

பல திரைப்பட ஸ்டூடியோக்களைக் கொண்ட சென்னை மாநகர், தென்னிந்திய சினிமாவின் தலைமையகமாக இருந்தது. தற்போது விஷுவல் எஃபெக்ட்ஸ் எனப்படும் வி.எஃப்.எக்ஸ் பணிகளுக்காகவும் முக்கியத்துவம் பெற்றுவருகிறது சென்னை. ‘லியோ’ படத்திலும், ‘அயலான்’ திரைப்பட டிரெய்லரிலும் கவனம் ஈர்த்த வி.எஃப்.எக்ஸ். பணிகளே இதற்குச் சான்று. இப்படங்களுக்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்கொண்ட குழுவைச் சேர்ந்தவர், 32 வயதான அரவிந்த் நாகா.
அசுர வளர்ச்சி: தமிழில் வெளியான ‘தெறி’, ‘மெர்சல்’, ‘தெகிடி’ போன்ற திரைப்படங்களின் ‘டைட்டில் அனிமேஷன்’ பணிகளையும் பாராட்டுகளையும் விருதுகளையும் அள்ளிய ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளையும் மேற்கொண்டவர்தான் சென்னையைச் சேர்ந்த அரவிந்த். கடந்த பத்தாண்டுகளில் சர்வதேசத் தரத்துடன் ஒப்பிடும் அளவுக்கு இந்தியாவில் விஷுவல் எஃபெக்ட்ஸ் துறை பெரும் வளர்ச்சி அடைந்துள்ளதாகச் சொல்கிறார் அவர்.
“திரையில் தோன்றும் காட்சிகளை சில மென்பொருள்களின் உதவியுடன் மெருகேற்றிக் காட்டுவதுதான் விஷுவல் எஃபெக்ட்ஸின் பணி. தேவையற்ற ஒரு பொருளைத் திரையை விட்டு நீக்குவதும், தேவைப்படும் ஒரு பொருளை, விலங்கை, நபரைத் திரையில் சேர்ப்பதும், வி.எஃப்.எக்ஸில் சாத்தியம். ‘ஃபேன்டசி’ எனப்படும் கற்பனை உலகைச் சேர்ந்த கதாபாத்திரங்கள், பொருள்களைத் திரையில் கொண்டு வருவதும் வி.எஃப்.எக்ஸின் பணி.
இது கிராபிக்ஸ் வேலைப்பாடுதான் என்றாலும் பார்ப்பதற்கு கிராபிக்ஸ் போன்று இல்லாமல் உண்மைத்தன்மைக்கு நெருக்கமாக வி.எஃப்.எக்ஸ். காட்சிகளை உருவாக்க வேண்டும். சவாலான இந்த வேலைகளைத் திறம்படச் செய்யும் வி.எஃப்.எக்ஸ். நிறுவனங்கள் இந்தியாவில் வந்துவிட்டன. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரிய பட்ஜெட் படங்களுக்காக மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தேவைப்பட்ட வி.எஃப்.எக்ஸ். பணிகள், தற்போது பெரும்பாலான படங்களில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகிறது” என்கிறார் அரவிந்த் நாகா.
தரமான வி.எஃப்.எக்ஸ்: சென்னையைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஃபண்டம் எஃப்.எக்ஸ். நிறுவனம் ‘லியோ’, ‘அயலான்’ படங்களுக்கு வி.எஃப்.எக்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளது. இப்படங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வி.எஃப்.எக்ஸ். பணிகள், தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத அளவுக்கு தரமாக இருக்குமென உறுதியாகச் சொல்கிறார் அரவிந்த்.
“இந்தப் படங்கள் வெளியான பிறகு தமிழ் சினிமாவில் வி.எஃப்.எக்ஸ் துறைக்குத் திருப்புமுனையாக இருக்கும். கிராபிக்ஸ் வேலைப்பாடு அதிகம் கொண்ட கதைகளை வெற்றிகரமாகப் படமாக்கலாம் என்கிற நம்பிக்கையை, வி.எஃப்.எக்ஸைப் பயன்படுத்தாத மற்ற இயக்குநர்களும் பெறுவார்கள்.
இதுவே இப்படங்களின் வெற்றியாகவும் அமையும். வி.எஃப்.எக்ஸ். வேலைப்பாடு என்றாலே அதிக பொருள் செலவாகும் என்பது உண்மைதான். என்றாலும், திறமையான வி.எஃப்.எக்ஸ். கலைஞர்களின் வருகை அதிகரிக்கும்போதும், முறையான திட்டமிடலுடன் பணியாற்றும்போதும் இதற்காகும் பொருள் செலவைக் குறைக்க முடியும். படப்பிடிப்புக்கு முன்பே இயக்குநரும், வி.எப்ஃ.எக்ஸ் மேற்பார்வையாளரும் சேர்ந்து படத்துக்கு தேவையானதை திட்டமிட்டு பணியாற்றினால், கிராபிக்ஸ் வேலைகளைச் சுலபமாகவும், தரமாகவும் மேற்கொள்ளலாம்.
இனி வரும் காலத்தில் ஹாலிவுட்டுக்கு நிகரான வி.எஃப்.எக்ஸ் பணிகள் அடங்கிய திரைப்படங்களை உள்ளூரிலேயே உருவாக்க முடியும் என்கிற இலக்கை நோக்கியே இப்போது பயணப்படுகிறோம்” என்று நம்பிக்கை பொங்கப் பேசுகிறார் அரவிந்த்.
இளைஞர் படை: தென்னிந்தியாவை மையப்படுத்தி இயங்கும் பெரும்பாலான வி.எஃப்.எக்ஸ். நிறுவனங்களில் இளைஞர்களே பணியாற்றுகின்றனர். ஏற்கெனவே இத்துறை சார்ந்த வேலைகளுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறார் அரவிந்த்.
“வி.எஃப்.எக்ஸ். தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும். எனவே, இத்துறையில் பணியாற்ற ஆர்வம் இருப்பவர்கள், வி.எஃப்.எக்ஸ். தொடர்பான அடிப்படை விஷயங்களை முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இணையதளத்தில் வி.எஃப்.எக்ஸ். வேலைகள் குறித்த அறிமுகக் காணொளிகள் ஏராளம் இருக்கின்றன.
இணையவழிப் பயிலரங்குகளும் நடத்தப்படுகின்றன. இதில் தொடங்கிப் படிப்படியாக வி.எஃப்.எக்ஸ். பணிகளைக் கற்றுகொள்ளலாம். அடுத்ததாக, கிராபிக்ஸ் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும் திரைப்படங்களைப் பார்ப்பதன் மூலம் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான தேவையை, பயன்படுத்தப்பட்ட முறைகளை ஆராய்ந்து அறிந்துக்கொள்ளலாம்.
வி.எஃப்.எக்ஸ். நிறுவனங்களில் மாணவர்கள் படித்துவரும் காலத்திலேயே பயிற்சி பெறலாம். இந்த வசதியை சென்னையில் உள்ள பெரும்பாலான வி.எஃப்.எக்ஸ். நிறுவனங்கள் அளிக்கின்றன. 3டி மாடலிங், கம்போஸ்டிங், கேரக்டர் அனிமேஷன் போன்று வி.எஃப்.எக்ஸின் குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்று, திரைப்படங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் வாய்ப்புகளைத் தேடலாம். வேலை வாய்ப்புகள் இந்தத் துறையில் கொட்டிக் கிடக்கின்றன. திறம்பட பணியாற்றுபவர்களை இத்துறை நிச்சயம் அரவணைத்துக்கொள்ளும்” என்கிறார் அரவிந்த்.