படிக்க வருகிறோம், பட்டினியாகத் திரும்புகிறோம்

படிக்க வருகிறோம், பட்டினியாகத் திரும்புகிறோம்
Updated on
2 min read

மிழ்நாட்டில் ஜனவரி 20 அன்று உயர்த்தப்பட்ட அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வை எதிர்த்து சென்னை, மதுரை, வேலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சாமானிய மக்களுடன் மாணவ சமூகமும் இந்தப் பேருந்துக் கட்டண உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர் கல்லூரி மாணவர்கள். அவர்களுடைய பாதிப்புகள் என்னென்ன என மாணவர்கள் இட்ட பட்டியல்:

த. இலக்கியன், பி.ஏ. சமூகவியல், 3-ம் ஆண்டு, புதுக் கல்லூரி, சென்னை.

கல்லூரி மாணவர்களின் ‘பஸ் பாஸ்’ இரண்டு பிரேக் இடங்களுக்குத்தான் அனுமதி அளிக்கும். ஆனால், அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் மூன்று பேருந்துகள் அல்லது ரயில், பேருந்து எனப் பயணம் செய்பவர்கள்தான். வண்டலூர், திருவள்ளூரிலிருந்தெல்லாம் வரும் மாணவர்கள் எங்கள் கல்லூரியில் இருக்கிறார்கள். இவர்களில் ரயில் பாஸ் வைத்திருக்கும் மாணவர்களிடம் பஸ் பாஸ் இருக்காது. அவர்கள் சென்ட்ரலில் இருந்தோ எழும்பூரிலிருந்தோ பேருந்தில்தான் கல்லூரிக்கு வர வேண்டும். பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு, அவர்களெல்லாம் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்திருக்கிறது.

அருளரசி, எம்.ஏ. ஆங்கில இலக்கியம், இரண்டாம் ஆண்டு, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி.

அரசின் பேருந்து வசதி, கல்லூரி வசதி போன்றவற்றால்தான் பெரும்பாலான வீடுகளில் பெண்களை உயர்கல்வி படிக்கவே அனுப்புகிறார்கள். ஆனால், இப்போது கல்வி தொடர்பான களப்பணிக்காகப் பயணிப்பது, நூலகங்களுக்குச் செல்வது போன்றவையெல்லாம் இந்தப் பேருந்துக் கட்டண உயர்வால் எங்களைப் போன்ற மாணவர்களுக்குக் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

எம். நந்தகுமார், எம்.ஏ. இதழியல், முதலாம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகம்.

இந்தக் கட்டண உயர்வுக்கு முன்னால் பெற்றோர்களிடம் ஒரு நாளுக்கு 50 ரூபாய் வாங்கி வந்தால், 40 ரூபாய் பேருந்துக் கட்டணச் செலவு போக மீதியிருக்கும் 10 ரூபாயில் ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போவேன். ஆனால், இப்போது ஒரு நாளுக்கு 100 ரூபாய் செலவாகிறது. எங்களுக்கு ‘பஸ் பாஸ்’ இன்னும் வரவில்லை. இந்தக் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற்றால் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

டி. ஹரிணி, பி.டெக் ஐ.டி, இரண்டாம் ஆண்டு, ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் டெக்னாலஜி, கழிப்பட்டூர்.

இந்தப் பேருந்துக் கட்டண உயர்வு அடித்தட்டு மக்களையும் எங்களையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. ஒரு நாளுக்குப் பேருந்துக் கட்டணச் செலவுக்கு 25 ரூபாய் கொடுத்துக்கொண்டிருந்த பெற்றோரிடம், திடீரென்று 50 ரூபாய் கேட்டால் அவர்கள் எங்கே போவார்கள்? கல்விச் செலவுக்கு மட்டுமல்லாமல் இப்போது அரசுப் பேருந்துச் செலவுகளுக்கும் தனியாகப் பெற்றோர்கள் திட்டமிட வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

மஞ்சு, எம்.ஏ. மனித வளம், முதலாம் ஆண்டு, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கலை & அறிவியல் கல்லூரி, சென்னை.

