

பைக்கிலேயே உலகம் சுற்றுவது, இந்தியாவைச் சுற்றுவது போன்றவை புதிது அல்ல. ஆனால், சென்னையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் பாலா மணிகண்டன் காஷ்மீரில் லே வரை சென்று திரும்பியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. வெற்றிகரமான இவருடைய பயணம் ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ அமைப்பாலும் அங்கீகரிப்பட்டிருக்கிறது, இதற்குக் காரணம், பாலா மணிகண்டன் முதல் முறையாக மின்சார பைக்கிலேயே லே சென்று திரும்பியதுதான்.
தனிப் பயணம்: கடலூர் மாவட்டம் நெய்வேலியைப் பூர்விகமாகக் கொண்டவர் பாலா மணிகண்டன். தற்போது சென்னை கிறித்துவ கல்லூரியில் காட்சி தொடர்பியல் (விஸ்காம்) துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பயணங்கள் மீது அதிக ஈடுபாடு கொண்ட அவர், அவ்வப்போது தனது ‘பேக்-பேக்’கை மாட்டிக்கொண்டு தனிப் பயணம் சென்று வருகிறார்.
இவருக்கு ஆசிரியர், ஒளிப்படக் கலைஞர், ஆய்வாளர் எனப் பல முகங்கள் உண்டு. அந்த வரிசையில் மின்சார ஸ்போர்ட்ஸ் பைக்கிலேயே லே வரை பயணம் சென்ற முதல் நபர் என்கிற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
மின் பைக்குள் பற்றிய விழிப்புணர்வு தற்போதுதான் ஏற்பட்டு வருகிறது. மின் பைக்கில் லே வரை சென்று வரும் யோசனை எப்படி ஏற்பட்டது என்கிற கேள்வியை பாலா மணிகண்டனிடம் முன்வைத்தோம்.
“அல்ட்ரா வைலட் எஃப்77 என்கிற மின்சார வாகனத்தைப் பார்த்தவுடன் எனக்குப் பிடித்துப் போனது. கியர் பைக்குகளுக்கு நிகரான தோற்றமும் செயல்திறனும் கொண்ட இந்த பைக்கை அறிமுகப் படுத்தப்பட்டவுடன் பதிவு செய்தேன். இந்த பைக் பெங்களூரு சென்று எடுத்து வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஊர் திரும்பும்போது பைக்கை ஓட்டியபடியே சென்னை வந்தடைந்தேன்.
மின்சார பைக்கில் நெடு தூரம் பயணம் செய்ததில் பெரிய சிரமம் ஏற்படவில்லை. அப்போதுதான் சென்னையிலிருந்து லே வரை செல்லும் எண்ணம் ஏற்பட்டது. இந்த ஆண்டு மே 21இல் தொடங்கிய எனது பயணம் மொத்தம் 22 நாள்கள் நீடித்தது. சுமார் 7,000 கி.மீ. வரை பயணம் செய்தேன். இந்தப் பயணத்தை ’இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, ’ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய அமைப்புகள் தற்போது அங்கீகரித்ததில் மிக்க மகிழ்ச்சி” என்கிறார் பாலா மணிகண்டன்.
திட்டமிடல் தேவை: லே போன்ற மலைப்பிரதேசத்துக்குப் பயணம் மேற்கொள்ளும்போது மின் பைக் பேட்டரியை சார்ஜ் செய்வதில் சிக்கல் ஏற்படும். அது மட்டுமல்ல, கரடு முரடான பாதைகளைக் கடக்க வேண்டியிருக்கும். இந்தச் சிக்கல்களை கடந்து சாதித்திருக்கிறார் பாலா. “இதுபோன்ற பயணங்களுக்கு மின் பைக் ஏதுவாக இருக்குமா என்கிற சந்தேகம் நிலவுகிறது. சரியான திட்டமிடல் இருந்தால் பயணம் சாத்தியமே” என்கிறார் பாலா.
