நூலாசிரியர்களான ஃபேஸ்புக் பதிவர்கள்

நூலாசிரியர்களான ஃபேஸ்புக் பதிவர்கள்

Published on

எத்தனையோ பிரபலங்களின் ஃபேஸ்புக் பதிவுகள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஆனால், ஃபேஸ்புக் பதிவுகள் மூலம் பிரபலமடைந்த இளைஞர்களின் எழுத்துகள் புத்தக வடிவங்களாகியிருப்பது ஒரு புதிய போக்கின் தொடக்கத்தை உருவாக்கியிருக்கிறது.

புதுச்சேரியைச் சேர்ந்த வாசுகி பாஸ்கர் ஃபேஸ்புக்கில் சமூகநீதி பற்றிய பதிவுகளுக்காக ஆயிரக்கணக்கான லைக்குகளைப் பெறுபவர். தன் முதல் புத்தகம் பற்றி அவர் கூறியபோது, “ சமூக நீதி பற்றி ஜனரஞ்சகமாகவும் ஏற்றுக்கொள்ளும்படியும் சொல்ல சில உத்திகளை இன்று கையாள வேண்டியிருக்கிறது. வாசகர்களுக்குப் புரிகிற மாதிரி சொல்லவில்லை என்றால், சொல்வதே வீண். அதற்கு ஃபேஸ்புக்கை ஒரு தளமாகப் பயன்படுத்தினேன். அதைப் பார்த்துவிட்டு வாசக சாலை நண்பர்கள் புத்தகம் எழுதச் சொல்லி அணுகினார்கள். சற்று தர்க்கரீதியாக எழுத வேண்டும் என்று அதற்காகக் கொஞ்சம் ஆய்வில் ஈடுபட்டேன்.

vasuki baskar வாசுகி பாஸ்கர்right

உணர்வுப்பூர்வமாக மட்டும் கருத்தைப் புகுத்தாமலிருக்க நிறைய விஷயங்களைப் படித்துத் தெளிவுபெற வேண்டியிருந்தது. கிடைத்த வாய்ப்பில் கொடுத்த நேரத்துக்குள் இவற்றை எழுதியிருக்கிறேன். இன்னும் நிறைய எழுத வேண்டியிருக்கிறது” என்கிறார் வாசுகி பாஸ்கர்.

இந்தப் புத்தகத்தில் 19 கட்டுரைகளை வாசுகி பாஸ்கர் எழுதியிருக்கிறார். புறக்கணிக்கப்பட்டவை என்று சொல்லப்படும் நம்மோடே இருக்கிற நம்மை விட்டு விலக முடியாத விஷயங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அதற்காகத்தான் புத்தகத்துக்கு ‘மற்றமையை உற்றமையாக்கிட’ என்ற தலைப்பை வைத்ததாகச் சொல்கிறார் பாஸ்கர். ‘மரண கானா விஜியும் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகளும்’ என்ற கட்டுரை, சாதியை ஒழிக்க என்னென்ன தேவை என்பதை விளக்குகிறது எனக் குறிப்பிடுகிறார் பாஸ்கர்.

ராஜசங்கீதன் ஜானின் முகநூல் பதிவுகளே அவரது முதல் புத்தகமாகியிருக்கின்றன. அவர் எழுதிய பதிவுகள் சற்று விரிவுபடுத்தப்பட்டு ‘சொக்கட்டான் தேசம்’ என்ற தலைப்பில் 39 கட்டுரைகள் கொண்ட புத்தகமாக மலர்ந்துள்ளது.

rajasangeethan john 2 ராஜசங்கீதன்

“நம் நாட்டில் அரசியல் பகடைகள் மட்டுமல்லாமல் சித்தாந்தங்கள், உளவியல் ரீதியாக ஏற்படும் தாக்கங்கள் அதன் சார்பில் ஏற்படும் புரிதல்கள், அவை கொடுக்கும் முடிவுகள் என இவையெல்லாம் வாழ்க்கையை வெவ்வேறு விதமாக மாற்றுகின்றன. அதைக் குறிக்கத்தான் ‘சொக்கட்டான் தேசம்’ என்ற தலைப்பை வைத்தேன்” என்று தலைப்புக்கான விளக்கத்துடன் தொடங்குகிறார் ராஜசங்கீதன்.

புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றிப் பேசியவர், “அம்பேத்காரியர்கள், பெரியாரியர்கள், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட முற்போக்கு சக்திகள் இடையிலான பிளவுகள் களையப்பட்டு ஒருங்கிணைந்த சிந்தனையும் செயல்பாடும்தான் சரியான தீர்வைக் கொடுக்க முடியும் என்பதை வலியுறுத்துவதே இந்தப் புத்தகத்தின் அடிநாதம்.

ஆண்-பெண் உறவு, அதற்குப் பின்னால் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் தலையீடு, உளவியல் சிக்கல்கள் பற்றியும் கட்டுரைகள் முன்னிறுத்துகின்றன சாதி, மத, உழைப்பு ரீதியான சுரண்டல்களைப் பார்த்து எழும் கோபத்தையும் ஆற்றாமையையும் எழுத்தாக வெளிப்படுத்தத் தொடங்கினேன். ஃபேஸ்புக் பதிவுகளை தொகுப்பாகக் கொண்டுவருவதற்கான காரணம், ஒரு காலகட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆவணமாக இது இருக்கும் என்ற ஆர்வத்தில்தான்” என்று தன் ஃபேஸ்புக் பதிவு குறித்தும் அது புத்தகமான கதையையும் விவரிக்கிறார் ராஜசங்கீதன்.

இந்த இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டுள்ள வாசகசாலை பதிப்பகமும் இளைஞர்களால் நடத்தப்படுவதுதான். பல துறைகளைச் சேர்ந்த இளைஞர்களால் நடத்தப்படும் வாசகசாலை என்னும் இலக்கிய அமைப்பு ஒரு பதிப்பகத்தை தொடங்கி ஓர் ஆண்டுக்குள் எட்டுப் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரும் திரைப்பட உதவி இயக்குநருமான அருண் பதிப்பகப் பயணத்தை விளக்குகிறார்.

“தஞ்சை ப்ரகாஷ் எழுதி நீண்ட காலமாகப் பதிப்பில் இல்லாத அவரது ‘மிஷன் தெரு’ என்ற குறுநாவல்தான் நாங்கள் உரிமைபெற்று வெளியிட்ட முதல் நூல். அப்போதுதான் நமக்குப் பிடித்த எழுத்தாளர்களின் பதிப்பில் இல்லாத புத்தகங்களையும் பதிப்பகம் கிடைக்காத புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களையும் வெளியிடலாம் என்று முடிவுசெய்தோம். இந்த ஆண்டு நிறைய நண்பர்கள் இந்தப் பணியில் இணைந்துகொண்டதால் மேலும் ஏழு புத்தகங்களைப் பதிப்பித்துள்ளோம்” என்கிறார் அருண்.

சமூக நீதி, சாதி ஒழிப்பு சார்ந்த நிறைய புத்தகங்களை வெளியிடும் நோக்கத்துடன் செயல்படுவதாகச் சொல்கிறார் அருண். “களத்தில் இறங்கி வேலை செய்பவர்களின் அனுபவங்கள் எழுத்தாகப் பதிவுசெய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். அதனடிப்படையில் பா.மகிழ்நன் எழுதிய ‘நாடற்றவனின் முகவரியிலிருந்து’ என்ற கட்டுரைத் தொகுப்பு வந்திருக்கிறது. ஆனந்த் டெல்டும்டே, அம்பேத்கர் குறித்து எழுதிய கட்டுரைகளை மகிழ்நன் மொழிபெயர்த்து இணையதளங்களில் வெளியிட்டிருக்கிறார். ஏப்ரல் மாதம் அதைத் தொகுப்பாக வெளியிடுவதற்கான வேலைகள் நடக்கும்” என்கிறார் அருண்.

சென்னை புத்தகக் காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ், புதினம் புக்ஸ், பரிசல் புத்தக நிலையம், பனுவல் புத்தக நிலையம், கீழைக்காற்று, வெற்றிமொழி, அருவி பதிப்பகம், நாதன் புக்ஸ், நியு புக்லேண்ட்ஸ் உள்ளிட்ட கடைகளில் வாசக சாலையின் புத்தகங்கள் கிடைக்கின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in