புதிய புத்தாண்டுக் கொண்டாட்டம்!
பு
த்தாண்டுக் கொண்டாட்டங்களின் வடிவங்கள் ஒவ்வோர் ஆண்டும் புதுமையாக மாறிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், மெட்ரோ நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் புத்தாண்டை மலைகளிலும் கடற்கரைகளிலும் வரவேற்றிருக்கிறார்கள். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பிரபலமாக இருக்கும் புத்தாண்டு ‘கேம்ப் ஃபெஸ்ட்’ (Camp Fest) கலாச்சாரம் இப்போது தமிழ்நாட்டிலும் அறிமுகமாகியிருக்கிறது.
சென்னையைச் சேர்ந்த, சாகசப் பயணங்களை ஒருங்கிணைக்கும் பயண நிறுவனமான ‘டெண்ட் அண்ட் டிரக்’ (Tent N Trek), இந்தப் புத்தாண்டில் ‘கேம்ப் ஃபெஸ்ட்’ நிகழ்வுகளை ஏலகிரி, மூணாறு, மரக்காணம் கடற்கரை ஆகிய மூன்று இடங்களில் ஒருங்கிணைத்தது.
இந்தக் கொண்டாட்டங்களில் இளைஞர்கள், குடும்பங்கள், தனிப் பயணிகள் என எல்லாத் தரப்பினரும் கலந்துகொண்டனர். பங்கேற்ற அனைவரும் ஏலகிரி, மூணாறு மலைகளிலும் மரக்காணம் கடற்கரையிலும் முகாம் அமைத்துக் கூடாரங்களில் புத்தாண்டை வரவேற்றனர்.
“சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் கோவா, ஹைதராபாத், கோயம்புத்தூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். கிளப் பார்ட்டிகளில் மட்டும் புத்தாண்டை வரவேற்கும் போக்கு இப்போது மாறிவருகிறது. இன்று இளைஞர்கள் இயற்கையின் அரவணைப்பில் சூழலுக்கும் உடல்நலனுக்கும் பாதிப்பில்லாத வகையில் புத்தாண்டைக் கொண்டாட விரும்புகிறார்கள். அதுதான், புத்தாண்டு ‘கேம்ப் ஃபெஸ்ட்’ நிகழ்வுகளுக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தது” என்கிறார் ‘டெண்ட் அண்ட் டிரக்’ நிறுவனர் எஸ்.ஆர். மனோஜ் சூர்யா.
இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முழுமையாகச் சூழலைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதைத் தொடக்கத்திலிருந்தே கடைப்பிடித்திருக்கிறார்கள். மதுபானம், புகைபிடித்தல் போன்றவற்றுக்கு அனுமதியில்லை, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் முகாம்களில் குப்பைகளாக விட்டுச்செல்லக் கூடாது என்பன போன்ற விதிமுறைகளைப் பதிவுசெய்யும்போதே இந்தக் குழுவினர் பயணிகளிடம் தெரிவித்துவிட்டார்கள்.
“டிசம்பர் 31 காலை தொடங்கி ஜனவரி 1 மாலைவரை நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ‘கேம்ப்ஃபயர்’, லைவ் இசைக் குழு நிகழ்ச்சி, நடனம் ஆகியவற்றில் ஈடுபட்ட பயணிகள் மலைகளிலும் கடற்கரையிலும் உற்சாகமாகப் புத்தாண்டை வரவேற்றனர். அத்துடன், சாகசப் பிரியர்களுக்கான விளையாட்டுகளையும் ஒருங்கிணைத்தோம். இனிவரப்போகும் காலங்களில் இந்த முகாம் கொண்டாட்டங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று உற்சாகமாகச் சொல்கிறார் மனோஜ் சூர்யா.
