

“மனிதர்களின் மகிழ்ச்சிக்கானவைதான் எல்லாக் கலைகளும். இந்த அடிப்படையில்தாம் கலைகளின் வழியாகப் பலதரப்பட்ட மக்களையும் ரசனையின் வழியாக ஒன்றிணைக்க கலை விழாவை நடத்துகிறோம்” என்று கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா விழாவின்போது ஒரு பீடிகையுடன் பேசினார். அப்படி அவர் சொன்னது, ஊரூர் ஆல்காட் குப்பம் விழாவைத்தான்.
இசை, நடனம், நாடகம் முதல் பல நிகழ்த்து கலைகளின் வழியாக மனிதர்களிடையே உறவுப் பாலம் அமைத்து வருகிறது ஊரூர் ஆல்காட் குப்பம் விழா. இந்த விழாவுக்குப் பலதரப்பட்ட மக்களிடமிருந்து பெருகும் ஆதரவே இதை மக்களுக்கான விழாவாக அடையாளப்படுத்திவருகிறது. ஆண்டுக்கு ஆண்டு விழா நடக்கும் நாட்களின் எண்ணிக்கையும் அவற்றைக் காணும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
நான்காவது ஆண்டாக திருவள்ளூர் சமுதாயக்கூடத்தில் ஜனவரி 15 அன்று விழா தொடங்கியது. அய்யப்பதாசனின் தமிழ்ப் பக்திப் பாடல்களும் க்ரியா ஷக்தி குழுவினரின் ‘தி டேம்பெஸ்ட்’ நாடகமும் அரங்கேறியது. ஜனவரி 20 அன்று, சென்னை, ராகசுதா அரங்கத்தில் மல்லிப்பூ அண்ட் தி அல்வாஸ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. சோஃபியா அஷ்ரப், சுரேன், அக்ஷய், வினய் ஆகியோரின் ஒருங்கிணைவில் மணக்க மணக்க மல்லிப்பூவையும் சுடச் சுட அல்வாவையும் தங்களின் பாட்டின் வழியாக வெளிப்படுத்தினர்.
‘இயற்கையை அழிச்சாச்சி... செயற்கையை விதைச்சாச்சி...’ பாடலில் இயற்கையான வளங்களை அழித்து எப்படிச் செயற்கைக்கு அரசு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது என்பதைக் கோடிட்டுக் காட்டினர். ‘பனிப்பாறை கரைஞ்சாச்சு..., நாடே எரிஞ்சாச்சு...’ எனும் பாடல் புவி வெப்பமயமாதல் குறித்த எச்சரிக்கை மணியை ஒலித்தது. ‘சாயங்கால கனவு சாயாத நினைவு’ மெலிதான தென்றல் என்றால், சுரேனும், சோஃபியாவும் பாடிய பழம், பீட்டர் பாடல் காதல் ரகளை!
வெட்டிப் பையனின் வேலையைச் சொல்லும் ‘காஞ்சி போச்சி குண்டு மல்லி, ஆறிப்போச்சி ஃபில்டர் காபி, என்ன செய்வேன்’ பாடலை ரசிகர்களின் பங்களிப்போடு சோஃபியா வழங்கியது, ரசிகர்களின் ஈடுபாட்டை உணர்த்தியது. ‘பொய் வாக்கு’ பாடலை அரசுக்கு டெடிகேட் செய்தார்கள். அந்தப் பாடலுக்கு ரசிகர்களிடம் பலத்த ஆரவாரம் எழுந்தது.
காஞ்சிபுரம் கட்டைக்கூத்து சங்கத்திலிருந்து ஏறக்குறைய 28 கலைஞர்கள் அபிமன்யு கட்டைக்கூத்தை நடத்தினர். கட்டைக்கூத்தில் இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் ஆகியவை மூன்றும் சரிவிகிதத்தில் சங்கமித்தன. கிருஷ்ணன், அர்ச்சுனன் போன்ற பிரதான கதாபாத்திரங்களையும் பெண்களே ஏற்று நடத்தினர்.
