

ஸ்பாடிஃபை, ஐ-டியூன் மியூசிக், யூடியூப் மியூசிக் வருவதற்கு முன்பு கேசட்டுகளில் மூழ்கியிருந்த காலம் அது. விருப்பப் பாடல்களைத் தேர்வு செய்து கேசட்டில் ரெக்கார்டு செய்து ரசித்த காலம் அவ்வளவு இனிமையானது. அதன் நீட்சியாக அறிமுகமானதுதான் ‘பிளே லிஸ்ட்’ கலாச்சாரம். ஒரே தளத்தில் பிடித்த பாடல்களை எங்கும் எப்போதும் கேட்டு ரசிக்கலாம். சமூக வலைதள வரவுக்குப் பிறகு இசைப் பகிர்தல் இன்னும் எளிமையாகிவிட்டது. பல புதிய வழிமுறைகள் வந்துவிட்ட நிலையில், இன்றைய தலைமுறை இணையத்தில் இசையைக் கொண்டாடி மகிழ்கிறது.
அந்த வகையில் ‘வயர்டு டு மியூசிக்’ என்கிற ஃபேஸ்புக் குழு வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எங்கும் இசை எதிலும் இசை என்பதைத் திரையிசை, சுயாதீன இசை என இசைப் பாடல்களைப் பற்றி மட்டும் விவாதிக்கிறது இந்தக் குழு. கடந்த 2020இல் இசை ஆர்வலர் ரவி கிரண் அவருடைய நண்பர்களோடு இணைந்து தொடங்கியதுதான் இக்குழு. தற்போது இக்குழுவில் 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். பெரும்பாலும் சர்ச்சைகளையும் ரசிகர் மோதல்களையும் தவிர்த்து இக்குழுவை நிர்வகித்து வரும் ரவி கிரண் ‘வயர்டு டு மியூசிக்’ பற்றி பகிர்ந்துகொண்டார்.
சமூக வலைதளத்தில் இசை: “கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தபோது பெரும்பாலானோருக்கு இசையே துணையாக இருந்தது. அதே நேரத்தில் ஸ்பாடிஃபை, அமேசான் மியூசிக் போன்று ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம்களும் பிரபலமாகிக் கொண்டிருந்தன. அதாவது, ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் விருப்பப் பாடல்களை கேட்கலாம் அல்லது பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம். இந்தச் செயலிகளில் அவரவர் விருப்ப பாடல்களைத் தொகுத்து ‘பிளே லிஸ்ட்’ அமைத்துக் கொள்ளலாம். இப்படி உருவாக்கப்படும் பிளே லிஸ்ட்களை பிறருடன் பகிரவும், இசைக் குறித்து விவாதிக்கவும் தொடங்கப்பட்டதுதான் ‘வயர்டுடு மியூசிக்’ குழு.
ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பர்கள், எந்த வயதினரானாலும் இக்குழுவில் இணையலாம். அடிப்படையில் அவர் இசைப் பிரியராக இருந்தால் போதுமானது. இக்குழுவை நிர்வகிக்க சிலர் ‘அட்மின்’ஆக பொறுப்பில் உள்ளனர். ஒரு பாடலை, கலைஞரைப் பாராட்டவும், பலர் கவனிக்கத் தவறிய இசையைத், தகவல்களைப் பகிரவும், விவாதிக்கவும் இக்குழு பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு இசை அமைப்பாளர்களின் ரசிகர் மோதலைத் தவிர்க்க சர்ச்சையான பதிவுகள் ஏதேனும் இருந்தால் நீக்கிவிடுவோம்.
இத்தளத்தை ஆரோக்கியமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தவே விரும்புகிறோம்” என்கிறார் ரவி கிரண். இசை தொடர்பான பதிவுகளைத் தவிர இசை நிகழ்ச்சிகள், இசை விமர்சனங்கள், நினைவுகளைக் கிளரும் ‘நாஸ்டால்ஜியா’ பதிவுகளையும் இக்குழுவில் பகிர்கிறார்கள். சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ஓர் இசை நிகழ்ச்சி பற்றிய ஆரோக்கியமான விவாதமும், கருத்துகளையும் இசைப் பிரியர்கள் பகிர்ந்துகொண்டது கவனத்தைப் பெற்றது.