“முதலில் எனது பயணத் திட்டம் குறித்து வாகனத் தயாரிப்பு நிறுவனத்திடம் சொன்னதும் தயக்கம் காட்டினர். இதுவரை லே போன்று நீண்ட தூர மலைப்பிரதேசத்துக்கு மின் பைக்கில் யாரும் சென்றதில்லை என்பதால் போகும் வழியில் ஏதேனும் சிக்கல் ஏற்படலாம் என்று எச்சரித்தனர். எனினும் எனக்கு நம்பிக்கை இருந்தது. அந்நிறுவனத்தின் உதவியுடன் மின் பைக்கில் பழுது ஏற்பட்டால் அதைச் சரி செய்வதற்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டேன்.
ஹெல்மெட், கிளவுஸ், ஆடைகள் எனப் பயணத்துக்கான ரைடிங் கியர்களை வாங்கினேன். போகும் வழியைச் சரியாகத் திட்டமிட்டேன். சென்னையிலிருந்து டெல்லி சென்று, அங்கிருந்து மனாலி, ஜிஸ்பா, சர்சு போன்ற பகுதிகளைக் கடந்து லே சென்றேன்” என்று தன்னுடைய பயண ஃபிளாஷ்பேக்கை விவரிக்கிறார் பாலா.
ஏன் மின் பைக்? - நாளொன்றுக்கு 250 - 300 கி.மீ. பயணம் செய்துவாகனத்தை சார்ஜ் செய்யும்போது ஓய்வெடுத்துகொண்டதாகச் சொல்கிறார் பாலா. “சென்னையில் இருந்து கிளம்பும்போதே மின் பைக் ஓட்டிகளுக்கென இந்திய அளவில் இயங்கும் வாட்ஸ்-அப் குழு ஒன்றில் சேர்ந்துவிட்டேன்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஓட்டுநர்கள் எப்போது எந்த உதவியானாலும் செய்வதாகச் சொன்னார்கள். அதுபோல, பயணம் சென்ற வழி எங்கும் வாகனத்தை சார்ஜ் செய்ய, உண்ண, உறங்க நண்பர்களின் பேருதவி எனக்குக் கிடைத்தது. முகம் தெரிந்தவர், தெரியாதவர் எனப் பலருடைய உதவியால் இப்பயணத்தை நிறைவு செய்ய முடிந்தது.
தினமும் காலையில் எனது பயணத்தைத் தொடங்கி மதியத்தில் சார்ஜ் ஏற்றுவேன். மீண்டும் மாலை கிளம்பி இரவு தங்குமிடத்தை அடைந்தவுடன் மீண்டும் சார்ஜ் ஏற்றுவேன். பெட்ரோல் பங்க், ஹோட்டல்கள், உள்ளூர் கடைகள் எனக் கிடைத்த இடத்திலெல்லாம் வாகனத்துக்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டேன்.
பெட்ரோல் வண்டியில் இந்தப் பயணத்தைக் மேற்கொண்டிருந்தால் குறைந்தபட்சம் ரூ. 28,000 செலவாகியிருக்கும். ஆனால், மின் பைக்கில் ரூ.5,000 மட்டுமே செலவாகும். தங்குமிடத்திலேயே சார்ஜ் செய்ததால், பெட்ரோலுக்கு செலவே இல்லை. செலவு குறைவு, நேரடியாக சுற்றுச்சூழல் மாசும் ஏற்படாது” என்று பிறருக்கும் வழிகாட்டுகிறார் பாலா.
ஒரு வேளை மின் பைக்கில் நெடுந்தூரம் பயணம் மேற்கொள்ள உங்களிடம் திட்டமிருக்கிறதா? எனில், உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்
# முழுமையான ஆய்வுக்குப் பிறகு பயணத்தை திட்டமிடுங்கள்.
# வழி எங்கும் நண்பர்கள் குழுவை ஒருங்கிணை யுங்கள் அல்லது சம்பந்தப்பட்ட நபர்களிடம் தேவையான தகவல்களை முன்கூட்டியே விசாரித்து கொள்ளுங்கள்.
# மலைப்பிரதேசம் போன்ற சாகச பயணம் மேற்கொள்ள பயிற்சி முக்கியம். முதலில் சிறிது தூரம் வரை சென்று பாருங்கள்.
#தேவையான ரைடிங் கியர்ஸை வாங்கிக் கொள்ளுங்கள்.
# உள்ளூர் மக்களின் உதவியை நாடத் தயங்காதீர்கள்.
# ஆபத்து நிறைந்த இடங்களில் இரவு நேரப் பயணத்தைத் தவிர்த்துவிடுங்கள்.