Last Updated : 12 Jan, 2018 11:15 AM

 

Published : 12 Jan 2018 11:15 AM
Last Updated : 12 Jan 2018 11:15 AM

காமிக்ஸ் ஹீரோ: வேதாளரின் புத்தாண்டு போனஸ்!

“இப்ப வர்ற காமிக்ஸ்லாம் நல்லாவா இருக்கு, சும்மா சூப்பர் ஹீரோக்களை வச்சுகிட்டு கதையை எழுதிட்டு இருக்காங்க. அந்தக் காலத்துல வேதாளர், மந்திரவாதி மாண்ட்ரேக், லோதர் காமிக்ஸ் எல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா?” இப்படி கருத்து சொல்பவர்கள் ஏராளம். அவர்களின் விருப்பத்தை ஆஸ்திரேலியாவின் ஃப்ரூ காமிக்ஸ் நிறுவனம் இந்தப் புத்தாண்டில் நிறைவேற்றிவிட்டது. 1948-ம் ஆண்டு முதல் வேதாளர் கதைகளை வெளியிட்டுவரும் இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் காமிக்ஸில் இந்த சாகச கூட்டணியினர் தோன்றுகிறார்கள்.

வேதாளர் காமிக்ஸ் கதைகள்

1936-ம் ஆண்டு முதல் லீ பாஃக்கால் உருவாக்கப்பட்ட வேதாளர் கதைகள் தினசரி செய்தித்தாளில் உலகமெங்கும் வந்துகொண்டு இருக்கிறது. திங்கள் முதல் சனிக்கிழமைவரை தினமும் ஒரு வரிசையில் மூன்று முதல் நான்கு கட்டங்களில் வரும் கதையை ‘டெய்லி ஸ்டிரிப்’ என்பார்கள். மூன்று வரிசையில், ஒன்பது முதல் 12 கட்டங்களில் ஞாயிறு அன்று மட்டும் வருவதை ‘சன்டே ஸ்டிரிப்’ என்று சொல்வார்கள். படைப்பாளி லீ பாஃக்கின் மறைவுக்குப் பின்னர், டோனி என்ற எழுத்தாளர்தான் இரண்டு தொடர்களுக்கும் கதை எழுதி வருகிறார். ஆனால், இரண்டு தொடருக்கும் வெவ்வேறு ஓவியர்கள் வரைந்துவருகிறார்கள். தனி கதையாக வரும் தினசரிகளில் மைக் மான்லியும் தொடராக வரும் ஞாயிறுகளில் டெர்ரி பீட்டியும் வரைகிறார்கள்.

வேதாளருக்கு முன்பாக லீ பாஃக் உருவாக்கிய இன்னொரு காமிக்ஸ் ஹீரோதான் மந்திரவாதி மாண்ட்ரேக். இவரது தோழரான லோதர், ஆப்பிரிக்காவின் 12 நாடுகளுக்கு பட்டத்து ராஜா. ஆனால், தனது பதவியைத் துறந்து, நீதிக்காகப் போராட மாண்ட்ரேக்குடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். 2013-லிருந்து மாண்ட்ரேக்கின் புதிய கதைகள் வருவது நின்றுவிட்ட சூழலில், புதிய வேதாளர் கதையில் மாண்ட்ரேக்கையும் லோதரையும் ‘கெஸ்ட் ரோல்’ செய்ய வைத்தால் எப்படி இருக்கும் என்று எண்ணியதன் விளைவுதான் இந்தப் புத்தகத்தின் முதல் கதை.

தேர்தலும் பிரச்சினைகளும்

ஆப்பிரிக்காவின் 12 நாடுகளுக்கும் அதிபர் தேர்தல் நடக்கிறது. லோதரின் உறவினரான மோனார் அதிபர் பதவிக்குப் போட்டியிட, முன்னாள் சர்வாதிகாரி ஒடாங்கோ அவரைக் கொன்றுவிட்டு, அதிபராக நினைக்கிறார். சகோதரரைக் காப்பாற்ற அமெரிக்காவிலிருந்து வரும் லோதரை ஆபத்து சூழ்கிறது. வேதாளரின் உதவியை மாண்ட்ரேக் நாடுகிறார். ஆனால், வேதாளருக்கு முன்பாகவே ஒரு மர்ம நபர் லோதருக்கு வரும் ஆபத்துகளை எல்லாம் தடுத்துக்கொண்டே இருக்கிறார். அந்த மர்ம நபருடன் வேதாளரும் இணைந்து தேர்தலை சுமூகமாக நடத்த உதவுவதே கதை.

