

இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தையும் சமூக வலைதளங்களையும் பயன்படுத்துவதில் வயதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. யார் வேண்டுமானாலும் இவற்றைப் பயன்படுத்தி ஒரே இரவில் ஓஹோவென வைரல் ஆகிவிடலாம். இதற்கு தற்போது கேரளத்தைச் சேர்ந்த ஒரு முதிய தம்பதி உதாரணமாகியிருக்கின்றனர்.
‘ஜூடோபியா’ என்கிற அனிமேஷன் படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற படமாகும். இந்தப் படத்தில் பிரபலமான செல்ஃபி காட்சியைத்தான் அந்தத் தம்பதி உருவாக்கி சமூக வலைதளங்களில் உலவவிட்டது. ரீல்ஸாக வெளியிட்ட இந்தக் காணொளி, சக்கைப் போடு போட்டிருக்கிறது. ஒரு கோடிப் பார்வைகளைக் கடந்துவிட்ட இந்தக் காணொளி, இன்னும் அதே வேகத்தில் பார்வைகளைப் பெற்று வருகிறது. இதனால், கேரளத்தில் இந்தத் தம்பதி புகழ்பெற்றுவிட்டனர். ஒரு காணொளிக் காட்சி மூலம் வைரலான அவர்கள் 60 வயதான ரெட்னம்மாவும் 70 வயதான துளசிதரனும்தான். இவர்கள் ரீல்ஸில் பதிவிடுவதற்கு பேரன்கள் உதவியிருக்கின்றனர்.
சமூக வலைதளத்தில் கோடிப் பார்வைகளைப் பெற 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸே படாதபாடுபடுகிறார்கள். ஆனால். இந்த முதியவர்கள் அசால்ட்டாக, ஒரு கோடிப் பார்வையைக் கடந்து 90ஸ், 2கெ கிட்ஸ்களையே மிரள வைத்துள்ளனர்.
இப்படியும் ஒரு கின்னஸ் சாதனை!
கின்னஸ் சாதனைகளுக்குப் பஞ்சமே இல்லை. இந்தச் சாதனையைப் படைக்க எந்த ஒரு செயலும் தடையும் இல்லை. வித்தியாசமான எதுவும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துவிடும். அப்படி ஒரு சாதனையை அமெரிக்காவில் 18 வயதான ஒருவர் படைத்திருக்கிறார். அவருடைய பெயர் கேமரூன். நியூயார்க்கைச் சேர்ந்த இவரும் ஜூலியனும் இணை பிரியாத தோழர்கள். இவர்களில் ஜூலியன் ஒரு ட்ரோன் பைலட்..
எனவே, ஜூலியனிடம் ட்ரோனிலிருந்து விழும் பந்தைப் பிடித்து சாதனைப் படைக்க வேண்டும் என்று கேமரூன் கேட்டிருக்கிறார். இதற்கு ஜூலியனும் ஒத்துக்கொள்ளவே, 2 மாத காலப் பயிற்சிக்குப் பிறகு அண்மையில் அந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார் கேமரூன். அதாவது. ட்ரோன் மூலம் 469.5 அடி உயரத்திலிருந்து டென்னிஸ் பந்து வீசப்பட்டது. அதை கீழே சரியாகக் கணித்து கேமரூன் பிடித்து அசத்தினார். இவ்வளவு உயரத்திலிருந்து வீசப்பட்ட பந்தை இதுவரை யாரும் பிடித்தத்தில்லையாம். அதனால், கேமரூனின் சாதனை கின்னஸில் இடம் பிடித்துவிட்டது.
காணொளியைக் காண: https://rb.gy/0tfik1
இது சாதாரண மெனு இல்ல!: பொதுவாகப் பெரிய ஹோட்டல்களில் நுழைந்தால், முதலில் மெனுகார்டைத்தான் நம் கைகளில் திணிப்பார்கள். அந்த மெனுவில் உள்ள உணவையும் அதன் விலையையும் பார்த்து ஆர்டர் செய்வோம். மெனுவில் உள்ள உணவுவகைகளின் விலை அதிகமாக இருந்தால், அவற்றை அப்படியே ஓரங்கட்டிவிடுவோம். ஆனால், ஒரு மெனு மலைக்க வைக்கும் அளவுக்கு ஏலம் போயிருக்கிறது. அப்படி அது என்ன மெனு என்று யோசிக்கிறீர்களா?
அது, டைட்டானிக் மெனு. உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பல் 1912இல் இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு அமெரிக்காவுக்கு சென்றது. அந்தப் பிரம்மாண்ட கப்பல் நான்கு நாட்களிலேயே கடலில் மூழ்கியது. கப்பல் மூழ்கி நூறு ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதிலும், அது பற்றிய சுவாரசியமான செய்திகள் அவ்வப்போது வரவே செய்கின்றன. அந்த வகையில் கப்பல் மூழ்கிய இரவில் முதல் வகுப்பில் பயணம் செய்த பயணிகளுக்கு பரிமாறப்பட்ட உணவுவகைகளின் மெனு சில மாதங்களுக்கு முன்பு கிடைத்தது.
அந்த மெனுவை பிரிட்டன் ஏல நிறுவனம் அண்மையில் ஏலம் விட்டது. அந்த மெனு இந்திய மதிப்பில் ரூ.85 லட்சத்துக்கு ஏலம் போயிருக்கிறது. ஒரு மெனுகார்டே இவ்ளோ விலைக்கு வாங்கப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறதா, இல்லையா?