

ப
ணத்தை வாங்கிக்கொண்டு நடனம் கற்றுத் தர இன்று ஏராளமான நடனப் பள்ளிகள் வந்துவிட்டன. ஆனால், திருச்சியைச் சேர்ந்த இளைஞர் விநோத் இலவசமாக நடனம் கற்றுக்கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இவர் நடனம் கற்றுத்தருவது ‘தெய்வக் குழந்தைகள்’ என்றழைக்கப்படும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு!
தனது ஒரு வயதில் தந்தையை இழந்த விநோத், குடும்ப வறுமை காரணமாக 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பும் இவர் தலை மேலே ஏறியது. இதனால் 12 வயது முதல் ஹோட்டல், கட்டிடக் கூலி, பெயின்டர் என விநோத் செய்யாத வேலைகளே இல்லை. இப்படி வேலைகளைச் செய்தாலும், சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீதும் அவருக்கு அலாதி விருப்பம். எங்கேயாவது இசை ஒலித்தாலே, ஆட ஆரம்பித்து விடுவார். முறையாக நடனம் கற்காவிட்டாலும் வெஸ்டர்ன், ஹிப்-ஹாப், செமி கிளாசிகல், ஃபோக் என எல்லா வகை நடனங்களும் இவருக்கு அத்துப்படி.
விடாமுயற்சியால் நடன நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட விநோத், பகுதி நேர நடன ஆசிரியராகவும் தற்போது பணியாற்றிவருகிறார். அதோடு திருச்சியில் உள்ள சிறப்புப் பள்ளிக் குழந்தைகளுக்கும் இலவசமாக நடனப் பயிற்சி அளித்துவருகிறார். சிறப்புப் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக நடனம் கற்றுத் தர முடிவு செய்தது ஏன் என்று அவரிடம் கேட்டோம்.
“பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடனப் பயிற்சி அளிக்கத் தொடங்கிய பிறகே எனது பொருளாதார நிலை உயர்ந்தது. மாற்றுத்திறனாளி குழந்தைகளும் உயர வேண்டும் என்பதற்காகவே நடனப் பயிற்சியை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். சிறப்புக் குழந்தைகளுக்கு நடனப் பயிற்சி அளிப்பது சவாலானது. முதலில் அவர்களுடன் நன்றாகப் பழகிய பிறகே நடன அசைவுகளை அவர்களுக்குக் கற்றுத் தர முடிந்தது. அப்படி ஒவ்வொரு விஷயங்களாக கற்றுக் கொடுத்தேன். அதைப் புரிந்துகொண்டு ஆடியதைப் பார்க்கிறபோது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கு நடனம் கற்றுத்தருகிற போது மட்டுமே மனநிறைவு கிடைக்கிறது. தற்போது தினமும் ஏதாவது ஒரு சிறப்பு பள்ளியில்தான் என்னுடைய பொழுது கழிகிறது” என்கிறார் விநோத்.
தற்போது திருச்சியில் உள்ள பல சிறப்புப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு வாரத்தின் ஏழு நாட்களும் சுழற்சி முறையில் பயிற்சி அளிக்கிறார் விநோத். பயிற்சியுடன் நிறுத்தாமல் அவர்களை மேடையில் ஆட வைத்தும் அழகு பார்க்கிறார். அண்மையில் சிறப்புக் குழந்தைகளை ஒரு நிகழ்ச்சியில் மேடையேற்றியது பெரும் வரவேற்பையும் பெற்றது.
“நன்றாக நடனம் ஆடுபவர்களுக்கே மேடை கிடைப்பதில்லை. அதை உணர்ந்ததால்தான், சிறப்புப் பள்ளிக் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். அவர்களை மேடையேற்றி ஆட வைக்கிறேன். அடுத்த கட்டமாக அடுத்த மாதம் சென்னை லயோலா கல்லூரியில் சிறப்புப் பள்ளிக் குழந்தைகளின் நடனத்தை நடத்த ஏற்பாடு செய்துவருகிறேன்” என்கிறார் விநோத்.
குழந்தைத் தொழிலாளியாக இருந்து, இன்று மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் மேம்பாட்டுக்காக நல்ல முயற்சிகளை செய்துவரும் விநோத்தை நாமும் வாழ்த்துவோம்!