இந்தப் பேருந்துக் கட்டண உயர்வுக்குமுன், திருவொற்றியூலிருந்து பாரிமுனைக்குச் செல்வதற்கு ‘கிரீன்போர்ட்’டில் 9 ரூபாயும் ‘டீலக்ஸ்’ பேருந்தில் 13 ரூபாயும் சாதாரண ‘ஒயிட்போர்ட்’டில் 5 ரூபாயும்தான் கட்டணமாக இருந்தன. ஆனால், இப்போது இந்தக் கட்டணம் அப்படியே இருமடங்காக உயர்ந்திருக்கிறது. எங்களுடைய கல்லூரியில் முதுகலைப் படிப்புகள் தாமதமாகத் தொடங்கியதால் பெரும்பாலான மாணவர்கள் ‘பஸ் பாஸ்’ வாங்கவில்லை. ஒரு நாளில் பத்து ரூபாயில் கல்லூரிக்குச் சென்று வர முடிந்ததால் அதைப் பெரிதாக யாரும் முன்பு எடுத்துகொள்ளவில்லை.

ஆனால், இப்போது இந்தப் பேருந்து கட்டண உயர்வைச் சமாளிக்க முடியவில்லை. எங்களுக்குப் பெற்றோர்கள் தினமும் கொடுக்கும் ‘பாக்கெட் மணி’யில் பசித்தால் கல்லூரி கேன்டீனில் சென்று சாப்பிடுவோம். ஆனால், இந்தப் பேருந்துக் கட்டண உயர்வுக்குப் பிறகு, பெரும்பாலான மாணவர்கள் பட்டினிதான். பெற்றோர்களை இன்னும் எவ்வளவுதான் கஷ்டப்படுத்துவது என்ற குற்றவுணர்ச்சியைதான் இந்தப் பேருந்து கட்டண உயர்வு ஏற்படுத்தியிருக்கிறது.

வி. விஜய் ஸ்ரீநிவாஸ், பி.ஏ. இதழியல், மூன்றாம் ஆண்டு, சென்னை கிறித்துவக் கல்லூரி, தாம்பரம்.

இந்தப் பேருந்துக் கட்டண உயர்வைத் தவிர்க்க முடியாது என்ற கருத்தை ஏற்றுகொள்ளத்தான் வேண்டும். ஆனால், சமாளிக்க முடியாத அளவுக்குக் கடுமையாக உயர்த்தியிருப்பதில் நியாயமில்லை. பேருந்துக் கட்டணத்தைக் குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் படிப்படியாக உயர்த்திருக்கலாம். இந்தப் பேருந்துக் கட்டண உயர்வுக்குப் பிறகு, பெரும்பாலான மாணவர்கள் கேன்டீனில் சாப்பிடாமல் பசியுடன் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். இந்தப் பேருந்து கட்டண உயர்வு மாணவர்களின் நலனுக்கு எதிரானதாக இருக்கிறது.

அருணாச்சலேஸ்வரன், விஸ்காம், இரண்டாம் ஆண்டு, வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை

எனக்குச் சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை. வாரயிறுதியில் சென்னையிலிருந்து பெற்றோரைப் பார்க்க ஊருக்குச் செல்வேன். முன்னாடி 115 ரூபாயாக இருந்த பேருந்துக் கட்டணம், இப்போது 190 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இனி வாராவாரம் ஊருக்குச் செல்வதை நினைத்துபார்க்க முடியாது. இந்தக் கட்டண உயர்வை அரசு 10 சதவீதமோ 15 சதவீதமோ உயர்த்தியிருந்தால் பரவாயில்லை. ஒரேடியாக 100 சதவீதம் உயர்த்தியிருக்கிறது. இதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களைப் போன்று வெளியூரிலிருந்து சென்னை வந்து தங்கி படிக்கும் மாணவர்களின் நிலைமை இந்தக் கட்டண உயர்வுக்குப் பிறகு கூடுதலாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in