கையில் ஏற்பட்ட இடைஞ்சலை நான் நீக்கினேன்? எனது சென்னைப் பணிகளுக்கும் பயணங்களுக்கும் இன்றும் துணையாக இருக்கிறான் என் மாணவன் சீனிவாச கௌசிகன்.
எனது நாற்பத்தியொரு வருட (1974 முதல் 2015வரை) ஆசிரியப் பணியில் பெயர் குறிப்பிட்டுச் சொல்லவும் நினைவில் நிறுத்திப் பாராட்டவும் ஆயிரமாயிரம் மாணவர்கள் என் கண்களில் நிழலாடுகின்றனர். அத்தகைய மாணவர்களுள் ஒருவனே சீனிவாச கெளசிகன்.
கட்டுரையாளர் : தமிழ்த் துறை முன்னாள் தலைவர்,
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம். காந்திகிராமம்.