

ராணுவத்தில் பணியில் இருந்தபோது உடல்நலப் பாதிப்பால் இடது காலை இழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சோலைராஜ், சீனாவில் ஹாங்சோவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதித்துக் காட்டியிருக்கிறார். ஆம், நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். இதன்மூலம் தமிழகத்துக்கும் தன்னுடைய சொந்த ஊருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அ.குமாரபுரத்தைச் சேர்ந்த தர்மராஜ் - ஈஸ்வரி தம்பதியின் மகன்தான் சோலைராஜ். 29 வயதான அவர் 18 வயதானபோது ராணுவத்தில் சேர்ந்தார். 21ஆவது மெட்ராஸ் பிரிவில் கார்கில் பட்டாலிக் க்ளேசியர் என்ற இடத்தில் 2 ஆண்டுகள் பாதுகாப்பு பணியில் சோலைராஜ் ஈடுபட்டிருந்தார். பனி உறையும் பகுதியில் பணியில் இருந்தபோது சோலைராஜூக்கு இடது காலில் பிரச்சினை ஏற்பட்டது.
செயற்கைக் காலில் பயிற்சி: ராணுவ மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இடதுகாலுக்கு ரத்தம் செல்வதில் பிரச்சினை இருப்பதை கண்டறிந்தனர். சோலைராஜின் இடது கால் முட்டிக்கு கீழ் பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 2018இல் அறுவை சிகிச்சை நடந்தேறியது. பின்னர் செயற்கைக் காலை பொருத்தி நடைப் பயிற்சி மேற்கொண்டுவந்தார்.
அப்போதுதான் பாரா விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் யோசனை சோலைராஜுக்கு வந்தது. இதனையடுத்து புனேவில் உள்ள பாரா விளையாட்டு பயிற்சி மையத்துக்கு சென்று நீளம் தாண்டுதல் பயிற்சியில் இணைந்தார். 2019 முதல் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முனைப்பு காட்டி வந்தார். டெல்லியில் கடந்த ஜூலையில் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தேர்வு நடைபெற்றது. இதில், சோலைராஜ் டி-64 என்ற பிரிவில் தேர்வானார்.
இந்தியாவுக்கு உழைப்பேன்: தற்போது நீளம் தாண்டுதலில் தேர்வானதற்கு நியாயம் சேர்த் திருக்கிறார். ஹாங்சோவில் நடை பெற்ற போட்டியில் சோலைராஜ் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார். இப்போட்டியில் சோலைராஜ் 6.80 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து இந்தச் சாதனையைப் படைத்தார். இலங்கையின் மத்தக கமாகே 6.68 புள்ளிகளுடன் வெள்ளியும், ஜப்பானின் மதாயோஷி கோட்டோ 6.35 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.
இந்த வெற்றியின் மூலம் தமிழ் நாட்டுக்கும் சோலைராஜ் பெருமைத் தேடித் தந்திருக்கிறார். இந்த வெற்றி குறித்து சோலைராஜ் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். “பாரா விளையாட்டுப் போட்டிகளில் உடல் பாதிப்புக்கு ஏற்ப பிரிவுகள் உள்ளன. நீளம் தாண்டுதலில் பங்கேற்றவர்களில் நான் மட்டுமே ராணுவ வீரர்.
காலை இழந்திருந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை. அதனால்தான் இரண்டாவது இன்னிங்ஸை தொய்வின்றி தொடங்கினேன். ஆசிய போட்டிகளில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போது சாதித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதும், இந்தியாவுக்கு உழைப்பதுமே என்னுடைய நோக்கம்” என்கிறார் சோலைராஜ்.