பிளே லிஸ்ட் பகிர்தல்: துள்ளல் இசை, சோகப் பாடல்கள், காதல் பாடல்கள் போன்ற பிரிவுகளின்கீழ் வானொலி, தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சிகளைக் கேட்டிருப்போம். தற்கால பிளே லிஸ்ட் கலாச்சாரத்தில் பூ, கண்கள், ஊடல், நம்பிக்கை என ஒரு சொல் அல்லது கருத்தையொட்டி பிளே லிஸ்ட்களை உருவாக்கி வருகிறார் சென்னையைச் சேர்ந்த விஜய் ராகவன். பிளே லிஸ்ட் உருவாக்குவது எப்படி என்கிற கேள்வியை அவரிடம் முன்வைத்தோம். “இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா எனப் பெரும்பாலும் இசை அமைப்பாளர்கள், இசைக் கலைஞர்களை மையப்படுத்தி அவர்களது ஹிட் பாடல்கள் அடங்கிய பிளே லிஸ்ட்கள் அதிகம் இருக்கின்றன.
நான் ஒரு சொல் அல்லது கருத்தை மையப்படுத்திய பாடல்களைத் தொகுத்து பிளே லிஸ்ட்களை உருவாக்கி வருகிறேன். ஸ்பாடிஃபை போன்ற ஏதாவதொரு பாடல்களுக்கான செயலியில் பிளே லிஸ்ட் உருவாக்கி, சரியான தலைப்பிட்டு, விருப்ப பாடல்களைத் தேடி அதில் சேர்க்கலாம். சில பாடல்கள் விடுபட்டிருந்தாலும் நினைவுக்கு வரும்போது அவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து கொண்டே இருக்கலாம். இந்த பிளே லிஸ்ட்டை பிறர் அறிய சமூக வலைதளத்தில் பகிரலாம்” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் விஜய் ராகவன்.
புதுமைகளைப் புகுத்தி: ‘ஏ.ஆர் ரகுமான் ஹிட்ஸ்’ எனத் தேடினால் பல பிளே லிஸ்ட்களைப் பார்க்க முடியும். ஆனால், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ஒரு பாட்டின் முடிவிலிருந்து தொடங்கும் அடுத்த பாடலை வரிசைப்படுத்தி இருக்கிறார் ரவி கிரண். அதாவது, ‘அரபிக் கடலோரம்...’ பாட்டு முடியும்போது ‘முக்காலா முக்காப்புல்லா...’ பாட்டு தொடங்கும். ஒரே மாதிரியான இசையில் அமைந்த பாடல்கள் இவை. இப்படி முடிவிலிருந்து தொடங்கும் பாடல்களைச் சேர்த்து 29 மணி நேரம் ஓடக்கூடிய பிளே லிஸ்ட் ஒன்றை தயார் செய்திருக்கிறார் அவர். “‘Immersive Loop – AR Rahman’ என்கிற தலைப்பில் இந்த பிளே லிஸ்ட்டை உருவாக்கி இருக்கிறேன்.
அதாவது நீங்கள் கேட்கும் ஒரு ரஹ்மான் பாடலின் முடிவிலிருந்து அதைப் போலவே தொடங்கக்கூடிய மற்றறொரு பாடலைக் கேட்பீர்கள். இது ஒரு ‘லூப்’. இப்படி பிளே லிஸ்ட் உருவாக்கத்தில் புதுமைகளையும் புகுத்தலாம். ‘ராஜா ராஜாதான்’ என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், குறிப்பிட்டு ராஜா பயன்படுத்திய ஒரு ராகத்தின் கீழ் அமைந்த பாடல்கள், ரஹ்மானின் கவனம் பெறாத பாடல்கள் எனப் புதுமையாக பிளே லிஸ்ட்களை அமைக்கலாம். இது போன்ற பிளே லிஸ்ட்கள் இசைப் பிரியர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெறும்” என்கிறார் ரவி கிரண். இசை என்பதே கொண்டாடுவதற்குத்தானே. இப்படி மாறுபட்ட வழிகளில் இசையைக் கொண்டாடி வருகிறது இளைய தலைமுறை.