பொதுவாக, திறந்தவெளியில் நடத்தப்படும் இந்த நிகழ்த்து கலையைக் குளிரூட்டப்பட்ட அரங்குக்குக் கொண்டுவந்ததே பெரிய புரட்சி. கட்டைக்கூத்துக்கான இசையையும் பாடல்களையும் மேடையில் சில கலைஞர்கள் பாட, ரசிகர்கள் அமரும் இடத்தில் பிரம்மாண்டமான ஒப்பனைகளுடன் கூடிய அலங்காரங்களுடன் கலைஞர்கள் தங்களுக்கு நடுவில் ஆடுவதும் பாடுவதும் சண்டையிடுவதும் புதிய அனுபவமாக இருந்தது. கதையின் சம்பவங்களைச் சொல்வதற்கும் நகர்த்துவதற்கும் கட்டியக்காரனின் பிரவேசமும் அவரது நகைச்சுவை பொதிந்த வசனங்களும் பெரியவர்களைவிடக் குழந்தைகளை அதிகம் கவர்ந்தன.
முதல் கட்ட விழா திருவள்ளூரில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட விழா சென்னையில் தொடர உள்ளது.
ஊரூர் -ஆல்காட் குப்பம் நிகழ்வுகள்
ஜனவரி 27: பிரபல கர்னாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவின் கர்னாடக இசை நிகழ்ச்சி. மாலை 6 மணி. பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை.
பிப்ரவரி 3: மாலை 6 மணிக்கு பித்துக்குளியின் தமிழ் ராக் இசை நிகழ்ச்சி.
பிப்ரவரி 4: காலை 10 மணி முதல் எல்லையம்மன் கோயில், குப்பம் மீன் சந்தை, மீன் மார்க்கெட் - ஒரு கலாச்சார இடம் என்ற நிகழ்வு. பார்கூர் உடற்பயிற்சி மற்றும் தற்காப்புக் கலை நிகழ்ச்சி, பிரபு குழுவினரின் டக் ஆஃப் வார் போட்டி.
பிப்ரவரி 10: மாலை 3 மணி முதல். எல்லையம்மன் கோயில் கடற்கரை, கேடலிஸ்ட் குழுவினரின் சுவர் எழுத்து நிகழ்ச்சி. மாலை 5 மணி முதல் ஃபிரண்ட்ஸ் கலை குழு மற்றும் அவ்வை இல்லம் குழந்தைகளின் பறை ஊர்வலம். ஊரூர் ஆல்காட் குப்பம் குழந்தைகளின் தாடகை நாடகம், இயக்கம்: மதுஸ்ரீ முகர்ஜி. நாகூர் சுஃபி மூவரின் இஸ்லாமிய பக்திப் பாடல்கள். ஸ்ரீகாந்த் பாகவதரின் நாமசங்கீர்த்தனம். ஊரூர் கிராம நாடகக் குழுவினரின் ‘ஊர் வரலாறு நாடகம்’. கே.எஸ்.கருணாபிரசாத் (உதவி: அறிவழகன்). மெட்ராஸ் நடன கலை மற்றும் ஹை கிக்ஸ் வழங்கும் சமகால நடனம்.
பிப்ரவரி 11: மாலை 5:30 மணி முதல் வியாசர்பாடி கோதண்டராமன் அவர்களின் மாணவர்கள் வழங்கும் நாதஸ்வர ஊர்வலம். ஊரூர் ஆல்காட் குப்பம் குழந்தைகளின் சிலம்பாட்டம். பயிற்சி: தேவராஜ் மாஸ்டர். கதக் நடனம், தேவனீயா (ஜிக்யாசா கிரி). எண்ணூர் காட்டுக்குப்பம் குழந்தைகளின் ஆறுதான் உயிர் – வில்லுப்பாட்டு. ஸ்டக்காட்டோ குழுவினரின் (சுபஸ்ரீ தணிகாச்சலம்) சினிமா மற்றும் கானா பாடல்கள்.
படங்கள்: எல். சீனிவாசன்