எதிர்காலம்

பதின்ம வயது இளைஞனை ஏற்றிக்கொண்டு சீனாவுக்குச் செல்ல வேண்டிய விமானம், ஆப்பிரிக்கக் காடுகளில் விபத்துக்குள்ளாகிறது. அந்த இளைஞன் தப்பித்துச் செல்கிறான். அவனை வேதாளர் காப்பாற்றி, அமெரிக்காவுக்கே திரும்ப அனுப்பிவைக்கிறார். அதன்பிறகு அந்த இளைஞனைப் பற்றி தெரிந்துகொண்டு, வேதாளர் அமெரிக்காவுக்குப் போகிறார். அமெரிக்க மாஃபியா கும்பல், சீன ரவுடிக் கும்பல் என்று பலரும் கொல்லத் துடிக்கும் அந்த இளைஞன் யார் என்ற கேள்விகளுக்குப் பதில் தேடும்போது ஒரு மர்ம வீரன் வேதாளருடன் மோதுகிறான். அந்த இளைஞனைக் காப்பாற்றி அவனை நல்வழிக்குத் திருப்புகிறார், வேதாளர்.

தபால்தலை பிரச்சனை

புதுமையாக எதையாவது செய்யத் துடிக்கும் ஒரு தொழிலதிபர், வேதாளரைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவரது தபால்தலையை வெளியிட்டு வியாபாரம் செய்ய நினைக்கிறார். அதிபர் லுவாகா தடுத்தும், அவர் தபால்தலை வெளியிடும் முயற்சியைக் கைவிடவில்லை. ஆகவே, வேதாளர் நேரிடையாகத் தலையிட்டு, ஏன் தன்னைப் பற்றிய தபால் தலையை வெளியிடக் கூடாது என்று ‘புரியும்படி’ சொல்கிறார்.

ஆண்டு முழுவதும் வரும் தினசரி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காமிக்ஸ் தொடர்களை ஒன்று சேர்த்து, ஒரே புத்தகமாக வருடத்தின் தொடக்கத்திலேயே படிக்க வசதியாக ஃப்ரூ காமிக்ஸ் ஒரு முழுவண்ணத் தொகுப்பாக 100 பக்கங்களில் இதை வெளியிட்டிருக்கிறார்கள். காமிக்ஸ் ரசிகர்கள் தவற விடக்கூடாத புத்தகம் இது. அதிலும் படைப்பாளரான லீ பாஃக்கையே கதைச் சொல்லியாக வைத்து, அவருக்கு மகத்தான மரியாதை செய்த காமிக்ஸ் இது.

தலைப்பு: The Phantom (வேதாளர்)

கதாசிரியர்: டோனி டெ பால்

ஓவியர்: டெர்ரி பீட்டி & மைக் மான்லி

வெளியீடு: 2017, டிசம்பர் (100 முழு வண்ணப் பக்கங்கள், 598 ரூபாய்)

பதிப்பாளர்: ஃப்ரூ காமிக்ஸ்

குறிப்பு: 2016-ல் தினசரிகளில் வந்த கதைகளின் முழுத் தொகுப்பு

Artist Mike Manley Photo 1ஆசிரியர் டோனி டெ பால்

20 ஆண்டுகளாக பத்திரிகையாளராகப் பணிபுரிந்தவர் டோனி. 1993-ல் ஸ்வீடனிலிருந்து வெளியாகும் வேதாளரது காமிக்ஸ் புத்தகங்களுக்கு கதை எழுத ஆரம்பித்தார். 1999-ல் வேதாளர் கதைகளை உருவாக்கிய லீ பாஃக் மறைந்தபோது, வேதாளரின் தினசரி காமிக்ஸ் தொடர்களை எழுத கிங் ஃபீச்சர்ஸ் சிண்டிகேட் இவரைத்தான் தேர்வு செய்தது. 60 வயதான இவர், வேதாளரின் கதைகளில் பல புதுமைகளைக் கொண்டுவந்தவர். வேதாளரின் எதிரியான பைத்தன் கதாபாத்திரத்தை உருவாக்கியவது இவர்தான்.

ஓவியர் மைக் மான்லி

56 வயதான மைக்கின் தாத்தா ஓர் ஓவியர். அதனாலேயே ஓவியங்கள் மீது இவருக்கும் ஆர்வம். தினமும் பள்ளியிலிருந்து புத்தகக் கடைக்குச் சென்று, அங்கே காமிக்ஸ் படித்துவிட்டுத்தான் வீட்டுக்கே திரும்புவார், மைக். முறையாக ஓவியம் கற்ற பிறகு கமர்ஷியல் காமிக்ஸ்களில் (சூப்பர்மேன், பேட்மேன், கேப்டன் அமெரிக்கா) பணியாற்றினார். கடந்த 2 ஆண்டுகளாக வேதாளர் கதைகளுக்குப் படம் வரைகிறார். இது மைக்கின் மூன்றாவது வேதாளர் கதை.

- கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர்
தொடர்புக்கு: TamilComicsUlagam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x